Published : 05 Mar 2015 10:01 am

Updated : 07 Mar 2015 12:00 pm

 

Published : 05 Mar 2015 10:01 AM
Last Updated : 07 Mar 2015 12:00 PM

சமத்துவம் மறுக்கும் சவுதி அரேபியா - 11

11

சவுதி அரேபியாவின் கொடியை யார் வேண்டுமானாலும் வரைந்துவிட முடியாது. அதன் கீழ்ப் பகுதியில் உள்ள வாளை வேண்டுமானால் வரையலாம். அதற்கு மேலே இருக்கும் அராபிக் எழுத்துகளை அந்த மொழியை அறிந்தவர்கள்தான் சரியாக எழுத முடியும். வலமிருந்து இடமாகப் படித்தால் அவை கூறுவது “இறைவனைத் தவிர இறைவன் வேறொருவர் இல்லை. முகம்மதுதான் இறைத் தூதர்” என்பதுதான்.

இவ்வளவு மத முக்கியத்துவம் கொடியிலேயே இருப்பதால், துக்க நிகழ்ச்சிகள் நடைபெறும்போது, கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடுவதில் தயக்கம் நீடிக்கிறது. மன்னர் ஃபத் 2005-ல் இறந்தபோது, பிற அரபு நாடுகளின் தலைநகரங்களில் கூட அந்தந்த தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டன. ஆனால் சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் அப்படி செய்யப்படவில்லை.


“எங்கள் அன்பு மன்னர் நெடுங்காலம் வாழட்டும்” இதுதான் சவுதி அரேபியாவின் தேசிய கீதம். முஸ்லிம்களுக்கு மட்டுமே சவுதி அரேபியாவில் குடியுரிமை என்றாலும் பல்வேறு பணிகளில் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

எது போன்றவர்களுக்கு அங்கு வரவேற்பு அதிகம்? சந்தேகமில்லாமல் அரச குடும்பத்தின் அழைப்பை ஏற்று வருபவர்களுக்குத்தான். பெட்ரோலிய வளம் நிறைந்த அரபு நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு அடுத்த கட்ட வரவேற்பு. அதாவது குவைத், கத்தார், பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு. மேலை நாடுகளிலிருந்து வருபவர்கள் அடுத்த பிரிவில் இடம் பெறுகிறார்கள். அதற்கும் அடுத்த இடம்தான் பெட்ரோலிய வளம் இல்லாத அரபு நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு. அதாவது எகிப்து, ஜோர்டான், சிரியா ஏமென், பாலஸ்தீனம் போன்ற நாடுகளிலிருந்து வருபவர்கள். மற்றவர்கள் பிறகுதான்.

என்றாலும் எந்த வகையான வேலைக்கு வருகிறார்கள் என்பதைப் பொறுத்து இந்த வரிசை கொஞ்சம் முன்பின்னாக அமையும். ஒரு நகைத் திருட்டு என்பது சவுதி அரேபியா மற்றும் வேறொரு நாட்டுக்கிடையே பெரும் பகைமையை உண்டாக்கி இருக்கிறது என்பது தெரியுமா?

சவுதி அரேபியாவில் உள்ளது ஃபைஸல் அபுலாஸிஸ் என்ற இளவரசரின் அரண்மனையில் வேலை செய்து கொண்டிருந்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர், அந்த அரண்மனையிலுள்ள நகைகளைத் திருடிக் கொண்டு தன் தாய் நாட்டிற்குப் பறந்து விட்டார். களவு போனது தொண்ணூறு கிலோ எடையுள்ள நகைகளாம்! வைர நகைகள்.

குற்றவாளியை தாய்லாந்து அரசு கைது செய்தது. நகைகளை இளவரசருக்கு அனுப்பியது. ஆனால் திருடப்பட்ட நகைகளில் பாதிகூட திரும்ப வரவில்லையென்றும், வந்தவற்றில் பாதி போலி நகைகள் என்றும் சவுதி அரேபியா குற்றம் சாட்டியது. அது மட்டுமல்ல, தாய்லாந்தின் சக்தி வாய்ந்த சில புள்ளிகள் மற்றும் சீனியர் காவல்துறை அதிகாரிகள் ஆகியோரிடம்தான் பாக்கி நகைகள் சிக்கிக் கொண்டிருக்கின்றன என்ற குற்றச்சாட்டை முன் வைத்தது.

