Published : 26 Jan 2015 14:10 pm

Updated : 02 Feb 2015 13:02 pm

 

Published : 26 Jan 2015 02:10 PM
Last Updated : 02 Feb 2015 01:02 PM

குறள் இனிது - மாமனோ மச்சானோ...

‘அவர் என்ன பெரிய இவரோ? எனக்குள்ள அனுபவம் அவரது வயதைவிட அதிகம்!’ என்று பேசுபவர்களையும், ‘அட விடுப்பா, அந்த அதிகாரி எனது மாமா தான், அவர் தகுதி எனக்குத் தெரியாதா? நான் பார்த்துக் கொள்கின்றேன்’ என்று சொல்பவர்களையும் சந்தித்திருப்பீர்கள்.

பொதுவாக 45, 50 வயதுக்காரர்களுக்கு, 30, 35 வயதுடையவர்களைத் தங்களது மேலதிகாரியாக ஏற்றுக்கொள்வது கடினமாக இருக்கின்றது! ‘அரசர் நம்மைவிட இளையவர் என்றோ, அரசர் நமது உறவினர் தானே என்றோ எண்ணி அமைச்சர் அரசருக்குரிய மதிப்பைக் கொடுக்கத் தவறக்கூடாது’ என்று சொல்லும் குறள் நமக்கும் நல்வழிகாட்டும்!

சற்றே எண்ணிப் பார்ப்போம். உயர் பதவிக்குத் தகுதி என்ன? வெறும் வயது அல்லவே? வயது தரும் அனுபவமும், அதனால் வரும் திறனும் முதிர்ச்சியும் தானே. ஒரே அலுவலகத்தில் சில வருடங்கள் ஒன்றாகவே வேலை பார்க்கும் இருவர் ஒரே மாதிரியாகவா வேலை நுணுக்கங்களைக் கற்றுக் கொள்கின்றனர்? நீங்களே சிலரைப் பார்த்து, இவருக்கு இந்த இளவயதிலேயே இவ்வளவு திட்டமிடும் திறன், அளப்பரிய ஆற்றல், முடிவெடுக்கும் முனைப்பு, கண்காணிக்கும் கண்டிப்பு எப்படி வந்தது என்று வியந்தது உண்டா இல்லையா?

சிறப்பாகப் பணியாற்றும் கெட்டிக்காரத்தனம் சிலருக்கு பிறவியிலேயே அமைந்து விடுகின்றது. வேறு சிலருக்கு உயர் கல்வியினாலோ, நல்ல பயிற்சியினாலோ, வளர்ப்பு சூழ்நிலையினாலோ கிடைத்து விடுகின்றது. இன்றைய உலகில் சிறுவயதிலேயே பெரும் சாதனை படைத்தவர் பலர். உலகின் மிகப் பெரிய மென்பொருள் நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரிகளின் சராசரி வயதே 45 தானாம்! ராஜா ராணி திரைப்பட இயக்குநர் அட்லிக்கு வயது 27. ‘கொலைவெறி’ பாட்டுக்கு இசையமைத்த அனிருத்துக்கு 21. நோபல் பரிசு பெற்ற மலாலாவிற்கோ 17 வயதுதான்!

அடுத்த பிரச்சினை ஒருவரின் உறவினர் அவருக்கு மேலதிகரியாக அமைந்துவிட்டால் வருவது. மனம் அவரை மாமனாக மச்சானாக உறவு குறித்துப் பார்க்குமே தவிர அதிகாரியாகப் பார்க்காது. அவர் இடும் கட்டளைகளை ஏற்க மறுக்கும். தற்காலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் தொடங்கப்பெற்று, அக்குடும்பத்து உறவினர்களாலேயேநிர்வகிக்கப்படும் நிறுவனங்களும் உள்ளன. அப்பா நிறுவனத்தின் தலைவர்; மகன் செயல் இயக்குநர்; சித்தப்பா மாமா பிள்ளைகள் துறை பொறுப்பாளர்கள். அங்கு விற்பனையை அதிகரிக்கக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அப்பொழுது உறவுகளை மறந்து பதவிகளின் தன்மையறிந்து நடந்து கொள்ள வேண்டுமில்லையா? தனிச் சலுகைகளை எதிர்பார்க்கலாமா? உறவு முறை எல்லாம் அலுவலகத்திற்கு வெளியே தானே? ஒருவர் பதவியில் அமர்ந்தபின், அவர் எப்படி அதை அடைந்தார் என்று முணுமுணுப்பதால் என்ன பயன்? பதவி பதவி தான்; அதிகாரம் அதிகாரம் தான். அங்கலாய்க்காமல், சங்கடப்படாமல் அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டுவிட்டால், தினம் தினம் பிரச்சினை இருக்காது! பணியில் உற்சாகம் பிறக்கும்; உத்வேகம் கூடும்; மகிழ்ச்சியும் பெருகும்!!


நல்ல தமிழ்க் குறள் இதோ

இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற

ஒளியொடு ஒழுகப் படும்

குறள் இனிதுசோம வீரப்பன்குறள் வணிகம்

You May Like

More From This Category

economic-of-india

நம்ப முடியவில்லை!

இணைப்பிதழ்கள்

More From this Author