Published : 26 Jan 2015 09:21 AM
Last Updated : 26 Jan 2015 09:21 AM

குதூகலிக்க வைக்கும் குடியரசு தின கொண்டாட்டம்

பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து நம் நாடு சுதந்திரம் பெற்றதைத்தான் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15ம் நாள் சுதந்திரத் திருநாளாகக் கொண்டாடுகிறோமே, ஜனவரி 26ல் குடியரசு தினம் என்றொரு விழா ஏன் என்ற கேள்வி சிலர் மனங்களில் எழக்கூடும்.

எத்தனையோ மன்னர்களால் ஆளப்பட்ட நாம், ‘இறையாண்மைமிக்க சமத்துவ மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு’ நாடாக மாறிவிட்டோம் என்பதை நமக்குள் நினைவுபடுத்திக்கொள்ளவும், உலக நாடுகளுக்குப் பறைசாற்றவும் தான் ஆண்டுதோறும் இந்தக் குடியரசு தின விழாவைக் கொண்டாடுகிறோம்.

இது வெறும் கொண்டாட்டமாக இல்லாமல் நம்முடைய சிறப்புகளையும் பலங்களையும் நாட்டு மக்களுக்கு எடுத்துக்காட்டி அவர்களை உற்சாகப்படுத்தவும், வெளிநாட்டினர் நம்மைப் புரிந்துகொள்ளவும் தான் குடியரசு தினத்தன்று ராணுவத்தின் அணிவகுப்பும் பிற துறைகளின் அணி வகுப்புகளும் இடம்பெறுகின்றன.

உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு, மக்கள் தொகையில் உலகிலேயே இரண்டாவது இடத்தில் இருக்கும் நாடு என்ற சிறப்புகளுடன் பல்வேறு மொழி, மத, இன, கலாச்சார மக்களைக் கொண்ட புராதனமான நாடு இந்தியா என்பதை உலகோர் உணர இந்த குடியரசு தின விழா வாய்ப்பு தருகிறது.

அரசியல் சட்ட ஏற்பு நாள்

உலகிலேயே மிக நீண்ட, எழுதப்பட்ட அரசியல் சட்டத்தைக் கொண்ட நாடு இந்தியா. அந்த அரசியல் சட்டம் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளையே குடியரசு தினமாகக் கொண்டாடுகிறோம். இந்தியாவுக்கு பூரண சுயராஜ்யம் வேண்டும் என்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி முதல் முறையாக 1930 ஜனவரி 26-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றியது.

அதன் பிறகு சுதந்திரப் போராட்டம் வீறுகொண்டது. அண்ணல் மகாத்மா காந்தியின் சீரிய தலைமையில் சத்தியாகிரகப் போராட்டங்கள் மூலம் சாத்வீகமாக, வன்முறை சிறிதும் கலவாத வழிமுறைகளில் சுதந்திரப் போராட்டம் நடைபெற்றது. இறுதியில் பிரிட்டிஷ் அரசு தனது தோல்வியை ஒப்புக்கொண்டு இந்தியாவை விட்டு வெளியேறியது.

இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்ததும், இந்தியாவின் சமூக, கலாச்சார, அரசியல் சூழலுக்கேற்ப, ‘எழுதப்பட்ட அரசியல் சட்டம்’ தேவை என்று உணரப்பட்டதால் ‘அரசியல் சட்ட நிர்ணய சபை’ ஏற்படுத்தப்பட்டது. அண்ணல் அம்பேத்கர் தலைமையில் அந்த அரும்பணி நிறைவேறியது. 1949 நவம்பர் 26-ம் தேதி புதிய அரசியல் சட்டம் இயற்றி முடிக்கப்பட்டு தீர்மானம் மூலம் ஏற்கப்பட்டது. ஆனால், 1950 ஜனவரி 26-ம் தேதிதான் அது அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டது. அன்றுதான் இந்தியா அதிகாரப்பூர்வமாக ‘குடியரசு’ நாடானது. மக்களால், மக்களே மக்களை ஆளும்நாடுதான் குடியரசு நாடு.

இங்கு மன்னர், சக்ரவர்த்தி என்று எவருமில்லை. அதைத்தான் ஆண்டு தோறும் கொண்டாடி வருகிறோம். ஆண்டுதோறும் ஜனவரி 26 குடியரசு தின அணிவகுப்பு மரியாதையும் கலை நிகழ்ச்சிகளும், மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் டெல்லி ராஜபாட்டையில் ஊர்வலமாக வரும். மத்திய, மாநில போலீஸ் படைகள், தீரச் செயல்களுக்காக விருது பெறும் சிறார்கள் என்று பலரும் அந்த அணிவகுப்பில் வருவார்கள்.

