Published : 31 Oct 2014 09:23 AM
Last Updated : 31 Oct 2014 09:23 AM

லகான் பாஜகவின் கையில்

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்காத பாஜக, ஒருவழியாகச் சிறுபான்மை அரசை அந்த மாநிலத்தில் அமைக்கவிருக்கிறது. தனது நீண்ட காலக் கூட்டணிக் கட்சியான சிவசேனாவுடனான, தேர்தலுக்குப் பிந்தைய பேச்சுவார்த்தையிலும் விட்டுக்கொடுக்காத உறுதியுடன் நடந்து கொள்கிறது பாஜக, தேர்தலுக்கு முன்னர் தொகுதிப் பங்கீட்டில் சிவசேனாவிடம் காட்டிய அதே கெடுபிடியுடன்.

தேர்தலைத் தனியாகச் சந்திக்கலாம் என்று பாஜக முடிவெடுத்ததுகூட நீண்ட காலத் திட்டத்தின் விளைவுதான். அத்துடன், தேர்தலுக்குப் பின்னர், எந்தக் கட்சியின் உதவியையும் கோரி நிற்க அந்தக் கட்சி விரும்ப வில்லை. குறிப்பாக, சிவசேனாவிடம் சரணடைய பாஜகவுக்கு விருப்ப மில்லை. பெரிய கட்சிகளின் துணை இல்லாமல் 122 இடங்களை வென்றிருக்கும் நிலையில், கூட்டணி என்ற பெயரில், அமைச்சரவையில் மற்ற கட்சிகளுக்குக் கூடுதல் சலுகை அளித்தால், தேர்தலில் பெற்ற வெற்றிக்கு அர்த்தமில்லாமல் போய்விடும் என்பது பாஜகவின் நிலைப்பாடு. கூட்டணிக் கட்சிகள் கொடுக்கும் அழுத்தத்தைத் தாங்கிக் கொள்ள, தற்போதைய நிலையில் பாஜக தயாராக இல்லை.

மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு. கூட்டணி பலவீனமான நிலைக்குத் தள்ளப்படுவதற்கு, காங்கிரஸின் கூட்டணிக் கட்சிகள் கொடுத்த அர்த்தமற்ற அழுத்தங்களும் முக்கியக் காரணம். இந்தத் தவறு தங்கள் விஷயத்தில் நிகழ்வதை பாஜக விரும்பவில்லை. அதுவும், மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று மத்தியில் ஆட்சியைப் பிடித்திருக்கும் நிலையில், பாஜக அதை நிச்சயம் செய்யத் துணியாது.

பிற கட்சிகளுடனான பாஜகவின் பிடிவாதமான பேச்சு அந்தக் கட்சிகளுக்கு மற்றொரு செய்தியையும் சொல்கிறது. ஆட்சியில் இடம் பெறுவதை வைத்துக்கொண்டு, என்ன வேண்டுமானாலும் கேட்டுப் பெறலாம் என்று அந்தக் கட்சிகள் நினைக்கக் கூடாது என்பதுதான் அந்தச் செய்தி. தேசியவாத காங்கிரஸ் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு தரத் தயாராக இருக்கும் நிலையில், வசதியான இடத்தில் இருந்து கொண்டுதான் பேச்சுவார்த்தையில் சிவசேனாவிடம் கெடுபிடி காட்டுகிறது பாஜக. சொல்லப்போனால், தேசியவாத காங்கிரஸும் எதிர்காலத்தில் பல நிபந்தனைகளை விதிக்கக் கூடும். என்றாலும், தற்போதைய நிலையில் தேசியவாத காங்கிரஸை வைத்து சிவசேனாவுடன் விளை யாடவே பாஜக விரும்புகிறது.

மகாராஷ்டிர முதல்வராக இன்று பதவியேற்கப்போகும் தேவேந்திர பட்நவீஸ், கட்சித் தலைமையின் உதவியுடன் சிவசேனாவையும் தேசியவாத காங்கிரஸையும் சரிகட்ட வேண்டியிருக்கும். காங்கிரஸ் ஆட்சியில் பங்குவகித்திருந்த தேசியவாத காங்கிரஸை பாஜக கடுமையாக விமர்சித்துவந்தது. அந்தக் கட்சி, தற்போது அமைச்சரவையில் பங்கேற்க வாய்ப்பில்லை. பலம்வாய்ந்த கட்சியாகத் தன்னை முன்னிறுத்திவந்திருந்தாலும் தேர்தலுக்குப் பின்னர் பலவீனப்படுத்தப் பட்டுள்ள சிவசேனாவுக்குத்தான் பாஜக அரசில் பங்கேற்க வாய்ப்பு அதிகம்.

அதே சமயம், சிவசேனாவுடன் எந்த ஒப்பந்தமும் செய்துகொள்ளாமல் ஆட்சியமைக்க பாஜக முடிவெடுத்திருப்பது அதன் புதிய நம்பிக்கையைக் காட்டுகிறது. எனினும், பாஜக தலைமையிலான மத்திய அரசைப் போல கூட்டணிக் கட்சிகளின் துணையில்லாமல் செயல்பட முடியாது. சிவசேனாவைச் சமாளிப்பதும் எளிதான காரியமல்ல.

மகாராஷ்டிரத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும்கூடத் தனது அரசியல் நகர்த்தல்களையும், சாம்ராஜ்ய விரிவாக்க உத்திகளையும் பொறுத்தவரை பாஜக வெற்றி பெற்றிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x