Published : 26 Feb 2015 09:23 AM
Last Updated : 26 Feb 2015 09:23 AM

கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் பாஜகவின் அஸ்திவாரம்: ஜி.ராமகிருஷ்ணன் கருத்து

ஆர்.எஸ்.எஸ். மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் பாஜகவின் அஸ்திவாரங்களாக இருக்கின்றன என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது மாநில மாநாடு நேற்று தொடங்கியது. இதில், ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:

மத்தியில் அதிகாரத்தில் இருக்கிற பாஜகவுக்கு ஆர்.எஸ்.எஸ். மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் அஸ்திவாரங்களாக உள்ளன. முந்தைய காங்கிரஸின் கொள்கை களையே பாஜக தீவிரமாக அமலாக்கி வருகிறது.

காங்கிரஸுக்கு மாற்று பாஜக அல்ல என்பது நிரூபணம் ஆகியுள்ளது. நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிலம் கையகப்படுத்தும் சட்டம், காப்பீடு, நிலக்கரி சுரங்கம் உள்ளிட்ட 8 அவசரச் சட்டங்களை நிறைவேற்ற பாஜக முயற்சிக்கிறது.

தற்போது டெல்லியில் நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிராக இடதுசாரிகள் போராட்டம் நடத்திவருகிறோம். இந்தப் போராட்டத்தில் அண்ணா ஹசாரே அமைப்பைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றுள்ளனர். உறுதிமிக்க போராட்டத்தை நடத்துவோம்.

தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்கின்றன. இந்த இரண்டு கட்சிகளும் மத்திய அரசின் அதே கொள்கைகளைத் தொடர்ந்து அமலாக்கிக் கொண்டிருக்கின்றன.

புதிய பொருளாதாரக் கொள்கையின் அமலாக்கத்துக்குப் பிறகு தமிழகத்தில் விவசாயம், தொழில் என அனைத்துத் துறைகளும் பெரும் சரிவை சந்தித்து வருகிறது.

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் எண்ணிக்கை 75 லட்சத்தில் இருந்து 89 லட்சமாக உயர்ந்துள்ளது. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 97 லட்சத்தை தொட்டுள்ளது. திமுக, அதிமுக கட்சிகளின் தொடர்ச்சியான ஆட்சியில் ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்விவரை அனைத்தும் தனியார் மயமாகிக்கொண்டிருக்கிறது. அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுக்கொண்டிருக்கிறது. மேலும் 2 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் 20க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர். எந் நேரமும் இந்த பள்ளிகள் மூடப்படும் அபாயம் உள்ளது. இதன் விளைவாக விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழை, எளிய மக்களின் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இந்த அதிருப்தியை சமாளிக்க சில நலத் திட்டங்களை கொண்டு சரிகட்ட முயற்சிக்கிறார்கள் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x