Published : 08 Feb 2015 11:22 am

Updated : 08 Feb 2015 11:22 am

 

Published : 08 Feb 2015 11:22 AM
Last Updated : 08 Feb 2015 11:22 AM

சென்னையில் சாலையை ஆக்கிரமிக்கும் கடைகள், வணிக நிறுவனங்கள்: அவதிப்படும் மக்கள்: கவனிப்பார்களா அதிகாரிகள்?

‘நடைபாதை நடப்பதற்கே’ சென்னை மாநகரில் ஒருசில நடைபாதைகளில் இந்த வாசகத்தைக் காணமுடிகிறது. ஆனால், மாநகரில் அனைத்து நடைபாதைகளிலும் பாதசாரிகள் நடக்க முடிகிறதா? பெரும்பாலான இடங்களில் கடைகளின் ஆக்கிரமிப்புகளும் பெயர்ப் பலகைகளும் நடைபாதையையும் தாண்டி சாலை வரை வந்தும் அதிகாரிகள் கவனிக்காதது ஏன்? கேள்விகள் நீள்கின்றன. கடை வைத்திருப்பவர்கள், தங்கள் கடைகளுக்கு முன்பாக உள்ள நடைபாதை மற்றும் சாலைகளை ஆக்கிரமித்து அவர்களது வாகனங்களை நிறுத்திக்கொள்வது ‘வழக்கம்’. போனால் போகட்டும் என்று, வாடிக்கையாளர்களின் வாகனங்களை அனுமதிப்பார்கள். வரிசையாக எல்லா கடைக்காரர்களும் அவரவருக்கு எதிரே உள்ள பகுதியை வளைத்துப்போட, நடைபாதையைப் பறிகொடுக்கும் பாதசாரிகள் வேறு வழியின்றி சாலைக்கு வரவேண்டியுள்ளது. இதனால், விபத்தில் சிக்குகின்றனர்.

உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

பாதசாரிகள் அனுபவிக்கும் இத்தகைய சிரமங்களை விளக்கி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக விளக்கம் அளிக்க மாநகராட்சி, போக்குவரத்து போலீஸ், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கருத்து

இத்தகைய சிரமங்கள் பற்றி பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

எம்.சிவப்பிரகாஷ், தி.நகர்:


வெளி நாடு போல வணிக வளாகங்கள் அமைக்கின்றனர். ஆனால், பார்க்கிங் இல்லை. வெளியே வாகனத்தை விட்டுச் சென்றால், போலீஸார் எடுத்துச் சென்றுவிடுகிறார்கள். கடைகள் செய்யும் தவறுக்கு, நாங்கள் ஏன் குற்றவாளிபோல அபராதம் செலுத்தவேண்டும்?

கே.ராணி, தி.நகர்:

திடீரென விபத்து ஏற்பட்டால், போலீஸாரும் மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்கிறார்கள். 2 வாரம் கழித்துப் பார்த்தால், பழைய நிலை திரும்பிவிடுகிறது.

கே.பார்த்திபன், ஆழ்வார்பேட்டை:

பரபரப்பான அண்ணா சாலையில் காஸ்மோபாலிடன் கிளப்பை அடுத்து தொடர்ச்சியாக 4 உணவகங்கள் உள்ளன. இங்கு சாப்பிட வருபவர்கள் சாலையிலேயே வாகனங்களை நிறுத்து கின்றனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. சாலையில் சென்றபோது, செல்போனில் அழைப்பு வந்ததால் பைக்கை ஓரம்கட்டினேன். உடனே, ஒரு உணவகத்தின் காவலர் என்னை விரட்டினார். அங்குள்ள ஏடிஎம்களை பயன்படுத்த வருவோ ரும் விரட்டப்படுகின்றனர். இதை போலீஸார் கண்டுகொள்வதில்லை. அவர்களுக்கு 3 வேளையும் உணவகங் களில் உணவு வழங்கப்படுவதாகச் சொல்கிறார்கள்.

எஸ்.பிரேமா, திருவல்லிக்கேணி:

ஜாம்பஜார் சந்தைக்கு காய்கறி வாங்கச் சென்றால், திருவல்லிக்கேணி பாரதி சாலையில் ஸ்கூட்டரை நிறுத்த முடிவதில்லை. கடைக்காரர்களின் வாகனங்கள் மற்றும் அந்த கடைகளுக்கு வரும் கஸ்டமர்களின் வாகனங்களுக்கு மட்டுமே அங்கு அனுமதி. அதனால் சுமார் 200 மீட்டருக்கு அப்பால், குறுக்கு தெருக்களில் வாகனத்தை நிறுத்த வேண்டியுள்ளது.

தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.சீனிவாசன்:

தமிழகத்தில் 15 ஆயிரம் நடுத்தர ஹோட்டல்கள் உள்ளன. இதில், சுமார் 1000 அடியில் இயங்கும் 2 ஆயிரம் ஹோட்டல்களுக்கு பார்க்கிங் வசதி உள்ளது. மற்றவை சிறிய ஹோட்டல்கள். இவற்றுக்காக பார்க்கிங் வசதி ஏற்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலிக்க முடி யாது. ஒவ்வொரு பகுதியிலும் ஒரு இடத்தை அரசே தேர்வு செய்து பார்க்கிங் வசதி ஏற்படுத்தி, கட்டணம் வசூலிக்கலாம்.

பொதுநல ஆர்வலர் டிராபிக் ராமசாமி:

எந்த கட்டிடமாக இருந்தாலும் அதற்கு முன்பு 10 அடி இடம்விடவேண்டும். அதுபோல யாரும் கட்டுவதில்லை. சென்னையில் சிஎம்டிஏ-வும், மற்ற நகரங்களில் நகர்ப்புற வளர்ச்சி அதிகாரிகளுமே இதற்கு காரணம். கட்டிட விதிமீறலுக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருப்பது நல்ல முன்னேற்றம்.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஏ.சிராஜுதீன்:

வணிக கட்டிடங்களுக்கு குறிப்பிட்ட அளவு காலியிடம், பார்க்கிங் வசதி அவசியம். குடியிருப்பு கட்ட அனுமதி வாங்கிவிட்டு, வணிக நோக்கத்துக்காக பயன்படுத்தும் முறைகேடு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. கடை, வர்த்தக நிறுவனங்களை அனுசரித்தே போலீ ஸார் நடந்துகொள்வதால், மக்கள் படும் அவஸ்தை அவர்களுக்கு தெரிவதில்லை.

இதுகுறித்து கேட்டபோது, மாநக ராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

காவல், மாநகராட்சி இணைந்து..

சென்னை மாநகராட்சியில் வாகனங்கள் நிறுத்த, தனியார்கள் பராமரிக்கும் 12 ‘மீட்டர் வாகன நிறுத்தங்கள்’, முன்னாள் ராணுவ வீரர்கள் மூலம் பராமரிக்கப்படும் 143 வாகன நிறுத்தங்கள் உள்ளன. சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க, காவல் துறையினருடன் மாநகராட்சி பணியாளர்களும் இணைந்து செயல்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

உரிய நடவடிக்கை

கட்டிட உரிமையாளர்கள் வரைபட அனுமதி பெறும்போது வாகன நிறுத் தத்துக்கு இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாக காண்பிக் கிறார்கள். கட்டிடம் கட்டப்பட்ட பிறகு, அதை வேறு பயன்பாட்டுக்கு விடுகின்றனர். இப்படிப்பட்ட கடை களின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதில் தனி மனித பொறுப்பும் முக்கியம். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, உணவகங்கள் முன்பு வாகனங்கள் நிறுத்தப்படுவது தொடர்பாக விரிவான அறிக்கை தயார் செய்யப்படும்.

இவ்வாறு மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.

போக்குவரத்து போலீஸார்

போக்குவரத்து காவல் அதிகாரி களிடம் கேட்டபோது, ‘‘பொதுமக்களை பாதிக்கும் வகையில் ஆக்கிரமிப்பு செய்யப்படும் இடங்களில் தினமும் நடவடிக்கை எடுக்கிறோம். அத்துமீறி செயல்படும் ஹோட்டல் நிர்வாகிகள், காவலாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

சிஎம்டிஏ அதிகாரிகள் கூறும்போது, ‘‘கட்டிட அனுமதி வாங்கும்போது பார்க்கிங் வசதி இருப்பதுபோல காட்டிவிட்டு வேறு முறையில் வணிக நிறுவனங்கள் கட்டப்பட்டால் அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்படும்’’ என்றனர். சில விதிமீறல்களை ஆதாரத்துடன் அவர்களிடம் கூறிய போது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

(தொகுப்பு: ஆர்.சிவா, டி.செல்வகுமார், கி.ஜெயப்பிரகாஷ், வி.சாரதா, ச.கார்த்திகேயன்)

சென்னை சாலைகள்ஆக்கிரமிக்கும் கடைகள்வணிக நிறுவனங்கள்அவதிப்படும் மக்கள்கவனிப்பார்களா அதிகாரிகள்

You May Like

More From This Category

More From this Author