Published : 07 Mar 2015 20:02 pm

Updated : 07 Mar 2015 20:02 pm

 

Published : 07 Mar 2015 08:02 PM
Last Updated : 07 Mar 2015 08:02 PM

மேகதாதுவை முற்றுகையிடும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு : கருணாநிதி

தமிழ்நாட்டின் நலன்களை உத்தேசித்து மேகதாதுவை முற்றுகையிட்டு விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு திமுகவின் ஒத்துழைப்பும், ஆதரவும் உண்டு என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புப்படி கர்நாடக அரசு, தமிழ்நாட்டிற்கு, ஆண்டு தோறும் 192 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். இதனை 12 மாதங்களிலும் பகிர்ந்து வழங்க வேண்டுமென்று தீர்ப்பிலே கூறப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடக அரசு இதனைக் காதில் போட்டுக் கொள்ளாமல், அங்குள்ள அணைகள் நிரம்பியவுடன் உபரி நீரை மட்டுமே தமிழகத்திற்கு வழங்குகிறது.

இதனால் டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் தொடர்ந்து பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையிலே தான் தற்போது தமிழகத்திற்கு உபரியாக தங்களிடம் உள்ள நீரை வழங்கி வந்த கர்நாடகா, அந்த தண்ணீரையும் தேக்கி வைக்கும் வகையில், கர்நாடகாவிலே மேலும் இரண்டு அணைகளைக் கட்ட தாங்களாகவே முடிவு செய்து, மேகதாது என்ற இடத்தில் அவற்றைக் கட்டுவதற்கான ஆயத்தப் பணிகளிலே ஈடுபட்டு வருகிறார்கள்.

காவிரி ஆற்றில் மேகதாதுவில் அணைகள் கட்டுவது பற்றி கடந்த டிசம்பர் மாதம், அந்த மாநில முதலமைச்சர் சித்தராமையா ''காவிரி டெல்டா பகுதியில் உள்ள மேகதாதுவில் அணைகள் கட்ட கர்நாடக அரசு திட்ட மிட்டுள்ளது. இது தொடர்பாக திட்ட வரைவு தயாரிக்க உலகளாவிய டெண்டர் விடப்பட்டுள்ளது'' என்றெல்லாம் கூறி, ஏடுகளிலே அந்தச் செய்தி வந்தது.

இதற்கிடையே, காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணை கட்ட திட்ட மிட்டுள்ளநிலையில், கட்டுமானப் பொருள்களைக் கொண்டு செல்வதற்கு ஏதுவாக, வனப் பகுதியிலிருந்து மேகதாதுவுக்குச் செல்ல சங்கமத்தில் இருந்து அர்த்தாவதி ஆற்றின் குறுக்கே புதிதாகப் பாலம் கட்டும் பணி மேற்கொள்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் ஏடுகளிலே செய்தி வந்துள்ளது.

இன்னும் சொல்ல வேண்டுமேயானால், காவிரியில் மேகதாது என்ற இடத்தில் 48 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட இரண்டு அணைகளைக் கட்டப் போவதாகவும், இதன் தொடர்ச்சியாக கபினி, ஹேரங்கி, கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி ஆகிய அணைகளுக்குக் கீழே நான்கு தடுப்பு அணைகள் கட்டி, பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்ளப் போவதாகவும், காவிரி கர்நாடக மாநிலத்திற்குள்ளே ஓடும்போது அதைப் பயன்படுத்திடக் கர்நாடகத்திற்கு முழு உரிமை உள்ளதால் தமிழக அரசோ, தமிழ்நாட்டு விவசாயிகளோ இதைத் தடுத்திட முடியாது என்றும்கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் கடந்த ஆண்டு நவம்பரில் தெரிவித்த போதே, அதைப் பற்றி நான் விரிவான கண்டன அறிக்கை ஒன்றை விடுத்திருந்தேன்.

தமிழக அரசும் இந்த அணைகளை கர்நாடக அரசு கட்டக் கூடாது என்று உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதுபற்றி கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா அளித்த பேட்டியில், ''கர்நாடக அரசின் நடவடிக்கையை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்வதுஅந்த மாநிலத்திற்கு எந்தப் பயனும் ஏற்படுத்தாது. தமிழக அரசு எந்த நடவடிக்கை மேற்கொண்டாலும் மேகதாது அருகே அணைகள் கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது.

