Published : 11 Feb 2015 03:43 PM
Last Updated : 11 Feb 2015 03:43 PM

ஐக்கிய ஜனதா தள சட்டப்பேரவைத் தலைவர் நிதிஷ்குமார் தேர்வுக்கு உயர் நீதிமன்றம் தடை

ஐக்கிய ஜனதா தள சட்டப்பேரவைத் தலைவராக நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டதற்கு பாட்னா உயர் நீதிமன்றம் நேற்று தடை விதித்தது.

பிஹார் அரசியலில் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சிக்கும் ஆளும் ஐக்கிய ஜனதாதள கட்சித் தலைமைக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இதன்காரணமாக முதல்வர் மாஞ்சி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

மேலும் கட்சியின் மூத்த தலைவர் நிதிஷ்குமாரை மீண்டும் முதல்வராக்க ஏதுவாக ஐக்கிய ஜனதா தளத்தின் சட்டப்பேரவைத் தலைவராக அண்மையில் அவர் தேர்வு செய்யப்பட்டார். அவரது நியமனத்துக்கு சட்டப்பேரவை செயலாளர் ஹரே ராம் முகியா ஒப்புதல் அளித்தார். இதுதொடர்பான அதிகாரபூர்வ கடிதம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நடைமுறைகளைத் தொடர்ந்து கடந்த 9-ம் தேதி ஆளுநர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்த நிதிஷ்குமார் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த 130 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக ஆளுநரிடம் அவர் கடிதம் அளித்துள்ளார்.

ஆனால் ஆளுநர் ஆட்சி அமைக்க அழைக்காததால் தனக்கு ஆதரவளிக்கும் 130 எம்.எல்.ஏ.க்களுடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்திக்க நிதிஷ் குமார் நேற்று முன்தினம் டெல்லி சென்றார். குடியரசுத் தலைவரை நேற்று 130 எம்.எல்.ஏ.க்களுடன் அவர் சந்தித்து பேசினார்.

இந்நிலையில் நிதிஷ்குமாருக்கு எதிராக பிஹார் உயர் நீதிமன்றம் நேற்று புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

மாஞ்சி ஆதரவாளர்கள் வழக்கு

ஐக்கிய ஜனதா தள தலைவராக நிதிஷ் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து முதல்வர் மாஞ்சியின் ஆதரவாளர்கள் பாட்னா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி நரசிம்ம ரெட்டி, நீதிபதிகள் விகாஸ் ஜெயின் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஐக்கிய ஜனதா தள சட்டப்பேரவைத் தலைவராக நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டதற்கு தடை விதித்தனர். இதுதொடர்பாக சட்டப்பேரவைச் செயலாளர் வெளியிட்ட அறிவிப்பு குறித்து ஆளுநர் இறுதி முடிவெடுக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித் தனர்.

இந்த விவகாரம் குறித்து சட்ட நிபுணர்கள் கூறியபோது, உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி பிஹார் அரசியல் நிலவரம் குறித்து இனிமேல் ஆளுநர் மட்டுமே முடிவு எடுக்க முடியும் என்று கூறியுள்ளனர்.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவு நிதிஷ்குமாருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சட்டநிபுணர்களுடன் ஐக்கிய ஜனதா தள தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x