Published : 22 Apr 2015 17:15 pm

Updated : 22 Apr 2015 17:50 pm

 

Published : 22 Apr 2015 05:15 PM
Last Updated : 22 Apr 2015 05:50 PM

அரசு மருத்துவமனையில் குழந்தைகள் மரணம்: ஸ்டாலின் கேள்வி

தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்ட அரசு மருத்துமனைகளிலும் இறந்த பச்சிளங்குழந்தைகளின் தாய்மார்களும் மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் பயனாளிகளா? என்று சுகாதாரத்துறை அமைச்சரிடம் திமுக பொருளாளர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக ஃபேஸ்புக் பக்கத்தில் ஸ்டாலின் எழுதியுள்ள பதிவில் ''விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையிலும், மருத்துவக்கல்லூரியிலும் சமீபத்தில் பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து மரணம் அடைந்தது மாநிலம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளதோடு மட்டுமின்றி மிகுந்த வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

அரசின் மெத்தனத்தால் இந்த முறை 9 பச்சிளங்குழந்தைகள் மரணம் அடைந்துள்ளனர். இந்த வருடத்தின் துவக்கத்தில் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த மருத்துவமனைகளில் 13 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த நிகழ்வுகள் எல்லாம் அதிமுக அரசில் பச்சிளங் குழந்தைகளுக்குரிய சிகிச்சை அளித்து அவர்களைக் காப்பாற்ற முடியாத நிலையில் தான் அரசு மருத்துமனைகள் இயங்குகின்றன என்பதை எடுத்துரைக்கிறது.

இந்த அபாயகரமான நிகழ்வுகள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைப்பதுடன், நாட்டிலேயே சிறந்த சுகதார வசதிகள் கொண்ட மாதிரி மாநிலம் என்று தமிழகத்திற்கு இருந்த பெயரை இழக்க வைத்துள்ளது.

பச்சிளம் குழந்தைகள் மரணம், சிசு மரணம் போன்றவற்றைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று அதிமுக அரசு அறிவித்து வந்தாலும், அவை எல்லாம் வெறும் அறிவிப்பாகவே இன்றைக்கும் இருக்கிறது என்றே தோன்றுகிறது.

2011 தேர்தலின் போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறுத் திட்டத்தின் கீழான மகப்பேறு நிதியுதவி 12000 ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார்கள். அதன்படி இந்த நிதியுதவி கர்ப்பிணிப் பெண்களுக்கு மூன்று கட்டங்களாக வழங்கப்படும். கர்ப்பிணிப் பெண்கள் கால அட்டவணைப்படி தங்களுக்கு வேண்டிய பேறு கால சிகிச்சையைப் பெற முடியும். ஆனால் இப்போது நிகழும் மரணங்களைப் பார்த்தால், இந்த நிதியுதவி கர்ப்பிணிப் பெண்கள் அனைவருக்கும் சென்றடைகிறதா என்றே கேள்வி எழுகிறது.

நேற்றைய தினம் சுகாதாரத்துறையின் உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் கூடியது. அக்கூட்ட முடிவில் வெளியிடப்பட்ட பத்திரிகை குறிப்பில், பச்சிளங்குழந்தைகள் மரணம் பற்றி அக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதற்கான அறிகுறியே இல்லை. அதிமுக அரசின் இந்த இரக்கமற்ற போக்கு திடுக்கிட வைக்கிறது.

மேலும் அந்த பத்திரிகை குறிப்பில், "டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் கடந்த நான்கு வருடங்களில் 26.72 லட்சம் தாய்மார்கள் 2477.95 கோடி நிதியுதவி பெற்றதாக" சுகாதாரத்துறை அமைச்சர் தம்பட்டம் அடித்திருக்கிறார். அப்படியென்றால், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்ட அரசு மருத்துமனைகளிலும் இறந்த பச்சிளங்குழந்தைகளின் தாய்மார்களும் இந்த மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் பயனாளிகளா? என்ற கேள்வியை சுகாதாரத்துறை அமைச்சருக்கு விடுக்க விரும்புகிறேன்.

பத்திரிகைக் குறிப்பில் இது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதால் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன். இந்த மகப்பேறு நிதியுதவித் திட்டம் முறைப்படி செயல்படுத்தப்பட்டிருந்தால் பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டிருக்கும். மருத்துவச் சிகிச்சைக் குறைவால் இவர்கள் இறக்கவில்லை என்று மருத்துவ அதிகாரிகள் கூறியிருப்பதால், இந்த மகப்பேறு நிதியுதவி பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் சென்றைடைய வில்லை என்று எடுத்துக் கொள்ளலாமா?

தமிழகத்தின் சுகாதார மேம்பாட்டுத் திட்டங்களும், உட்கட்டமைப்பு வசதிகளுமே பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறது. மருத்துவமனைகளுக்கு தேவையான உபகரணங்களும் இல்லை, முறையான பராமரிப்பும் இல்லை. கிராமப்புறத்தில் உள்ள மருத்துவமனைகளிளோ காலியாக உள்ள டாக்டர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. சுகாதாரத்துறை இப்படியொரு மோசமான நிர்வாக குளறுபடிகளில் சிக்கியிருப்பதால், பச்சிளம் குழந்தைகள் மரணம் தொடர்ந்து நடக்கிறது.

மற்றபடி இது மாதிரி துயரங்களும், மரணங்களும் ஒரு பொறுப்புள்ள அரசாங்கத்தால் முற்றிலும் தடுக்கப்படக் கூடிய பணிகளே என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இது விலை மதிக்க முடியாத மனித உயிர் சம்பந்தப்பட்டது. ஏதோ புள்ளிவிவரம் சம்பத்தப்பட்டது அல்ல. அரசின் சுகாதாரத் திட்டத்தில் கவனக்குறைவின் காரணமாக ஒரு குழந்தை இறந்தாலும், அது இறப்புதான் என்பதை அமைச்சர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே மக்கள் நலத் திட்டங்கள் என்ற பெயரில் தங்களை அதிமுக அரசு ஏமாற்றி விட்டதா என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு, அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை ஒழுங்காக நிறைவேற்றியுள்ளார்களா என்று எடை போட்டு பார்க்க வேண்டிய நேரம் தமிழக மக்களுக்கு வந்து விட்டது. தான் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றாத அதிமுக அரசு இனி என்ன புதிய விளக்கத்தைச் சொல்லப் போகிறது?'' என்று ஸ்டாலின் கேட்டிருக்கிறார்.

பச்சிளம் குழந்தைகள் மரணம்தாய்மார்கள்மகப்பேறு திட்டம்பயனாளிகள்ஸ்டாலின்திமுகஃபேஸ்புக் பதிவு

You May Like

More From This Category

More From this Author