தமிழக அரசின் எதிர்ப்பு குறித்து கர்நாடகாவைச் சேர்ந்த யாரும் ஆதங்கப்பட வேண்டாம். இரு அணைகள் கட்டும் கர்நாடக அரசின் முடிவை சட்டத்தால் தடுக்க முடியாது'' என்று கூறினார். மத்திய பா.ஜ.க. அமைச்சரும், கர்நாடகத்தைச் சேர்ந்தவருமான அனந்தகுமார் 22-11-2014 அன்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் இரண்டு புதிய அணைகள் கட்ட எடுத்துள்ள முடிவை வரவேற்கிறேன்.

வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மேகதாது திட்டத்தை எதிர்த்து, தமிழக எம்.பி.க்கள் பிரச்சினை எழுப்பினால், அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், கர்நாடக எம்.பி.க்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். மேகதாது திட்டம் பொது மக்களின் நலனுக்காக நிறைவேற்றப்படும் திட்டம் என்பதால் மத்திய அரசு உடனடியாக அனுமதி அளிக்கும்'' என்று நம்பிக்கையோடும், மத்திய அமைச்சர் என்ற முறையில் இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்கும் பொதுவானவர் என்பதை மறந்தும், தெரிவித்தார்.

அதுபற்றியும் நான் எனது அறிக்கையில் அப்போதே தெரிவித்திருந்தேன். கர்நாடக அரசின் அறிவிப்பைக் கண்டித்து, தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளும் - பொதுமக்களும் தங்களுடைய கொந்தளிப்பை உணர்த்திடும் வகையில், 22-11-2014 அன்று முழு அடைப்புப் போராட்டத்தையும், பல்வேறு இடங்களில் சாலை மற்றும் இரயில் மறியல் போராட்டத்தையும் நடத்தியிருக்கிறார்கள்.

போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களும் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவுதெரிவித்திருந்தன.

கர்நாடக மாநிலத்தைப் பொறுத்தவரை, மேகதாது பிரச்சினையில் மாநிலத்தை ஆளும் காங்கிரஸ், மத்திய அரசை நடத்தும் பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே நோக்கத்தோடு, ஒன்றிணைந் திருக்கிறார்கள். ஆனால், தமிழகத்திலோ, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக்கூட்டி ஆலோசனை நடத்திடுக என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்த போது, ''நீ யார் சொல்வதற்கு? பிறருடைய யோசனையை நான் ஏன் கேட்க வேண்டும்; எல்லாம் எனக்குத் தெரியும்'' என்று எதேச்சாதிகாரத் தொனியில் பன்னீர்செல்வம் பதில் கூறினார்.

தமிழக அரசு இந்தப் பிரச்சினையில் தொடர் நடவடிக்கைகள் எதுவும் எடுக்காத நிலையில் தான், கர்நாடக அரசு மேற்கொண்டுள்ள அணை கட்டுமானப் பணிகளைத் தடுத்து நிறுத்தும் வகையில் மேகதாதுவில் முற்றுகையிட காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு செய்து, கிருஷ்ணகிரி மாவட்டம்,தேன்கனிக்கோட்டையில் விவசாயிகள் ஒன்று திரண்டு, அங்கிருந்து 80 கிலோமீட்டர் தூரம் பேரணியாகச் சென்று மேகதாதுவை முற்றுகையிட முடிவு செய்து அறிவித்திருக்கிறார்கள்.

அதற்காக தமிழகத்தின் பல பகுதிகளிலேயிருந்து விவசாயிகள் தேன்கனிக்கோட்டைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களைத் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சியில் தமிழகக் காவல் துறையினர் ஈடுபட்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. தமிழ்நாட்டின் நலன்களை உத்தேசித்து விவசாயிகள் நடத்தும் இந்தப் போராட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒத்துழைப்பும், ஆதரவும் உண்டு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.'' என கருணாநிதி தெரிவித்துள்ளார்.

கருணாநிதிதிமுகமேகதாதுவிவசாயிகள் போராட்டம்ஆதரவுஅறிக்கை

You May Like

More From This Category

More From this Author