Published : 26 Jan 2015 10:49 AM
Last Updated : 26 Jan 2015 10:49 AM

மெரினாவில் குடியரசு தின விழா கோலாகலம்: ஆளுநர் ரோசய்யா தேசியக் கொடி ஏற்றினார் - வீரதீர பதக்கங்களை முதல்வர் பன்னீர்செல்வம் வழங்கினார்

முப்படைகளின் அணிவகுப்பு, மாணவிகளின் வண்ணமயமான கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் குடியரசு தின விழா சென்னை மெரினா கடற்கரை சாலையில் நேற்று கோலாகலமாக கொண்டா டப்பட்டது. ஆளுநர் கே.ரோசய்யா, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு விருதுகளை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.

நாட்டின் 66-வது குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை சாலை காந்தி சிலை அருகே குடியரசு தின கொண்டாட்டங்கள் நடந்தன. இதற்காக சிறப்பு மேடை அமைக்கப்பட்டு, தற்காலிக கொடிக்கம்பமும் அமைத்திருந்தனர். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், காலை 7.50 மணியளவில் விழா நடக்கும் இடத்துக்கு வந்தார்.

ஆளுநர் ரோசய்யா, முதலில் போர் நினைவிடத்துக்குச் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் விழா நடக்கும் இடத்துக்கு அவரை முப்படை வீரர்கள் அணிவகுத்து அழைத்து வந்தனர். ஆளுநரை முதல்வர் பன்னீர்செல்வம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதன்பின், முப்படை அதிகாரிகள் மற்றும் தமிழக காவல்துறை உயரதிகாரிகள் ஆகியோரை ஆளுநருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். காலை 8 மணிக்கு ஆளுநர் ரோசய்யா, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

அப்போது வானில் பறந்து வந்த இந்திய விமானப்படை ஹெலிகாப்டர், தேசியக் கொடி மீது ரோஜா இதழ்களை தூவியவாறு சென்றது. இதைப் பார்த்ததும் அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உற்சாக குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

அதைத்தொடர்ந்து முப்படை கள், காவல்துறை, தேசிய மாணவர் படை என 48 வகை படைப் பிரிவுகளின் அணிவகுப்பு நடந்தது. பின்னர் அரசுத் துறைகளின் சார்பில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. வீரதீர செயலுக்கான பதக்கம் உட்பட பல்வேறு பதக்கங்களை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.

விழாவில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், தமிழக அரசின் தலைமைச் செயலர் கே.ஞானதேசிகன், டிஜிபி அசோக்குமார் மற்றும் அமைச்சர்கள், அரசுத்துறை செயலர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் கலந்துகொண்டனர். சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்து குடியரசு தின விழா அணிவகுப்பை பார்வையிட்டனர்.

விழாவையொட்டி அந்தப் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கடலிலும் போலீஸார் படகில் ரோந்து சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலையில் இருந்து விழா முடியும் வரை அண்ணா சதுக்கம் முதல் மெரினா கடற்கரை சாலை முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.

அலங்கார ஊர்தி அணிவகுப்பு காவல்துறைக்கு முதல் பரிசு

சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதில், காவல்துறை சார்பில் அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்தி முதல் பரிசை பெற்றது.

சென்னை மெரினா கடற்கரை சாலையில் குடியரசு தின விழா நேற்று நடந்தது. விழாவில் 25 அரசுத் துறைகள் சார்பில் சாதனைகளை பிரதிபலிக்கும் அம்சங்கள் இடம்பெற்ற அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடந்தது. இதில் காவல்துறையின் அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு கிடைத்தது.

அதில் இடம்பெற்றிருந்த காவல்துறை கட்டுப்பாட்டு மையங்களின் செயல்பாடுகள், அதிரடிப்படையில் உள்ள துரித நடவடிக்கை குழுக்கள் பயங்கரவாத தாக்குதலை எதிர்கொள்வது போன்ற காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

செய்தி மக்கள் தொடர்புத் துறை அலங்கார ஊர்திக்கு 2-வது பரிசும், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்த்துறைக்கு 3-வது பரிசும் வழங்கப்பட்டது.

