Last Updated : 03 Jan, 2015 12:23 PM

 

Published : 03 Jan 2015 12:23 PM
Last Updated : 03 Jan 2015 12:23 PM

ரியல் எஸ்டேட் - 2014: சவால்கள், எதிர்பார்ப்புகள்

ரியல் எஸ்டேட் துறையில் அந்நிய முதலீடு, நிறைவேறப் போகும் ரியல் எஸ்டேட் மசோதா, அனைவருக்கும் வீடு 2022 திட்டம் போன்ற காரணங்களால் 2015 ரியல் எஸ்டேட் துறைக்குச் சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2014 -ம் ஆண்டு ரியல் எஸ்டேட் துறையைப் பொருத்தமட்டில் ஏற்ற இறக்கங்களுடன் இருந்தது.

2013-ம் ஆண்டைவிட இந்த ஆண்டு ரியல் எஸ்டேட், கட்டுமானம் ஆகிய துறைகளுக்குப் பெரும் பின்னடைவுதான். வீட்டு மனையின் அரசு வழிகாட்டி மதிப்பு உயர்வு, கட்டுமானப் பொருள்களின் நிலையில்லாத விலையேற்றம் போன்ற காரணங்களால் ஒட்டுமொத்த துறையும் பாதிப்புக்குள்ளானது.

தமிழகத்தைப் பொறுத்தவரை நிலத்தின் வழிகாட்டி மதிப்பும் நிலத்தின் உண்மையான மதிப்பும் கிட்டதட்ட ஒன்றாக இருக்கும்படி ஆனது. இதனால் நிலம் வாங்குவது குறைந்துபோனது. ஆனால் நிலமதிப்பு இறங்கவில்லை. அதே நிலையிலேயே இருந்தது. சமானியர்கள் நிலம் வாங்குவது குறைந்து போனது. இதற்கிடையில் தென் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில், வழிகாட்டி மதிப்பு 20 சதவீதம்வரை மீண்டும் உயர்த்தப்பட்டது.

இதனால் அரசின் வருவாய் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால் ரியல் எஸ்டேட் வளார்ச்சி அதிகம் உள்ள தென் சென்னை, காஞ்சிபுரம் பகுதிகளின் வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. நில மதிப்பைக் குறைக்கக் கோரிக்கைகள் எழுந்துகொண்டுதான் இருக்கின்றன. மக்கள், கட்டுநர் சங்கப் பிரதிநிதிகள், ரியல் எஸ்டேட் துறை நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் அடங்கிய குழு ஒன்றை நியமித்து அவர்கள் வழிகாட்டுதலின் அடிப்படையில் வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தன.

இது ஒரு பக்கம் இருக்க, கட்டுமானப் பொருட்களின் விலையே நிலையில்லாமல் ஏற்ற இறக்கங்களுக்கிடையில் தள்ளாடிக் கொண்டுள்ளது. சிமெண்ட் விலையின் தொடர்ந்த ஏறுமுகத்தால் கட்டுநர்கள் மிகவும் பாதிக்கப்பட்டார்கள். வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதம் அளித்த தொகைக்குள் வீடு கட்டிக் கொடுக்க முடியாமல் திணறினர். மவுலிவாக்கம் கட்டிட விபத்து மக்களின் ஒட்டுமொத்த மனநிலையையே மாற்றியது. அடுக்குமாடிக் குடியிருப்புகள் குறித்த தவறான அபிப்ராயம் மக்களிடையே பரவியது. இதுவும் கட்டுமானத் துறையில் பிரதிபலித்தது.

இதற்கிடையில் மிகப் பெரிய கட்டுமான நிறுவனங்கள்தான் இந்த மந்த நிலையில் தாக்குப் பிடித்தன. இந்த நிலையிலும் சென்னையில் போட் கிளப் பகுதியில் சென்னையை மையமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் 210 கோடி ரூபாய்க்கு ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கிப் பரபரப்பை ஏற்படுத்தியது. அசோக் லேலண்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான அந்த இடம்தான் அந்த ஆண்டின் அதிகபட்ச தொகைக்கு விலை போன இடம்.

சமீபத்திய பண்டிகைக் காலங்களில் கட்டுமான நிறுவனங்களுக்குச் சாதகமான மனநிலை மக்கள் மத்தியில் உருவாகி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மக்கள் முன்பைப் போல வீடுகள் வாங்க ஆர்வத்தை வெளிப்படுத்திவருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையின் கடந்த ஆண்டு எப்படி இருந்தது, வரும் ஆண்டு எப்படி இருக்கும் என அத்துறை நிபுணர்கள் தங்கள் கருத்தைப் பகிர்ந்துகொண்டனர்.

ரத்தினசாமி, பொறியாளர், காரைக்குடி.

“2013-ஐக் காட்டிலும் நில மதிப்பும் கட்டுமானப் பொருள்களின் விலையேற்றமும் 2014-ல் அதிகம்” என்கிறார் காரைக்குடி கட்டுமானப் பொறியாளார் ரத்தினசாமி. கட்டுமானப் பொருள்களில் கட்டுப்படுத்தவியலாத விலையேற்றத்தால் கட்டுமானத் தொழில் பாதிக்கப்பட்டது.

“கடந்த சில மாதங்களில் மட்டுமல்லாமல் பல முறை சிமெண்ட் விலை ஏற்றப்பட்டது. கட்டுமானப் பொருள்களின் விலையே 20 சதவீதம் அதிகமாகிப் போனது இந்த ஆண்டுதான். சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு குறைந்த அளவு கட்டுமானங்களே எங்களால் சாத்தியப்பட்டது” என்னும் ரத்தின சபாபதி 2014 தந்த ஏமாற்றத்தால் 2015-ஐ அதிகம் எதிர்பார்க்கவில்லை என்கிறார்.