பின்வந்த நாட்களில், தாய்லாந்து மக்களுக்கு விசா கொடுப்பதை படிப்படியாகக் குறைத்துக் கொண்டது சவுதி அரேபியா. ஐந்து வருடங்களுக்கு முன் சவுதியில் வேலை செய்த தாய்லாந்துக்காரர்களின் எண்ணிக்கை சுமார் இரண்டரை லட்சம். இன்றோ வெறும் பத்தாயிரம் பேர்தான்.

தாய்லாந்தில் வசிக்கும் சவுதி அரேபியர்களோ பாதுகாப்பில்லாததாக உணர்கிறார்கள். தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் சவுதியைச் சேர்ந்த நான்கு தூதர்களும், சில வணிகப் பெருந்தலைகளும் கொலை செய்யப்பட்டனர். இதுவரை இந்தக் குற்றங்களுக்காக யார் மீதும் இன்று வரை வழக்குப் பதிவு செய்யவில்லை தாய்லாந்து அரசு.

90 வயதான மன்னர் அப்துல்லா சமீபத்தில் இறந்தபோது அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி பெரிதாக எழுந்தது. இந்த இடத்தில் ஒரு சிறு விளக்கம். 1953-ல் மன்னர் அப்துல் அஜீஸ் அல் சவுத் இறந்தவுடன், ஃபைசல் என்பவர் மன்னரானார். ராஜ குடும்பம், மத குருதமார்கள் ஆகிய இரு தரப்பினரும் முழு ஆதரவும் இவருக்குக் கிடைத்தது. தானே பிரதம மந்திரியும் ஆனார். அன்றிலிருந்து இன்று வரை சவுதி அரேபியாவின் மன்னரும் பிரதம மந்திரியும் ஒருவர்தான்.

அப்பா, அவருக்குப் பிறகு பிள்ளை என்று அரசுப் பட்டம் சென்று விடாது. அதற்காக எந்தக் குழுவும் சேர்ந்து அடுத்த அரசரைத் தேர்ந்தெடுக்காது. பிறகு?

அண்ணாவிலிருந்து தம்பிக்கு என்பதுபோலத்தான் அரசாட்சி மாறி வரும். அப்தெல் அஜீஸ் பின் சவுத் என்பவரின் மகன்தான் சமீபத்தில் மறைந்த மன்னர் அப்துல்லா. ஆனால் அப்துல்லாவுக்கு வேறு 44 சகோதரர்கள் இருக்கிறார்கள்.

இந்த இடத்தில் திய்யா பற்றி ஒரு சிறு விளக்கம். குருதிப் பணம் என அழைப்படும் இந்த முறையில், பாதிக்கப்பட்டவர்கள் ஒப்புக்கொண்டால் மட்டுமே அதனை செயல்படுத்த முடியும்.

அதாவது ஒருவர் கொலைக்கு காரணமாக இருந்தால், கொலை செய்யப்பட்ட நபரின் குடும்பத்தினர் அவரை மன்னிக்கும் பட்சத்தில்தான் தண்டனை ரத்தாகும். மரணத்துக்கு காரணமானவர் அளிக்கும் நஷ்ட ஈட்டை (அபராதத்தை) ஏற்பதும், ஏற்காததும் அக்குடும்பத்தின் விருப்பம். இந்த விஷயத்தில் சவுதி மன்னரோ அல்லது நீதிமன்றமோ கூட இறுதி முடிவெடுக்க முடியாது.

இறந்தவரின் குடும்பம் மன்னிக்காத பட்சத்தில் குற்றவாளிக்கு அரசாங்கம் மரண தண்டனை விதிக்கும். திய்யா என்பது பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தின் நலனை மட்டும் முன்னிட்டு வகுக்கப்பட்ட தீர்வு ஆகும்.

(உலகம் உருளும்)

அரேபியா வரலாறுசவுதி அரேபியா வரலாறுவரலாற்று தொடர்ஆவணத் தொடர்ஜி.எஸ்.எஸ்

You May Like

More From This Category

More From this Author