Published : 28 Jan 2015 08:40 AM
Last Updated : 28 Jan 2015 08:40 AM

அதிக ஊதியம் கேட்டு நெருக்கடி கொடுத்தாரா பவானிசிங்?- ஆடியோவால் பரபரப்பு

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆஜராகிவரும் பவானிசிங், அதிக ஊதியம் கேட்டு ராஜினாமா நெருக்கடி கொடுத்தாரா என்பது பற்றி பரபரப்பான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலை யில் இந்த விவாதத்துக்கு வலு சேர்க்கும்விதமாக ஒரு ஆடியோ ‘தி இந்து'வுக்கு கிடைத்துள்ளது.

இந்த ஆடியோ மூலம் தெரியவந்திருக்கும் உரையாடலில் பெங்களூருவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரும், சொத்து குவிப்பு வழக்குடன் தொடர்புடைய தமிழக போலீஸ் அதிகாரி ஒருவரும் பேசிக் கொள்வதாகச் சொல்லப்படுகிறது.

கடந்த 25-ம் தேதி ‘தி இந்து'வில், ‘சொத்துக்குவிப்பு வழக்கில் திடீர் திருப்பம். அரசு வழக்கறிஞர் பவானிசிங் ராஜினாமா'என்ற செய்தி வெளியானது. ஆனால், மறுநாளே ‘ராஜினாமா செய்யவில்லை' என பவானிசிங் மறுத்தார். இந்நிலையில் இந்த ஆடியோ விவகாரம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆடியோ உரையாடலில் இருந்து:

வழக்கறிஞர்: சார்.. வணக்கம் சார்.. பவானிசிங் ரிசைன் பண்ணிட்டாரா?

போலீஸ் அதிகாரி: இல்லீங்க சார்..

வழக்கறிஞர்: சார்.. தமிழ் இந்துவிலெல்லாம் வந்துருக்கே..

போலீஸ் அதிகாரி: அப்படிலாம் இல்லீங்க சார்.. அவர் ஏன் ரிசைன் பண்றாரு. ஜி.ஓ. வரலேங்கிறதுக்காக மிரட்டி கிட்ருக்கார். தமிழ் இந்துவை இப்பத்தான் படிச்சேன்.

வழக்கறிஞர்: சார்.. அவர (பவானிசிங்) கேட்டீங்களா?

போலீஸ் அதிகாரி: அவருக்கு பேலன்ஸ்லாம் பெண்டிங் இருந்தது. அதெல்லாம் நேத்தே அனுப்பி விட்டாச்சு. அது ஒரு விஷயம். அது இல்லாது, ஜி.ஓ. கேட்குறாரு. அது ரேட் பிக்ஸேஷன். ஒரு நாளைக்கு 2.5 லட்ச ரூபா கேட்டு ஏற்கெனவே லெட்டர் வச்சுருக்காரு. அதெல்லாம் கணக்குப் போட்டுட்டு முந்தாநாளே மெரட்டுனாரு.. நான் ரிசைன் பண்ணப் போறேன்னு.. ஜி.ஓ வர்றவரைக்கும் அவரு விட மாட்டாரு.. அதெல்லாம் நமக்குத்தான தெரியும். பிக்ஸேஷன் வர்ற வரைக்கும் விட மாட்டாரு.. காலைல பேசுனேன்..

(அதன்பிறகு உரையாடல் வேறு பக்கம் மாறிவிட்டது)

ஐஜி-யிடம் பவானிசிங் சீற்றம்

இதனிடையே செவ்வாய்க்கிழமை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் பவானிசிங் மிகவும் உணர்ச்சி வசப்பட்டவராக காணப்பட்டார். மதிய உணவு இடைவேளையின் போது த‌மிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் ஐஜி குணசீலனை அழைத்து சுமார் 15 நிமிடங்கள் பேசினாராம். அப்போது ஊதிய பிரச்சினை தொடர்பாக காரசாரமாக பேசியதாக தெரிகிறது.

மேலும் வழக்கு விசாரணை முடிந்த பிறகு மீண்டும் குணசீலனிடம் நீண்ட நேரம் கோபமாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது, ’தமிழக அரசு தரும் குறைந்த ஊதியத்துக்கு என்னால் பணியாற்ற முடியாது. நான் கேட்ட ஊதியத்தை தர வேண்டும்’ என பவானிசிங் கூறியதாக நீதிமன்றத்துக்குள் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

ரூ.29 லட்சம் பட்டுவாடா

இந்நிலையில் பவானிசிங்கிற்கு வழங்கப்பட வேண்டிய பாக்கியில்(நிலுவையில்) இருந்த‌ ஊதியத்தை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நேற்று வங்கி வரைவோலையாக வழங்கினர். அதாவது பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த தனியார் நிறுவனங்களுக்கு எதிரான வழக்கில் ஆஜரானதற்காகவும், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடந்த மேல்முறையீடு வாதத்துக்காகவும் கட்டணமாக ரூ.29 லட்சம் வழங்கப்பட்டது என தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

மேலும் பவானிசிங்கின் கோரிக் கையை ஏற்று, அவருக்கு உதவுவதற்காக காவலர் மோகனை மீண்டும் பணி அமர்த்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x