Published : 01 Jan 2015 12:33 PM
Last Updated : 01 Jan 2015 12:33 PM

உலக மசாலா: மிருகங்களை ஈர்க்கும் வாசனை

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் 33 வயது கிறிஸ்டின் மெக்கோனெல் போட்டோஷாப் நிபுணர். இதுவரை யாரும் செய்யாத ஒரு புதுமையான புகைப்படத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். கடந்த 200 ஆண்டுகளில் வாழ்ந்த, 7 தலைமுறைகளைச் சேர்ந்த உறவினர் பெண்களின் புகைப்படங்களை வைத்து, அதேபோல தானும் ஆடை, அலங்காரம் செய்து புகைப்படங்கள் எடுத்திருக்கிறார். எடுத்த புகைப்படங்களை போட்டோஷாப் உதவியுடன் மெருகேற்றி, பிரமாதமான, அந்தந்தக் காலகட்டங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் போன்று உருவாக்கிவிட்டார்.

பிரமாதப்படுத்திட்டீங்க கிறிஸ்டின்!

வன உயிரினங்களை ஆய்வு செய்வதற்கும் கண்காணிப்பதற்கும் காடுகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஆனால் கேமராவுக்கு அருகே விலங்குகளை வரவழைத்து, காட்சிகளைப் பதிவு செய்வது அத்தனை எளிதான விஷயமாக இல்லை. கடந்த பத்தாண்டுகளில் பல்வேறு விஷயங்களைச் செய்து பார்த்துவிட்டார்கள் ஆராய்ச்சியாளர்கள். சமீபத்தில்தான் இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைத்திருக்கிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நேச்சுரல் ஹிஸ்ட்ரி மியூஸியத்தில் உள்ள விஞ்ஞானிகள் கேமராவில் கால்வின் க்ளெய்ன் என்ற வாசனை திரவியத்தைத் தடவி காட்டில் வைத்தனர்.

கேமராக்களில் அடிக்கடி சிக்காத, அரிய உயிரினமான ஜாகுவார் வாசனை திரவியத்தால் ஈர்க்கப்பட்டு கேமராவிடம் வந்தது. ஆராய்ச்சிகளுக்குத் தேவையான விதத்தில் நீண்ட நேரம் அங்கேயே நின்று ஒத்துழைப்பு அளித்தது. காடுகளுக்குள் மனிதர்கள் செல்ல நேரிட்டால், தயவுசெய்து வாசனை திரவியங்களைப் பயன்படுத்தாதீர்கள். எந்த நேரமும் ஆபத்து வரலாம் என்று எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

வாசனை திரவியத்துக்கு ஜாகுவாரும் விலக்கல்ல!

இங்கிலாந்தில் உள்ள கோல்செஸ்டர் பகுதியில் வசித்து வருகிறார்கள் அலெக்சாண்டரும் கிறிஸ்டோபர் மெரிட்டும். 7 வயதான அலெக்சாண்டருக்கும் 18 மாதக் குழந்தையான கிறிஸ்டோபருக்கும் 7 உணவுப் பொருட்களைத் தவிர, மற்றவை எல்லாம் அலர்ஜியாக மாறிவிட்டன. உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, வாழைப்பழம், சோளமாவில் செய்யப்பட்ட கேக், பிஸ்கெட், கோழி இறைச்சி, வான்கோழி இறைச்சி மட்டுமே சாப்பிட முடிகிறது.

வேறு எந்த உணவையும் சிறிது சேர்த்துக்கொண்டால் கூட, மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கும் அளவுக்கு உடல்நிலை மோசமடைந்து விடுகிறது. பால் பொருள்கள், முட்டை, கோதுமை, சோயா, ஆப்பிள், திராட்சை, தக்காளி போன்றவை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகின்றன. பள்ளியில் அலெக்சாண்டருக்கு ஒரு துண்டு ஆப்பிள் கொடுத்தனர். அதைச் சாப்பிட்ட உடன் அலெக்சாண்டருக்கு மூச்சு விடுவது சிரமமாகி, மருத்துவனையில் சேர்த்தனர். குழந்தைகளின் உணவு அலர்ஜியால் பெற்றோர் மிகவும் வேதனையில் இருக்கின்றனர். எவ்வளவு மருத்துவம் பார்த்தும் குழந்தைகளின் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை.

ஐயோ… ரொம்பப் பாவமா இருக்கு…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x