Published : 13 Jan 2015 12:07 pm

Updated : 13 Jan 2015 12:07 pm

 

Published : 13 Jan 2015 12:07 PM
Last Updated : 13 Jan 2015 12:07 PM

பிடித்த வழியில் படிக்கலாமே!

எளிதில் யூகிக்க முடியாதது காட்சி ரீதியான அறிவுத்திறன் என்பதைத் தொடர்ந்து கலந்துரையாடி வருகிறோம். அந்தத் திறன் கொண்டவர்கள் நேர நிர்வாகத்தில் பின்தங்கி இருப்பார்கள். ஆனால், அபாரமான கற்பனைத் திறன் கொண்டிருப்பார்கள். எழுதத் தொடங்கினால் எக்கச்சக்கமாக எழுத்துப் பிழைகள் ஏற்படும்.

ஆனால், அனைவரையும் அசத்தும் விதத்தில் புதிய விஷயங்களைக் கண்டுபிடிப்பார்கள். இந்தத் திறன் கொண்டவர்களின் பலம், பலவீனம் உள்ளிட்ட பல அம்சங்களைப் பார்த்தோம். அந்த வரிசையில், ஒருவர் தன்னிடம் இருப்பது காட்சி ரீதியான அறிவுத்திறன்தானா என்பதை தீர்க்கமாகக் கண்டறிய என்ன செய்ய வேண்டும்? ஊர்ஜிதப்படுத்திய பின் அத்திறனை செழுமைப்படுத்த என்ன செய்ய வேண்டும்? ஆகியவற்றை விவாதிப்போமா?

சவாலே சமாளி

வெறும் கண்ணால் காண்பவற்றை அப்படியே நகல் எடுப்பது காட்சி ரீதியான அறிவுத்திறன் அல்ல. மனக்கண்ணால் பார்த்து, ஆராய்ந்து ஒரு புதிய படைப்பை உருவாக்குவதே உண்மையான திறன். அத்தகைய திறன் உங்களிடம் இருக்கிறதா என்பதை நீங்களே சோதித்துப் பார்க்கலாம்.

ஆடையை புதுவிதமாக வடிவமைக்க முயலுங்கள்.

உங்கள் வீட்டில் ஒரு புதிய அறையைக் கட்ட நூதனமாகக் கட்டுமானத் திட்டத்தைத் தீட்டிப் பாருங்கள்.

ஒரு வணிகப் பொருளுக்குப் புதுமையான லோகோ (logo) அமைக்க முயற்சியுங்கள்.

முழுவதுமாக ஒரு கட்டிடத்தை வடிவமைக்க முயலுங்கள்.

ஒரு ஓவியத்தை பலவிதங்களில் வர்ணிக்கப் பாருங்கள்.

இவையெல்லாம் மிகவும் கஷ்டம் என்று நீங்கள் கருதினால், பெரிதாக ஒன்றும் வேண்டாம். பயணத்துக்குத் தயாராகும்போது உங்கள் பெட்டி, படுக்கை மற்றும் இதர பொருட்களை வைக்க காலி இடத்தை முழுமையாகப் பயன்படுத்தி அத்தனை பொருள்களையும் அடுக்கிவையுங்கள்.

இவை மூலம் நீங்கள் அடிப்படையில் யார் என்பதை நீங்களே கண்டறிந்து கொள்ள முடியும். உங்களுக்குள் அசைக்க முடியாத அஸ்திவாரம் போட்டு உட்கார்ந்திருப்பவர் காட்சி ரீதியான அறிவுத்திறனாளிதான் என்றால், தாமதிக்க வேண்டாம். உங்களுக்குள் இருக்கும் அந்தப் படைப்பாளியைப் உளவியல் நிபுணர் கார்டனரின் வழிகாட்டலில் பட்டைத் தீட்டத் தொடங்குங்கள்.

பிடித்த வழியில் படி

வெள்ளை தாளில் அசைவற்று இருக்கும் கருப்பு எழுத்துகளைப் பக்கம் பக்கமாகப் படிக்கும் போது மனச் சோர்வு ஏற்படும். கணிதம், இயற்பியல் உள்ளிட்ட பாடங்களில் படிப்படியாகச் சமன்பாடு எழுதும்போது, ஒவ்வொரு எண்ணையும் பிரித்துக் காட்ட வெவ்வேறு வண்ணப் பேனாவால் எழுதலாம். பல வண்ணங்கள் உங்களுக்கு உற்சாகமூட்டிக் கவனச் சிதறலைத் தடுக்கும்.

