Published : 14 Jan 2015 01:34 PM
Last Updated : 14 Jan 2015 01:34 PM

மறைமலைநகர் தொழிற்பேட்டையில் உள்ள மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து

மறைமலைநகர் தொழிற் பேட்டையில் அமைந்துள்ள தமிழ்நாடு தகவல் தொடர்பு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாயின. எனினும், தீயணைப்பு வீரர்களின் 19 மணி நேர தளராத போராட்டத்தால் தொழிற்சாலைக்குள் தீ பரவாமல் கட்டுப்படுத் தப்பட்டது. இதனால் தொழிற் சாலைக்குள் இருந்த பெட்ரோலிய பொருட்கள் தப்பின.

காஞ்சிபுரம் மாவட்டம், மறைமலைநகர் தொழிற்பேட்டை பகுதியில் மத்திய, மாநில அரசுகளின் கீழ் தகவல் தொடர்பு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு, கேபிள்கள், பெரிய மர சக்கரங்களில் சுழற்றி வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தகவல் அறிந்த, மறைமலைநகர் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்க முயன்றனர். மேலும், 12-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. 75-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடினர். நுரைகலவை மற்றும் மணல் தூவி தீயை அணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் 19 மணி நேரம் போராடி நேற்று மாலை தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சாம்பலாயின. விபத்து குறித்து, மறைமலைநகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தை தீயணைப்புத் துறையின் வடமேற்கு மண்டல துணை இயக்குநர் மீனாட்சி விஜயகுமார் பார்வையிட்டார்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர் மனோகரன் கூறியதாவது: பிளாஸ்டிக் பொருட்களில் தீப்பற்றியதால், தீயை உடனடியாக அணைக்க முடியவில்லை.

வீரர்களின் தீவிர முயற்சியால் தொழிற்சாலையில் பெட்ரோலிய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இதனால், பெரிய அளவிலான தீ விபத்து தடுக்கப்பட்டது. கேபிள் தயாரிக்க வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மூலப்பொருட்களையும் மீட்டுள்ளோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x