Last Updated : 04 Jan, 2015 09:50 AM

 

Published : 04 Jan 2015 09:50 AM
Last Updated : 04 Jan 2015 09:50 AM

கர்நாடகத்தில் உர்ஸு திருவிழாவில் சோகம்: தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்து 5 பக்தர்கள் பரிதாப பலி - 2 குழந்தைகள் உட்பட 7 பேர் காயம்

கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் அருகே தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததில் அதன் கீழே துணி துவைத்துக் கொண்டிருந்த 5 பக்தர்கள் உயிரிழந்தனர். இரண்டு குழந்தைகள் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.

கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் மாவட்டத்தில் யாபலதின்னி என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள ஹஸராஜ் ஜங்க்ளிபீர் சாப் தர்காவில் ஒரு வார காலம் நடைபெறும் ‘உர்ஸூ' திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ‘உர்ஸூ' திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.

சமீபத்தில் அங்கு நகராட்சி சார்பில் ரூ. 2.29 லட்சம் மதிப்பில் மக்களின் பயன்பாட்டுக்காக தண்ணீர் தொட்டி கட்டப்பட்டது. இன்னும் பயன்பாட்டுக்கு வராத அந்த தொட்டியில், வெளியூர் பக்தர்களின் பயன்பாட்டுக்காக நேற்று தண்ணீர் நிரப்பப்பட்டது. இந்நிலையில் தொட்டியில் இருந்து நீர்க்கசிவு ஏற்பட்டது. சில பக்தர்கள் தொட்டியின் மீது ஏறி தண்ணீர் எடுத்துள்ளனர்.

பக்தர்கள் பலியான சோகம்

நேற்று காலை 8.30 மணியளவில் தண்ணீர் தொட்டியின் 4 தூண் களும் இடிந்து விழுந்தன. அப்போது தொட்டியின் கீழே துணி துவைத்துக்கொண்டும் குளித்துக் கொண்டும் இருந்தவர்கள் மீது கட்டிட இடிபாடுகள் விழுந்தன. இதில் ரெய்ச்சூரை சேர்ந்த ஈரேஷ் கப்பார் (29), ஜோஹி பூஜாரி (55), ஆந்திராவை சேர்ந்த ஹூசேனப்பா கப்பார் (21), ஷாஜஹான் (30), ஒடிஸாவை சேர்ந்த ஜோமல் மிஸ்ஸேல் (40) ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

தண்ணீர் தொட்டியின் கீழே விளையாடிக் கொண்டிருந்த 2 ஆண் குழந்தைகளும் இடிபாடுகளில் சிக்கினர். இவர்கள் தவிர மேலும் 5 பேர் படுகாயம‌டைந்தனர். அவர்கள் அனைவரும் ரெய்ச்சூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்

பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மோசமான கட்டுமானம்

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் யாபலதின்னி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதில் பங்கேற்ற துங்கபத்ரா வட்டார வளர்ச்சி கழக தலைவர் வசந்தகுமார் கூறியபோது, “மிக மோசமான கட்டுமானத்தின் காரணமாக தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்துள்ளது. வெளியூரை சேர்ந்த 5 பக்தர்களின் மரணத்துக்கு காரணமான கட்டுமான நிறுவனத்தின் மீது வழக்கு தொடுக்க வேண்டும்.

அரசு ஒதுக்கிய பணத்தை கொள்ளையடித்துவிட்டு, மட்டமான பொருட்களைக் கொண்டு தண்ணீர் தொட்டி கட்டியதாலே இந்த கோர சம்பவம் நடந்துள்ளது.

எனவே இது தொடர்பாக ரெய்ச்சூர் மாவட்ட நிர்வாகம் முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும்'' என வேண்டுகோள் விடுத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x