படித்த பாடத்தின் உட்கருத்து மனதில் நின்றாலும் முக்கியச் சொல்லாடல்கள் மறந்து போவதால் திண்டாடுகிறீர்களா? அடுத்து எழுத்துப்பிழை வருகிறதா? எத்தனை முறை படித்தாலும் தவறைத் திருத்த முடியவில்லையா?

இந்த மாதிரியான நேரங்களில், எந்தக் குறிப்பிட்ட எழுத்துகளில் தடுமாறுவீர்களோ அவற்றை மார்கர் பேனாவால் ஹைலைட் செய்து மீண்டும் மீண்டும் எழுதிப் பயிற்சி எடுங்கள். அல்லது, உங்கள் கவனத்தை நீங்களே ஈர்க்க, தவறு ஏற்படும் எழுத்துகளை அளவில் பெரிதாக எழுதிப் படியுங்கள்.

நீங்கள் அன்றாடம் செய்யும் செயல்கள், அடிக்கடி மறந்து போகும் காரியங்கள் எதுவென நினைத்துப் பாருங்கள். உதாரணத்துக்கு, ஐ டி கார்டு, பரிட்சை அனுமதிச் சீட்டு, புத்தகம், பேனா ஆகியவற்றை மறந்துவிடுவோம். இவற்றை வரிசையாக எடுத்துவைக்க எளிய வழி, அட்டவணையின்படி ஒரு ஃபுளோ சார்டாக வரைந்து கொள்ளுவது.

ஒவ்வொரு பெட்டியிலும் நீங்கள் செய்ய வேண்டிய செயல், அதற்குக் கீழே அம்பு குறி போட்டு அடுத்த பெட்டியில் அடுத்த செயலை எழுதுங்கள். ஆரம்ப நாட்களில் அதைப் பார்த்துப் பார்த்து ஒன்றின் பின் ஒன்றாக அடுக்கி வையுங்கள். நாளடைவில் அந்த ஃபுளோ சார்ட் அப்படியே படமாக உங்கள் மனதில் பதிந்துவிடும். அதற்குப் பின் உங்களை யாரும் ஒழுங்கற்றவர் எனச் சொல்லவே மாட்டார்கள்.

சூத்திரங்கள், கடினமான பகுதிகளைப் படிக்கும் போது மரம் போல வரைந்து படிக்கும் முறையான கருத்து வரைபடம் வரைதல் (கான்சப்ட் மேப்பிங்) பெரிதும் கை கொடுக்கும். அதாவது, முக்கியக் கருத்தைத் தலைப்பாக மேல் பாகத்திலும், அதனுடன் தொடர்புடைய கருத்துக்களைக் கிளைகளாக வரைந்து தொடர்புபடுத்தி வாசிக்கலாம்.

இதனோடு ஒட்டி வரக்கூடிய இன்னொரு முறை மூளை வரைபடம் வரைதல் (மைன்ட் மேப்பிங்). இந்த முறையில் மையக் கருத்து நடுவில் வரைய வேண்டும். அக்கருத்தின் முக்கிய அம்சங்கள் மூளையின் நரம்புகள் பிரிந்து செல்வதுபோலப் பல திசைகளில் பிரித்து வரைய வேண்டும்.

இப்படிப் படம், ஃபுளோ சார்ட், கான்சப்ட் மேப்பிங், மைன்ட் மேப்பிங் போன்ற முறைகளில் நீங்களே கைப்பட எழுதிப் படிக்கும் போது மறதி என்ற பேச்சுக்கே இடமில்லை. உங்கள் தனித்திறனின் மூலமே வழக்கமானப் பாடங்களை ரசித்துப் படித்து வெற்றி பெறலாம்.

எல்லாம் சரி தான், ஆனால் ஒவ்வொருவருக்கும் ஏற்றார் போலப் பாடத் திட்டத்தை, படிப்பிக்கும் முறையை மாற்ற முடியுமா? இவ்வளவு திறமை உடையவர்கள் ஏன் இன்னும் கடினமாக முயற்சி செய்து அனைவரும் கற்கும் முறையிலேயே கல்வி பயிலக்கூடாது எனும் கேள்வி எழலாம்.

அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் இந்தக் கேள்விக்கு இப்படி பதில் சொன்னார், “எல்லோரும் மேதைகள்தான். ஆனால் மீனுக்கு மரம் ஏறும் பரிட்சை வைத்துத் தேர்வு முடிவு அறிவித்தால், தான் ஒரு முட்டாள் என்று நம்பிகொண்டே தன் வாழ்நாள் முழுவதையும் கழிக்கும்.” அதாவது, தன் வாழ்நாள் முழுவதும் வருந்திக் கொண்டேயிருக்கும்.

காட்சி ரீதியான அறிவுத்திறன்உளவியல்கார்டனர்கற்பனை உலகம்

You May Like

More From This Category

More From this Author