முப்படைகளின் ஆள் பலம், ஆயுத பலம் என்னவென்று அந்தப் பேரணி கோடிட்டுக்காட்டும். விமானப் படையினரின் வான் சாகசங்களும் இடம் பெறும். நாட்டின் புதிய பொறியியல், தொழில்நுட்ப சாதனைகள், வேளாண்துறை சாதனைகள், தொழில்துறை சாதனைகள் போன்றவை அலங்கார ஊர்திகள் வாயிலாக வெளிக்காட்டப்படும். அரசின் பல்வேறு நலத்திட்டங்கள், சாதனைகளும் காட்சியில் இடம்பெறும். கலாச் சாரத்தைப் பறைசாற்றும் நடனங்கள், காட்சிகள் இடம் பெறும்.

ஜவான்களுக்கு பிரதமர் அஞ்சலி

நாட்டைக்காக்க பல்வேறு சந்தர்ப்பங்களில் போரிலும் பிற சமயங்களிலும் உயிர்த்தியாகம் செய்த முப்படை வீரர்களின் நினைவாக, அமர் ஜவான் ஜோதியில் பிரதமர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார். பிறகு 21 பீரங்கிகள் முழங்க தேசியக் கொடியை குடியரசுத் தலைவர் ஏற்றி வைப்பார். தேசிய கீதம் அப்போது இசைக்கப்படும். பிறகு அணிவகுப்பு தொடங்கும். குடியரசுத் தலைவருடன் வெளிநாட்டுத் தலைவர் ஒருவர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அணிவகுப்பைப் பார்வையிட்டு முப்படையினர் மற்றும் சிறப்புப் படையினரின் மரியாதையை ஏற்றுக்கொள்வார்.

இந்த ஆண்டு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பங்கேற்கிறார். அமெரிக்க அதிபர் ஒருவர் இந்தியக் குடியரசு தின விழாவில் பங்கேற்பது வரலாற்றில் இதுவே முதல் முறை. குடியரசு தின அணிவகுப்பு தொலைக்காட்சி மூலம் வர்ணனைகளுடன் நேரலையாக ஒளிபரப்பப்படும்.

என்.சி.சி. அணிவகுப்பு

குடியரசு தினத்துக்கு மறுநாள் தேசிய மாணவர் படையினரின் வண்ணமிகு அணிவகுப்பைப் பார்வையிட்டு அவர்களுடைய மரியாதையைப் பிரதமர் ஏற்றுக்கொள்வார். இது இரண்டாம் நாள் நிகழ்ச்சி. குடியரசு தினத்துக்கு 2 நாள் முன்னதாகவே ‘லோக் தரங்’ என்ற கலாச்சார நிகழ்ச்சி தொடங்கும். இது 29ம் தேதி வரை தொடரும். நாட்டின் வெவ் வேறு பகுதிகளைச் சேர்ந்த கிராமிய கலாசார நிகழ்ச்சிகளுக்கு இதில் முக்கியத்துவம் தரப்படும்.

ஜனவரி 26 தொடங்கி 29ம் தேதி வரை டெல்லியில் உள்ள அனைத்து முக்கிய அரசு கட்டடிங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். 29-ம் தேதி ராணுவத்தின் இசைக் குழுவினர் கூட்டாக அளிக்கும் ‘படைவீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி’ நடைபெறும். ராணுவ இசைக் குழுவினர் தங்களுடைய இசைத் திறனையும் நாட்டுப் பற்றையும் அப்போது வெளிப்படுத்துவர். அன்றைய தினம் மாலை 6 மணிக்கு தேசியக் கொடி உரிய மரியாதைகளுடன் கீழிறக்கப்பட்டு குடியரசு தின விழா முடித்துவைக்கப்படும்.

அதற்கு முன்னர் “சாரே ஜஹான் சே அச்சா” என்ற தேச பக்திப் பாடல் ராணுவக் குழுவினரால் இசைக்கப்படும். குடியரசு தின அணிவகுப்பை வெளிநாடுகளின் தூதர்கள், இந்திய அரசின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், திரைப்பட நட்சத்திரங்கள், கலையுலக நட்சத்திரங்கள், பத்திரிகையாளர்கள், தன்னார்வத் தொண்டர்கள், பேராசிரியர்கள், அறிவியல் அறிஞர்கள், தொழிலதிபர்கள், வேளாண் பெருமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் பார்வையிட்டு பெருமிதம் கொள்வார்கள். வீரதீர சாகசங்களுக்காக விருதுபெறும் சிறார்கள் யானைமீது அம்பாரியில் ஏற்றி ஊர்வலமாக அழைத்து வரப்படுவார்கள்.