காவலர் பதக்கம்

மதுவிலக்கு அமலாக்க பிரிவில் சிறப்பாக பணியாற்றிய 4 போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தமர் காந்தியடிகள் காவலர் பதக்கங்களையும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார். திருச்சி மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் ஆணையர் கே.பாலகிருஷ்ணன், காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் கே.சண்முகம், திருச்சி மண்டல மத்திய புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளர் பி.பத்மாவதி, விழுப்புரம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளர் எம்.பாபு ஆகியோர் முதல்வரிடம் இருந்து இந்தப் பதக்கங்களைப் பெற்றனர்.

5 பேருக்கு அண்ணா பதக்கம்

குடியரசு தின விழாவில் வீரதீர செயல்புரிந்த 5 பேருக்கு அண்ணா பதக்கங்களை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கி கவுரவித்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பா.சிவக்குமார், அ.பழனி வேல்ராஜா, பா.ராஜாபூபதி, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ம.பார்த்தசாரதி, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ப.கந்தசாமி ஆகிய 5 பேர் அண்ணா பதக்கங்களை பெற்றனர்.

பழனிவேல்ராஜா, ராஜாபூபதி, பா.சிவக்குமார் ஆகியோர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரர்களாக பணிபுரிகின்றனர். இவர்கள், அப்பகுதியில் உள்ள 120 அடி ஆழ கிணற்றில் விழுந்த பெண்ணையும், அவரை காப்பாற்றும் முயற்சியில் கிணற்றில் விழுந்த இருவரையும் துணிச்சலாக செயல்பட்டு உயிருடன் மீட்டனர். அதற்காக அவர்களுக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.

முதலையிடமிருந்து சிறுவனை மீட்டவர்

கடலூர் மாவட்டத்தில் ஆற்றில் முதலையிடம் இருந்து 12 வயது சிறுவனை மீட்டதற்காக ம.பார்த்தசாரதியும், ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்ட 3 பெண்களை மீட்டதற்காக ப.கந்தசாமியும் அண்ணா பதக்கங்களைப் பெற்றனர்.

கோட்டை அமீர் பதக்கம்

மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் பதக்கம், செ.துல்கருணை பாட்சா வுக்கு வழங்கப்பட்டது. ராமநாத புரத்தைச் சேர்ந்த செ.துல் கருணை பாட்சா, இந்து - முஸ்லிம்களிடையே மத நல்லிணக்கத்தை பேணிக் காக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அவரது பணியை பாராட்டும் வகையில், அவருக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கத்தை முதல்வர் வழங்கினார்.

பள்ளி, கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சி

சென்னை மெரினா கடற்கரை சாலையில் நேற்று நடைபெற்ற 66-வது குடியரசு தின விழாவில், பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

பள்ளிகள் பிரிவில் மயிலாப்பூர் லேடி சிவசுவாமி அய்யர் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் கோலாட்டத்துக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் சலங்கையாட்டத்துக்கு 2-வது பரிசும், பிராட்வே செயின்ட் பிரான்சிஸ் சேவியர் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் தம்புரா நடனத்துக்கு 3-வது பரிசும் வழங்கப்பட்டன.

கல்லூரிகள் பிரிவில் வேப்பேரி குருஸ்ரீ சாந்தி விஜய் ஜெயின் மகளிர் கல்லூரி மாணவிகளின் பாரம்பரிய கலை நடனத்துக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. ஆர்.ஏ. புரம் டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கலை, அறிவியல் மகளிர் கல்லூரி மாணவிகளின் நடனத்துக்கு 2-வது பரிசும், எழும்பூர் எத்திராஜ் மகளிர் கல்லூரி மாணவிகளின் கும்மியாட்டத்துக்கு 3-வது பரிசும் வழங்கப்பட்டன. தொடர்ந்து ராஜஸ்தான், கேரளம், அசாம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x