Published : 08 Sep 2014 10:00 AM
Last Updated : 08 Sep 2014 10:00 AM

மத நல்லிணக்கத்துடன் விநாயகர் ஊர்வலம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை வட்டம் கெலமங்கலம் பகுதியில் பிற மதத்தினருக்கு இணையாக இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். இதுபோன்ற இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விசர்ஜன ஊர் வலத்தின்போது பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். ஆனால் நேற்று கெலமங்கலத்தில் 34 விநாயகர் சிலைகளைக் கரைக்க நடத்தப்பட்ட விசர்ஜன ஊர்வலத்தின்போது குறைந்த அளவிலான போலீஸார் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபட் டிருந்தனர்.

இதுபற்றி போலீஸாரிடம் விசாரித்தபோது ஓர் ஆச்சரியத் தகவல் கிடைத்தது. இங்கு ‘கெலமங்கலம் விநாயகர் சதுர்த்தி ஏற்பாட்டு கமிட்டி’ என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக சித்தையா உள்ளார். கமிட்டியில், கெலமங்கலம் ஜமாத் செயலாளரான சையத் அசைன் உள்ளிட்ட ஏராளமான இஸ்லா மியர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

கமிட்டித் தலைவர் சித்தையா இதுபற்றி கூறியதாவது; எங்கள் ஊரில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா மிகச் சிறப்பாக நடத்த பேருதவியாக இருப்பது இஸ்லாம் சகோதரர்கள்தான். பொருளாதார ரீதியிலான உதவியுடன் இவர்கள் விலகிக் கொள்வதில்லை. இந்த ஆண்டு கெலமங்கலத்தில் 34 விநாயகர் சிலைகள் வைத்தோம்.

சிலை வாங்க செல்வதில் தொடங்கி சிலையை வைத்த பிறகு தினசரி நடக்கும் வழிபாடுகள், விசர்ஜனம் வரை அனைத்திலும் எங்கள் பகுதி இஸ்லாமிய சகோதரர்கள் தவறாமல் கலந்து கொள்வர். கோயில் பிரசாதம் அனைத்து இஸ்லாம் சகோதரர்கள் வீட்டுக்கும் வழங்கப்படும். அப்படி கொடுக்கத் தவறினால், ஏன் பிரசாதம் தரவில்லை என கேட்கும் அளவில் எங்கள் பகுதி இஸ்லாமிய நண்பர்கள் நல்லிணக்க சிந்தனையாளர்களாக உள்ளனர். இதனால்தான் சதுர்த்தி விழா எவ்வித பயம், பதற்றம் இல்லாமல் சிறப்பாக நடக்கிறது.

இங்கு நடக்கும் எந்த விழாவும் மத விழாவாக அல்லாமல் சமூக ஒற்றுமையை ஓங்கச் செய்யும் விழாவாக மட்டுமே நடக்கிறது. எங்கள் பகுதியில் நிலவும் மதம் கடந்த நட்புணர்வை நேரில் பார்த்தால், வீணாக உரசிக் கொள்ளும் அனைவரும் மனமாற்றம் பெற்று மகிழ்ச்சியை தழைக்கச் செய்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜமாத் செயலாளரான சையத் அசைன் கூறும்போது, ‘மகிழ்ச் சிக்காக கொண்டாடப்படும் விழாக்களில் மதம் குறுக்கிடக் கூடாது. எங்கள் ஊரில் குறுக்கிடவும் செய்யாது. ஆண்டுதோறும் விநா யகர் ஊர்வலத்தில் கணிசமான அளவில் இஸ்லாமியர்களும் கலந்துகொள்வது ஒன்றே இதற்குச் சான்று’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x