Published : 25 Feb 2015 08:35 AM
Last Updated : 25 Feb 2015 08:35 AM

சட்டப்பேரவையில் தேமுதிகவுக்கு ஆதரவு: திமுக, காங்கிரஸுக்கு விஜயகாந்த் நன்றி

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தேமுதிக எம்எல்ஏக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 19-ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் தேமுதிக எதிர்க்கட்சி துணைத்தலைவர் அழகாபுரம் மோகன்ராஜ் பேசினார். அவரது பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவரை பேரவையிலிருந்து நீக்க வேண்டும் என்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

அதை ஏற்றுக்கொண்ட பேரவைத் தலைவர், மோகன்ராஜுடன் தேமுதிக எம்எல்ஏக்கள் அனைவரையும் வெளியேற்ற உத்தரவிட்டார். மேலும், நடப்புக் கூட்டத்தொடர் முழுவதும் தேமுதிக உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதையும் பேரவைத் தலைவர் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் ஜனநாயக ரீதியில் மக்களின் கோரிக்கைகளை எழுப்ப முயலும்போதெல்லாம் அமைச்சர்கள் இடைமறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேசவிடாமல் தடுத்து ஜனநாயக படுகொலையில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். மக்கள் நலனுக்காக தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என தேமுதிக எம்எல்ஏக்களுக்கு ஆதரவாக சட்டபேரவையில் குரல் கொடுத்ததோடு, வெளிநடப்பிலும் ஈடுபட்ட திமுக, காங்கிரஸ், புதிய தமிழகம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் விஜயகாந்த் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x