Published : 08 Jan 2015 11:16 AM
Last Updated : 08 Jan 2015 11:16 AM

கோவையில் தேமுதிக செயற்குழு, பொதுக்குழு: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் - விஜயகாந்த் வலியுறுத்தல்

தமிழக மக்களின் முதல்வர் என அழைக்கப்படுபவர் முதலில் மக்களை சந்திக்க முன்வர வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.

கோவை துடியலூரில் தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, விஜயகாந்த் தலைமை வகித்தார். அந்தக் கட்சியின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த செயற்குழு மற்றும் பொதுக்குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது: கிரானைட் முறைகேடு குறித்து விசாரிக்க சகாயத்தை உயர்நீதிமன்றம் நியமித்தபோது தமிழக அரசு ஏன் உடனடியாக அவரை பணிக்கு அனுப்பவில்லை. மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம் இருக்கும் என்பார்கள். இவர்களுக்கு ஏன் பயம் வந்தது?

கடந்த திமுக ஆட்சியில் முதல்வர், துணை முதல்வர் என இரு முதல்வர்கள் இருந்தார்கள். தற்போதும் இரு முதல்வர்கள் இருக்கிறார்கள். ஒன்று, தமிழக முதல்வராம். மற்றொன்று, மக்களின் முதல்வராம்! மக்களின் சொத்தை கொள்ளை அடித்தவரை மக்களின் முதல்வர் என்கிறார்கள். அந்த மக்களின் முதல்வர் தற்போது என்ன ஆனார் என்றே தெரியவில்லை. மக்களின் முதல்வர் என்றால் மக்களை சந்திக்க வேண்டும். அவர்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். அவரை குற்றவாளி என சொல்லக் கூடாதாம். நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்ட வரை பின்னர் எப்படி அழைப்பதாம்?

மனசுக்குள் எடிட்டிங்

ஜெயலலிதாவின் வழக்கறிஞர், நீதிமன்றத்தில் கன்விக்டெட் (குற்றவாளி) ஜெயலலிதா என்றுதானே வாதாடுகிறார்? இவர்கள் எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை மாற்ற முடியாது. அவரைப் பற்றி இருப்பதை சொல்வதற்கு தயங்குகிறார்கள். ஆனால், நான் அப்படி இல்லை. அவரை என்றும் விமர்சிப்பேன். உள்ளதை உள்ளபடி பேசுபவன் நான். தப்பு என்று பட்டால் அப்படியே பேசுவேன். ஆனால், நான் பேசுவதற்கு முன்பாக என் மனசுக்குள் எடிட்டிங் நடந்து கொண்டேதான் இருக்கும்.

ஊழலில் தொலைநோக்கு

2023 என்ற தொலைநோக்குத் திட்டம் அறிவித்தார்கள், என்ன ஆனது?. ஒன்றுமே நடக்கவில்லை.தொலைநோக்கும் இல்லை. அதற்கு உதாரணம், வருடத்துக்கு ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதாகச் சொன்னார்கள். தற்போது மூன்று வருடம் கடந்துவிட்டது. மூன்று ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி ஆகி இருக்க வேண்டுமல்லவா? அவர்களின் தொலை நோக்குப் பார்வை எப்படி இருக்கிறது என்றால்… ஊழலிலும், மக்கள் பணத்தை எப்படி கொள்ளை அடிக்கலாம் என்பதிலும்தான் இருக்கிறது என்றார்.

தேமுதிக பொதுக்குழுக் கூட்டத்தில், ‘ரூ.17.75 என இருந்த ஒரு லிட்டர் பாலின் விலையை ரூ.34- ஆக உயர்த்தியுள்ளது அதிமுக அரசு. உடனடியாக பால் விலை உயர்வை குறைக்க வேண்டும். இதேபோல், மின்கட்டண உயர்வையும் திரும்பப் பெற வேண்டும். தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும்’ என்பது உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x