இதுவரை பங்கேற்ற வெளிநாட்டுத் தலைவர்கள்

குடியரசு தின அணிவகுப்பைப் பார்வையிட்ட வெளிநாட்டுத் தலைவர்கள் பட்டியல்:

1950 இந்தோனேசிய அதிபர் சுகர்ணோ,
1954 – பூடான் மன்னர் ஜிக்மே டோர்ஜி வாங்சுக்.
1955 பாகிஸ்தான் கவர்னர் ஜெனரல் மாலிக் குலாம் முகம்மது,
1958 சீன மார்ஷல் யீ ஜியான்யிங்
1960 சோவியத் யூனியன் அதிபர் கிளிமெண்ட் வோரோஷிலாவ்.
1961 பிரிட்டன் மகாராணி எலிசபெத்.
1963 கம்போடிய மன்னர் நரோத்தம் சிகானுக்.
1965 பாகிஸ்தான் வேளாண், உணவுத் துறை அமைச்சர் அப்துல் ஹமீத்.
1968 சோவியத் யூனியன் பிரதமர் அலெக்சி கோசிஜின் , யூகோஸ்லாவியா அதிபர் ஜோசப் டிட்டோ.
1969 பல்கேரிய பிரதமர் தோடோர் ஷிவகோவ்.
1971 தான்சானியா அதிபர் ஜூலியஸ் நைரேரே.
1972 மொரீஷியஸ் பிரதமர் சிவசாகர் ராம்குலம்.
1973 ஜைரே அதிபர் மொபுடு சேசே சேகோ.
1974, யூகோஸ்லாவியா அதிபர் ஜோசப் டிட்டோ, இலங்கை பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக.
1975 ஜாம்பியா அதிபர் கென்னத் கௌண்டா
1976 பிரான்ஸ் பிரதமர் ஜாக்கஸ் சிராக்.
1977 போலந்து கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எட்வர்ட் கிரெக்.
1978 அயர்லாந்து அதிபர் பேட்ரிக் ஹில்லெரி.
1979 ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் பிரேசர்.
1980 பிரான்ஸ் அதிபர் வலேரி கிஸ்கார்ட் டி எஸ்டெய்ங்.
1981 மெக்ஸிகோ அதிபர் ஜோஸ் லோபஸ் போர்டில்லோ.
1982 ஸ்பெயின் மன்னர் ஜுவான் கார்லோஸ்.
1983 நைஜீரிய அதிபர் ஷேஹு ஷாகரி,
1984 பூடான் மன்னர் ஜிக்மே சிங்யே வாங்சுக்.
1985 அர்ஜென்டினா அதிபர் ரவுல் அல்ஃபோன்சின்.
1986 கிரீஸ் பிரதமர் ஆண்ட்ரியா பாப்பாண்ட்ரூ.
1987 – பெரு அதிபர் ஆலன் கார்சியா.
1988 இலங்கை அதிபர் ஜூனியஸ் ஜெயவர்த்தனே.
1989 வியட்நாம் பொதுச் செயலர் குயான் வான் லின்.
1990 மொரீஷியஸ் பிரதமர் அனிருத் ஜெகன்னாத்.
1991 மாலத்தீவுகள் அதிபர் மம்மூன் அப்துல் கய்யூம்.
1992 போர்ச்சுகல் அதிபர் மரியோ சோரஸ்.
1993 பிரிட்டன் பிரதமர் ஜான் மேஜர்.
1994 சிங்கப்பூர் பிரதமர் கோ சோக் தாங்.
1995 தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலா.
1996 பிரேசில் அதிபர் பெர்னாண்டோ ஹென்ரிக் கார்டோசோ.
1997 டிரினாட் டொபாகோ பிரதமர் வாசுதேவ் பாண்டே.
1998 பிரான்ஸ் அதிபர் ஜாகஸ் சிராக்.
1999 நோபாள மன்னர் வீரேந்திரா வீர் விக்ரம் ஷா தேவ்.
2000 நைஜீரிய அதிபர் ஒலுசெகன் ஒபசாஞ்சோ.
2001 அல்ஜீரிய அதிபர் அப்துல் அஜீஸ் போடிஃப்ளிகா.
2002 மொரீஷியஸ் அதிபர் காசம் உதீம்.
2003 ஈரான் அதிபர் முகம்மத் கடாமி.
2004 பிரேசில் அதிபர் லூயி இனாசியோ லூலா டி சில்வா.
2005 பூடான் மன்னர் ஜிக்மே சிங்யே வாங்சுக்.
2006 சவுதி அரேபியா மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் அல் சவுத்.
2007 ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்.
2008 பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோஸி.
2009 கஜகஸ்தான் அதிபர் நூர்சுல்தான் நசர்பயேவ்.
2010 தென் கொரிய அதிபர் லீ மியுங் பாக்.
2011 இந்தோனேசிய அதிபர் சுசீலோ பம்பாங் உதயணோ.
2012 தாய்லாந்து பிரதமர் யிங்சுக் ஷினவத்ரா.
2013 பூடான் மன்னர் ஜிக்மி கேசர் நாம்கியெல் வாங்சுக்.
2014 ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x