Published : 30 Jan 2015 10:49 am

Updated : 30 Jan 2015 10:49 am

 

Published : 30 Jan 2015 10:49 AM
Last Updated : 30 Jan 2015 10:49 AM

பிரமிப்புகளை அளிக்கும் பிரான்ஸ் 12

12

பிரான்ஸின் அணுகுண்டு சோதனை சம்பந்தமாக இன்னொரு கேள்வியும் எழுந்தது. பிரான்ஸ் தனது அணு ஆயுத சோதனைகளுக்குக் களமாக தனது எல்லையிலேயே ஒரு பகுதியைத் தேர்ந்தெடுக்காமல் முராரோ என்ற பசிபிக் கடற் பகுதியை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்? இந்தக் கேள்விக்கு “பாரிஸ் எப்படி பிரான்ஸின் ஒரு பகுதியோ, அது போல முராரோவும் பிரான்ஸின் ஒரு பகுதியே’’ என்று கூலாக பதிலளித்தார் அன்றைய அதிபர் சிராக். இதைப் பல நாடுகளும் ஒப்புக்கொள்ளவில்லை.

வேதனையான விஷயம் என்னவென்றால் ஹிரோஷிமா, நாகாஸகி நகர்களின்மீது அமெரிக்கா குண்டுவீசிய ஐம்பதாண்டு நிறைவு உலகெங்கும் நினைவு கொள்ளப்பட்ட சில வாரங்களிலேயே பிரான்ஸ் தனது அணு ஆயுத சோதனைகளைத் தொடங்கிப் பலரையும் பீதிக்குள்ளாக்கியதுதான். என்றாலும் 2008-ல் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி, அணு ஆயுதங்களை மூன்றில் ஒரு பங்காகக் குறைத்துக் கொள்வதாக உறுதி அளித்தார்.

சமீபத்திய பிரான்ஸ் வரலாற் றில் ஏற்பட்ட மற்றொரு முக்கிய திருப்புமுனை பிரான்ஸுக்கும், பிரிட்டனுக்கும் இடையே அமைக்கப்பட்ட மிக நீண்ட சுரங்கப்பாதை. கடலுக்குக் கீழ் அமைந்துள்ள இதைக்கட்ட எட்டு வருடங்கள் ஆயின. பல கோடிக்கணக்கான பவுண்டுகள் செலவிடப்பட்டன.

உலகின் தலைசிறந்த தொழில்நுட்பச் சாதனைகளில் இதுவும் ஒன்று என்று கூறப்பட்டது. பிரான்ஸுக்கு பிரிட்டனைவிட நெருக்கமான நண்பன் யார் என்று கேட்டால் அமெரிக்கா என்று கூறிவிடலாம்தான்.அமெரிக்காவின் கவுரவச் சின்னங்களில் ஒன்றான `சுதந்திர தேவி சிலை’ கூட பிரான்ஸை நினைவுபடுத்தும் ஒன்றுதான்.

ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்த பாரீஸை விடுவிக்க அமெரிக்க ராணுவமும் உதவி யதைப் பார்த்தோம். அதேசமயம் பிரான்ஸின் உதவியில்லாமல் அமெரிக்கப் புரட்சியும் வெற்றி அடைந்திருக்காது. கப்பல்கள், ஆயுதங்கள், ராணுவ வீரர்கள் என்று பல விதங்களில் வாரி வழங்கியது பிரான்ஸ். இதற்கு பதில் அங்கீகாரமாக அமெரிக்கா வின் உயர் ராணுவ பதவிகளில் ஒரு பிரெஞ்சு ராணுவ வீரர் நியமிக்கப்பட்டார். பிரான்ஸ் நெகிழ்ந்தது.

அதற்கு சுமார் நூறு வருடங் களுக்குப் பிறகு, அதாவது அமெரிக்க உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பிறகு, பிரெஞ்சு மக்கள் பலரும் அமெரிக்காவைப் பாராட்ட நினைத்தார்கள். அங்கு ஜனநாயக ஆட்சி அமைந்ததும், அடிமை முறை முடிவுக்கு வந்த தும் அவர்களை மகிழ வைத்தன.

பிரான்ஸும், அமெரிக்காவும் இரு சகோதரிகள் என்று வர்ணித்துக் கொண்டார்கள். இந்த இரு நாடுகளும் தொடர்ந்து நட்புடனேயே இருந்து வந்தன என்பது உண்மை. இன்னும் 11 வருடங்களில் அமெரிக்க சுதந்திரத்தின் நூறாவது ஆண்டு கொண்டாட இருப்பதை உணர்ந்தபோது கருத்துகள் தீர்மானம் ஆனது. என்றென்றும் நிலைக்கும்படி ஒரு சிலை பரிசாக அளிக்கலாம்!

