Published : 17 Jan 2015 12:09 pm

Updated : 17 Jan 2015 12:09 pm

 

Published : 17 Jan 2015 12:09 PM
Last Updated : 17 Jan 2015 12:09 PM

உலக மசாலா: அழகுக்கு இலவச உணவு

ஜோசப் ரெஜினெல்லா நியூயார்க்கில் வசிக்கிறார். இவர் விதவிதமான பொம்மைகளை உருவாக்கக்கூடிய கலைஞர். அவர் சமீபத்தில் உருவாக்கிய பொம்மை வடிவ கட்டில், பயத்தை ஏற்படுத்துகிறது. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ரசிகரான ஜோசப், ஒரு குழந்தைக்காக பொம்மை வடிவக் கட்டிலைத் தன் நண்பருக்குப் பரிசாகக் கொடுத்தார். ராட்சஸ சுறா தன் கோரப் பற்களைக் காட்டியபடி ஒரு கப்பலை விழுங்குகிறது. சுறாவின் வாய்க்கும் கப்பலுக்கு இடையே குழந்தையின் படுக்கை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த விநோத படுக்கை ஜோசப், அவரது செல்லப் பூனைக்குட்டிக்காக உருவாக்கியது. பூனை இறந்துவிட, நண்பருக்குப் பரிசளித்துவிட்டார் ஜோசப்.

பெரியவங்களுக்கே இதைப் பார்த்தால் தூக்கம் வராது… பாவம் குழந்தை…


அகி ராவை கம்போடியாவின் ஹீரோ என்று எல்லோரும் அழைக்கிறார்கள். கம்போடிய காடுகளிலும் வயல்களிலும் சாலைகளிலும் லட்சக்கணக்கான கண்ணிவெடிகள் ஒரு காலத்தில் புதைக்கப்பட்டன. அந்தக் கண்ணிவெடி தாக்குதல்களுக்கு இதுவரை 30 லட்சம் மக்கள் பலியாகியிருக்கிறார்கள். ஏராளமானவர்கள் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டு கால், கைகளை இழந்திருக்கிறார்கள். இதைக் கண்ட அகி ராவுக்குச் சின்ன வயதிலேயே தன் நாட்டு மக்களையும் நாட்டையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது.

கடந்த 22 வருடங்களாக, தனி ஒரு மனிதராக கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார் அகி ரா. ஒரு குச்சி, சிறிய கத்தி, கட்டிங் பிளையர் ஆகியவற்றை வைத்து, இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்ணிவெடிகளை அகற்றியிருக்கிறார். அகி ராவின் சேவையைப் பார்த்த அரசாங்கம், கண்ணிவெடிகளை அகற்றும் வேலையை வழங்கியிருக்கிறது. கண்ணிவெடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, ஒரு பள்ளியை நடத்தி வருகிறார் அகி ரா. கண்ணிவெடிகளை அகற்றி, மனித உயிர்களைக் காப்பாற்றி வருகிற பணிக்காக உலக நாடுகளில் இருந்து பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார் அகி ரா. உலகின் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக சிஎன்என் கவுரவித்துள்ளது.

உயிரைப் பொருட்படுத்தாமல் நீங்க செய்ற சேவைக்குத் தலை வணங்குறோம் அகி ரா!

அழகான தோற்றம் உடையவருக்கு இலவச உணவு என்று அறிவித்திருக்கிறது சீனாவின் ஸெங்ஸொவ் நகரில் இருக்கும் ஓர் உணவு விடுதி. அழகான தோற்றமுடையவர்கள் உணவு விடுதியின் மேல் தளத்துக்குச் செல்ல வேண்டும். அங்கே அவர்களைப் புகைப்படங்கள் எடுப்பார்கள். மருத்துவர் பரிசோதிப்பார். ஆரோக்கியம், உணவு தொடர்பான சில கேள்விகள் கேட்கப்படும்.

அரைமணி நேரம் நடத்தப்படும் இந்தச் சோதனையில் எல்லாம் திருப்தியாக அமைந்தால், இலவசமாக உணவு சாப்பிடலாம். வியாபாரத்துக்குக் கைகொடுக்கும் என்று நினைத்து ஆரம்பித்த இந்த விஷயம், எதிர்மறையான விளம்பரத்தைத் தேடித் தந்துவிட்டது. இதனால் தற்காலிகமாக ’அழகுக்கு இலவச உணவு’ திட்டம் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக உணவு விடுதி அறிவித்திருக்கிறது.

அடப்பாவிகளா… உங்க பார்வையில் அழகா இல்லைனா டபுளா வசூலிப்பிங்களா?

கனடாவில் உள்ள பிரின்ஸ் எட்வர்ட் தீவில் 14 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறுவனால் புதை படிமம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் படிமம் ராயல் ஓண்டாரியோ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு, ஆராய்ச்சி செய்யப்பட்டது. சியன் மாடஸ்டோ என்ற உயிரியியல் பேராசிரியர் செய்த ஆராய்ச்சியில், 30 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, ஊர்வன வகை விலங்கு என்று கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த விலங்கு பற்றி இதுவரை மனிதன் அறிந்திருக்கவில்லை. வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த உயிரினங்கள் பற்றி அறிந்துகொள்ள இந்தப் படிமம் வழிவகுத்திருக்கிறது.

அடடா! சுவாரசியமா இருக்கே…

உலக மசாலா

You May Like

More From This Category

More From this Author