Published : 08 Sep 2014 12:49 PM
Last Updated : 08 Sep 2014 12:49 PM

நாடு திரும்ப அனுமதி கோரி இத்தாலி வீரர் மனு

இந்தியாவில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இத்தாலிய கடற்படை வீரர்களில் ஒருவரரன மேசிமிலியானோ லாட்டோரி, பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ள தன்னை நாடு திரும்ப அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு மீதான முதற்கட்ட விசாரணை இன்று திங்கள்கிழமை நடைபெற உள்ளது.

பக்கவாத நோய் போன்ற பாதிப்பு இருந்ததால் லாட்டோரி கடந்த 31-ம் தேதி டெல்லி மருத்து வமனையில் அனுமதிக்கப் பட்டார். இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சிகிச்சையில் லாட்டோரி குணமடைந் துள்ளதாகவும் என்றாலும் தொடர் பரிசோதனைக்காக சில நாட்களுக்குப் பிறகு அவர் மருத்துவமனைக்கு வரவேண்டும் எனவும் மருத்துவர்கள் கூறினர்.

லாட்டோரியின் உடல்நலக் குறைவு பற்றி அறிந்த இத்தாலிய பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் பினோட்டி கடந்த வாரம் டெல்லி வந்து லாட்டோரியை பார்த்தார்.

இதன்பிறகு இத்தாலி திரும்பிய அவர், ரோமில் செய்தியாளர் களிடம் கூறும்போது, “கடற்படை வீரர்கள் மீதான வழக்கில் ஒவ்வொரு நாளும் கவனம் செலுத்தி வருகிறோம். அவர்களை இத்தாலி அழைத்து வருவதே அரசின் முன்னுரிமை பணியாக இருக்கும்” என்றார்.

இத்தாலிய கடற்படை வீரர்கள் லாட்டோரி, கிரோனி ஆகிய இருவரும் இந்திய கடற் பகுதியில் கடந்த 2012, பிப்ரவரி 15-ம் தேதி, கடல் கொள்ளை யர்கள் என்று கருதி கேரள மீனவர்கள் இருவரை சுட்டுக் கொன்றனர்.

இந்த வழக்கில் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்ட இருவரும் ஜாமீன் பெற்று, டெல்லியில் உள்ள இத்தாலிய தூதரகத்தில் தங்கி யுள்ளனர். இவர்கள் மீதான வழக்கு மிகவும் தாமதமாத நடை பெறுவதாக இத்தாலி குற்றம் சாட்டியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x