பிரெடரிக் அகஸ்த் யர்தோல்டி என்ற சிற்பியிடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. பிரம்மாண்டமாக உருவானது சுதந்திர தேவியின் சிலை. இது பிரான்ஸ் மக்களின் அன்பளிப்பு. அது மட்டுமல்ல ஒருவிதத்தில் கலங்கரை விளக்கமும்கூட. அமெரிக்காவின் வரவேற்புச் சின்னமாக அது மாறிப்போனது.

அரசியல் தளத்தைப் பொறுத்தவரை பிரான்ஸின் அடுத்த அதிபர் தேர்தல் 2017-ல்தான். ஆனால் ஏற்கெனவே அதற்கான போட்டி தொடங்கி விட்டது போலத்தான் தோன்றுகிறது.

2007லிருந்து 2012வரை பிரான்ஸ் அதிபராக விளங்கியவர் நிகோலஸ் சர்கோஸி. இவர் மைய-வலதுசாரி கூட்டமைப்புக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இப்போது பிரான்ஸில் இருகட்சித் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதால், இவர் தேர்ந்தெடுக்கப்பட்டது முக்கியத்துவம் பெறுகிறது. கட்சியை இணைப்பது என்பது இவருக்குப் பெரும் சவாலாக இருக்கும்.

2002 தேர்தலில் தோற்றால் பொது வாழ்விலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார் சர்கோஸி. (ஒருவேளை தன் தோல்வியை அவர் எதிர்பார்க்க வில்லையோ என்னவோ!). ஆனால் வென்றது பிரான்சுவா ஹொலாந்துதான். என்றாலும் கட்சியின் வேண்டுகோளுக் கிணங்க மீண்டும் சர்கோஸி அரசிய லுக்கு வந்திருக்கிறார்.

ஹொலாந்துவுக்கு சர்கோஸி யின் தேர்வு இனிப்பானதாக இருந்தால் வியப்பில்லை. ஏனென்றால் அவரது ஆட்சியில் ஏற்பட்ட கசப்புகள் சீக்கிரத்தில் மறைந்து விடாது என்பது ஹொலாந்துவின் எண்ணம்.

இதற்கு நடுவே லீ பென் என்ற பெண்மணி தனது கட்சியினரின் 100 சதவிகித ஆதரவைப் பெற்று முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறார்.

ஆனால் எல்லாவற்றையும் விட பிரான்ஸ் குறித்த இத் தொடரின் தொடக்கத்தில் குறிப்பிட்ட சார்லஸ் ஹெப்டோ துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் தாக்கம்தான் பிரான்ஸை அதிகம் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.

தீவிரவாத தாக்குதலுக்கு பலியானவர்களுக்கு பள்ளிகளில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் ஒரு நிமிடம் மவுனம் காக்க வேண்டுமென்று அறிக்கை விட்டார் கல்வி அமைச்சர். ஆனால் சில மாணவர்கள் இதற்கு உடன் படவில்லை எனும்போதுதான் நிலைமையின் தீவிரம் புரிந்தது.

ஒரு பள்ளியில் படிக்கும் மாண வர்களில் மூன்றில் இரண்டு பேர் “நபிகள்நாயகத்தை கார்டூனாக வரைந்திருக்கக் கூடாது. மத நம்பிக்கைகளை எந்தக் காரணம் கொண்டும் கொச்சைப் படுத்தக் கூடாது’’ என்று தெளிவாகவே கூறினார்கள்.

பிரான்ஸ் மதச்சார்பற்ற நாடுதான். இனி வருடத்துக்கு ஒரு முறை பள்ளிக்கூடங்களில் மதச் சார்பற்ற சட்டங்களை விளக்கும் வகையில் ஒரு தினம் ஒதுக்கப்படும் என்று கூறியிருக்கிறார் கல்வி அமைச்சர்.

பிரான்ஸ் அரசு அவசர அவசர மாக பள்ளி ஆசிரியர்களுக்குப் புதிய பயிற்சிகளைக் கொடுக்கத் தொடங்கியுள்ளது. தீவிரவாதி களை எப்படிக் கையாள்வது என்ப தோடு, மத விரோதம் பள்ளி மாணவர்களுக்கிடையே பரவாமல் எப்படி பார்த்துக் கொள்வது என் பதையும் சொல்லிக் கொடுக்கத் தொடங்கியிருக்கிறது. மாணவர் களுக்கு நல்லொழுக்க வகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

(அடுத்து கரடியிடம் மோதும் தவளை நாடு)


வரலாற்றுத் தொடர்ஆவணத் தொடர்ஜி.எஸ்.எஸ்பிரான்ஸ் வரலாறு

You May Like

More From This Category

More From this Author