Published : 24 Aug 2014 11:03 AM
Last Updated : 24 Aug 2014 11:03 AM

மூலப்பொருள் தட்டுப்பாட்டால் கரூரில் கொசுவலை உற்பத்தி பாதிப்பு: தொழிலாளர்கள் வேலையின்றி தவிப்பு

மூலப்பொருள் தட்டுப்பாட்டால் கரூரில் கொசுவலை உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஹைடென்சிட்டி பாலி எத்திலீன் எனப்படும் ‘ஹெச்.டி.பி.இ.’ கொசு வலைகள் இந்தியாவிலேயே கரூரில்தான் உற்பத்தி செய்யப் படுகின்றன. கரூரில் பிளாஸ்டிக் நூலிழை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மட்டும் 100-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் உள்ளன. மாதத்துக்கு 2 ஆயிரம் டன்னுக்கு மேல் நூலிழை உற்பத்தி செய்யப்படுகிறது.

மேலும், 300-க்கும் மேற்பட்ட கொசுவலை உற்பத்தி நிறுவனங் களும், அவற்றில் 4 ஆயிரம் கொசுவலை உற்பத்தி தறிகளும் செயல்பட்டு வருகின்றன. தொடக் கத்தில் நூற்றுக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு தந்த இந்த தொழில், தற்போது 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்குவதாக உள்ளது. இதிலும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

கரூரில் உற்பத்தி செய்யப்படும் கொசுவலைகளை உள்நாட்டில் விற்பனை செய்வதன் மூலம் ஆண்டுக்கு ரூ.500 கோடி வருவாய் கிடைக்கிறது. ரசாயனம் பயன்படுத்தப்பட்ட கொசுவலைகள் தென்னாப்பிரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.500 கோடி வருவாய் ஈட்டப்படுகிறது.

பெட்ரோலியப் பொருளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் கொசுவலை தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருள் ஹைடென்சிட்டி பாலி எத்திலீன் பிளாஸ்டிக் குருணை ரிலையன்ஸ், ஹால்டியா, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், கெயில் நிறுவனங்கள் மூலம் வாங்கப்படுகிறது. ஒரு கிலோ குருணை ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது அதன் விலை ரூ.135-ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடும் தட்டுப்பாடும் நிலவுகிறது.

ஏற்கெனவே பிளாஸ்டிக் குருணையை வாங்கி, இருப்பு வைத்துள்ள நிறுவனங்கள் மட்டும் பிளாஸ்டிக் நூலிழை மற்றும் கொசுவலை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. மற்ற நிறுவனங்கள் மூலப்பொருள் இல்லாததால், உற்பத்தியை நிறுத்திவிட்டன. இதனால் கரூரில் கொசுவலை உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பல நிறுவனங்கள் செயல்படவில்லை. இதனால் கொசுவலை உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பலர் வேலையின்றித் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஹெச்.டி.பி.இ. கொசுவலை உற்பத்தியாளர்கள் சங்க கவுரவத் தலைவர் ஏ.ஆர்.மலையப்பசாமி கூறியது: பிளாஸ்டிக் குருணை தட்டுப் பாட்டால் கரூரில் கொசுவலை உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளது. மேலும், உள்ளூர் விற்பனை, வெளிநாட்டு ஏற்று மதி பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் கள் வேலையிழந்து தவிக்கின்றனர். எனவே, பிளாஸ்டிக் குருணை கிடைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x