Published : 30 Jan 2015 10:55 am

Updated : 30 Jan 2015 10:55 am

 

Published : 30 Jan 2015 10:55 AM
Last Updated : 30 Jan 2015 10:55 AM

உலக மசாலா: நத்தை மசாஜ்

தாய்லாந்தில் உள்ள ஸ்நெய்ல் ஸ்பாவில் நத்தை மூலம் முகத்துக்கு மசாஜ் செய்யப்படுகிறது. 45 நிமிடங்கள் நடைபெறும் இந்த மசாஜில் 6 நத்தைகள் முகத்தில் விடப்படுகின்றன. நத்தை மெதுவாக ஊர்ந்து செல்லும்போது, வழுவழுப்பான நீரைச் சுரக்கிறது.

இயற்கையாகக் கிடைக்கும் இந்த நத்தை மசாஜ் மிகவும் திருப்தியாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் சொல்கிறார்கள். நத்தை மசாஜ் பெரிய அளவில் வரவேற்கப்படுவதால், உலகின் பல நாடுகளிலும் செயல்படுத்த திட்டமிட்டிருக்கிறார்கள். மசாஜ் செய்வதற்காகவே நத்தைப் பண்ணைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கேரட், கோஸ், கீரை என்று சாப்பிட்டு, ஆரோக்கியமான சூழலில் நத்தைகள் வளர்கின்றன.

அழகு, ஆரோக்கியம்ங்கிற பேரில் என்ன ஆரம்பிச்சாலும் ஓடும் போல!

ஆலிவர் டிராவல் கம்பெனி தங்களின் பணக்கார வாடிக்கையாளர்களுக்காக, புதுமையான திருமண ஏற்பாட்டைச் செய்து தருகிறது. திருமணம் நடக்கும் இடத்தில் மிதமான குளிர்ந்த சூழ்நிலை நிலவுவதற்காகச் செயற்கை மழையைப் பொழிய வைக்கிறார்கள். திருமணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பே மேகங்களைத் திரட்டி, மழை பெய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார்கள்.

திருமண நாள் அன்று வானம் தெளிவாக இருக்க வேண்டும் என்றால் முதல் நாளே மழையைக் கொண்டுவந்து விடுகிறார்கள். திடீரென்று இயற்கையாக மழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருந்தால், அதைத் தள்ளி வைத்துவிடுகிறார்கள். 1940-ம் ஆண்டிலேயே ரஷ்யாவில் பேரணிகள் நடக்கும்போது மழையால் தொந்தரவு ஏற்படாமல் இருக்க மேகங்களை நகர்த்திச் சென்று விடுவார்கள்.

திருமணத்தில் செயற்கை மழை பெய்ய வைப்பதற்காக 92 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள். இங்கிலாந்து, இத்தாலி, பிரான்ஸ் நாடுகளிலும் விரைவில் கிளைகளை ஆரம்பிக்க இருக்கிறார்கள்.

இந்தப் பணத்துக்கு இங்கே எத்தனையோ பேருக்குக் கல்யாணம் பண்ணிடலாம்!

அமெரிக்காவைச் சேர்ந்தவர் 27 வயது மாசன் வார்ட்மன். வால் ஸ்ட்ரீட்டில் பெரிய அளவில் சம்பாதித்துக்கொண்டிருந்தவர், வேலையை ராஜினாமா செய்துவிட்டு பிட்ஸா கடை ஆரம்பித்துவிட்டார். நண்பர்கள் அவருடைய முடிவை முட்டாள்தனம் என்றார்கள். எதற்கும் கவலைப்படவில்லை வார்ட்மன்.

பிலடெல்பியாவில் இருக்கும் அவரது கடையில் ஒரு டாலருக்கு பிட்ஸா விற்கிறார். சாப்பிட வருபவர்கள் தங்களுடைய பிஸாவிலிருந்து ஒரு துண்டை, பசியால் வாடுகிறவர்களுக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறார். வார்ட்மனின் நல்ல எண்ணத்தைப் புரிந்துகொண்ட வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியோடு பிட்ஸா துண்டுகளைக் கொடுத்துவிட்டுச் செல்கிறார்கள்.

ஒரு நாளைக்கு 40 பேருக்கு இலவசமாக பிட்ஸா வழங்குகிறார் வார்ட்மன். சிலர் மிகவும் ஆர்வத்துடன் மறுநாளைக்கு அல்லது மறு வாரத்துக்கும் சேர்த்துப் பணத்தைச் செலுத்திவிட்டு, பசியால் வாடுகிறவர்களுக்கு பிட்ஸாவை அளிக்கும்படிக் கேட்டுக்கொள்கிறார்கள். தான் ஆரம்பித்த இந்தத் திட்டத்துக்குப் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வருவதில் மகிழ்ச்சியாக இருக்கிறார் வார்ட்மன்.

உங்களுக்கும் உங்க வாடிக்கையாளர்களுக்கும் பாராட்டுகள் வார்ட்மன்!

ஆப்பிரிக்க தங்கப் பூனை உருவத்தில் மற்ற பூனைகளை விடப் பெரியது. அரிய உயிரினமாகக் கருதப்படுகிறது. உகாண்டாவில் உள்ள தேசியப் பூங்காவில் வசித்து வரும் ஒரு தங்கப் பூனை புலி, சிங்கம் போல் வேட்டையாடியது கண்டு எல்லோருக்கும் ஆச்சரியம். பூங்காவில் குரங்குகள் கூட்டமாக அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிந்தன. திடீரென்று பாய்ந்த தங்கப் பூனை, குரங்குகளை விரட்டி விரட்டி வேட்டையாடியது.

மிரண்டு போன குரங்குகள் மரங்களில் ஏறித் தப்பிச் சென்றன. பூனையும் மரங்களில் ஏறித் துரத்திச் சென்றது. வீடியோவில் பதிவான காட்சிகளைக் கண்ட ஆராய்ச்சியாளர்களுக்கு வியப்பு. தங்கப் பூனை வேட்டையாடக்கூடியது என்ற தகவல் முதல் முறையாக இப்பொழுதுதான் கிடைத்திருக்கிறது என்கிறார்கள்.

ஒரு சின்னப் பூனை இப்படிக் கதிகலங்க வச்சிருச்சே!

உலக மசாலாநத்தை மசாஜ்தங்கப் பூனை

You May Like

More From This Category

More From this Author