குமார், மேலாண்மை இயக்குநர், நவீன் ஹோம்ஸ்

“2014 மறக்க வேண்டிய ஒரு வருடம்” என்கிறார் நவீன் கட்டுமான நிறுவன மேலாண்மை இயக்குநர் குமார். அந்தளவுக்கு கடந்த ஆண்டு மிக மோசமாக இருந்ததாகச் சொல்கிறார் அவர். ஆனால் வர்த்தக ரீதியில் ரியல் எஸ்டேட் இந்த ஆண்டு வளர்ச்சி அடைந்துள்ளது என்கிறார். அடுத்த ஆண்டு சாதகமாக இருக்கும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

“மத்திய அரசின் அனைவருக்கும் வீடு - 2022 திட்டத்தால் ரியல் எஸ்டேட் துறைக்குச் சாதகமான சூழல் உருவாகும். அப்ரூவல் கிடைப்பதில் உள்ள சில நடைமுறைச் சிக்கல்களை அரசு வரும் ஆண்டில் தளர்த்தும்” எனக் கூறும் குமார் வீட்டுக் கடன் வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கலாம். “வீட்டுக் கடனைக் குறைக்க வங்கிகள் தயாராக இருக்கின்றன. இருந்தாலும் மத்திய ரிசர்வ் வங்கி வட்டியைக் குறைக்க விருப்பம் தெரிவிக்காதிருக்கிறது. வரும் காலத்தில் அனைவருக்கும் வீடு - 2022 திட்டத்தை மனத்தில் கொண்டு வீட்டுக் கடன் வட்டி குறைய வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன” என குமார் தெரிவிக்கிறார்.

மேலும் அடுத்த ஆண்டு சிறப்பாக இருக்கும் என்பதற்கான அறிகுறியாக இப்போதே சாதகமான மனநிலை வீடு வாங்குவோர் மத்தியில் எழுந்துள்ளதைப் பார்க்க முடிவதாகவும் அவர் சொல்கிறார்.

சிட்டி பாபு, முதன்மைச் செயல் அதிகாரி, அக்‌ஷயா ஹோம்ஸ்

சென்ற ஆண்டு மிகச் சிறப்பாக இருந்ததாக அக்‌ஷயா ஹோம்ஸைச் சேர்ந்த சிட்டி பாபு சொல்கிறார். “2014-ம் ஆண்டு பிரமாதமாக இருந்தது. சென்னையில் ரியல் எஸ்டேட் துறை சென்ற ஆண்டைக் காட்டிலும் விரிவடைந்துள்ளது. புதிய புதிய கட்டுநர்கள் இத்தொழிலுக்கு வந்துள்ளனர். அதேசமயம் சிமெண்ட் விலை உயர்வு, மணல் தட்டுப்பாடு, திறமையான வேலை ஆட்கள் குறைவு எனச் சில சவால்களும் இருந்தன. வரும் புத்தாண்டிலும் ரியல் எஸ்டேட் துறை இதைவிடச் சிறப்பாக இருக்கும்” என உறுதியாகத் தெரிவிக்கிறார் அவர்.

சிறில் கிறிஸ்துராஜ், தேசியக் கட்டுமானச் சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர், கன்னியாகுமரி

2013-ம் ஆண்டைக் காட்டிலும் 2014-ல் கட்டுமானத் தொழில் பின் தங்கியே இருந்தது எனக் கருத்துத் தெரிவிக்கிறார் சிறில் கிறிஸ்துராஜ். “வழிகாட்டி மதிப்பு உயர்வு, கட்டுமானப் பொருள்களின் நிலையில்லாத விலையேற்றம் போன்ற காரணங்களால் கட்டுமானத் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று வாரங்களில் சிமெண்ட் விலை திரும்பத் திரும்ப உயர்ந்து பெரும் நெருக்கடியைத் தந்துள்ளது. நாங்கள் இதை எதிர்த்து விரைவில் போராட்டத்தை அறிவிக்க உள்ளோம்” என்கிறார்.

“இதுமட்டுமல்லாது வங்கிகள் வீட்டுக் கடன் தருவதில் உள்ள கெடுபிடிகளையும் தளர்த்த வேண்டும். இதனால் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் வீடு கட்ட முடியாத சூழல் நிலவுகிறது. இது மாற வேண்டுமானால் வங்கிகள் வீட்டுக் கடனில் தாராளம் காட்ட வேண்டும்” எனக் கோரிக்கை வைக்கிறார்.

கணேஷ் வாசுதேவன், முதன்மைச் செயல் அதிகாரி, இந்தியா ப்ராபர்டி டாட் காம்

2014-ம் ஆண்டு மிகக் கஷ்டமான காலகட்டமாக இருந்தது என்கிறார் கணேஷ் வாசுதேவன். “இந்தக் கஷ்டமான சூழலிலும் எங்கள் நிறுவனம் நன்கு செயல்பட்டது” எனக் கூறும் அவர் இந்த நிலை 2015-ம் ஆண்டில் மாறும் என நம்பிக்கை தெரிவிக்கிறார். மத்திய அரசின் அனைவருக்கும் வீடு - 2022 திட்டம் பிரகாசமான மாற்றங்களைச் செய்யும் எனவும் கருத்துத் தெரிவிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x