Published : 22 Jan 2015 15:12 pm

Updated : 22 Jan 2015 15:12 pm

 

Published : 22 Jan 2015 03:12 PM
Last Updated : 22 Jan 2015 03:12 PM

தெய்வத்தின் குரல் - சூரிய, சந்திர மௌலீச்வரி

எடுத்த எடுப்பில் அம்பாளுடைய சிரஸை வர்ணிப்பதற்கு ஏற்றக் கவித்துவ சிகரமாகக் கற்பனைகளைக் கொட்டியிருக்கிறார் ஆதிசங்கரர் செளந்தர்யல ஹரியில். தகதக என்று சூரியனின் பிரகாசம் மாதிரியான கம்பீரமும், குளுகுளுவென்று சந்திரனைப் போன்ற மாதுர்யமும் கூடின கற்பனையையும் வாக்கையும் பார்க்கிறோம். சூர்ய, சந்திரர்கள் இரண்டு பேரையும் அம்பாள் சிரசிலே சேர்ப்பதாகவே சுலோகம் அமைந்திருக்கிறது.

ஆற்றொழுக்கு, தேனொழுக்கு என்று சொல்கிற மாதிரி லலிதமான வாக்குகளால் ரம்மியமான அபிப்பிராயங்களைச் சொல்வதை சமஸ்கிருதத்தில் 'வைதர்பீ ரீதி' என்பார்கள். 'விதர்ப தேசத்து Style' என்று அர்த்தம். அந்தச் சீமையின் கவிவாணர்கள்தான் ஆதியில் இந்த ஸ்டைலில் தேர்ச்சி பெற்றிருந்திருக்க வேண்டும். 'கௌடீ ' என்கிற ஸ்டைல் கௌடதேசமான வங்காளத்தில் தோன்றி பிரசித்தி அடைந்திருப்பது.

இதில் அபிப்ராயங்கள் எளிதில் புரியாததாக இருக்கும். வாக்கும் ஆர்பாட்டமாக இருக்கும். 'ஸெளந்தர்ய லஹரி'யில் இரண்டு ஸ்டைலையும் கலந்துதான் பண்ணியிருக்கிறார். ‘ஜனனி' என்று முன் சுலோகத்தில் ரொம்பக் கிட்டக்கே கொண்டு வந்து விட்டதால், அவளுடைய கம்பீரம், மஹிமை தெரியாமல் போக விடப்படாது என்ற மாதிரி இங்கே தடபுடலாகக் கொஞ்சம் கடபுடவென்றே ஆரம்பித்திருக்கிறார்.

அபிப்ராயமும் (சுலோகத்தின் கருத்தும்) complicated ஆகத்தான் இருக்கிறது. லஹரி, பி்ரவாகம் அடித்துப் புடைத்துக் கொண்டு வருகிற மாதிரி இந்த செக்ஷனின் ஆரம்பம் இருக்கிறது. தேவலோகத்திலிருந்து தடதடவென்று வந்த கங்கை ஈச்வரனுடைய சிரசில் சேர்ந்த பிறகு வேகத்தைக் குறைத்துக் கொண்ட மாதிரி, அம்பாளுடைய சிரசு சம்பந்தமான வர்ணனை முடிந்த அப்புறம் அடுத்த சுலோகங்களின் style தணிந்து சாந்தமாகிறது.

சூரிய, சந்திரர்களை அம்பாளின் சிரசில் சேர்த்திருப்பதாகச் சொன்னேன். அவள் சந்திரசேகரி என்ற விஷயம் முன்னாடியே சொல்லியிருக்கிறது. சூரியசேகரி என்பது புது விஷயம். அதிலும் ஒரு சூரியன் மாத்திரமில்லை. பன்னிரண்டு சூரியர்களையும் தலையில் வைத்துக் கொண்டிருக்கிறாள் என்கிறார்.

சந்திரசேகரன் என்று பிரசித்தமாயுள்ள சுவாமிக்கும் சூரியசேகரன் என்று பெயரிருக்கிறது. பானுசேகரன், தற்காலத்து 'பாநுஷேகர்' என்ற பெயருக்கும் அந்த அர்த்தந்தான். உதயசூரிய ரச்மி லிங்கத்தின் தலையில் விழுகிற தினுசில் அநேக க்ஷேத்ரங்களில் இருக்கிறதல்லவா? அப்போது சுவாமி சூர்யசேகரனாயிருப்பதாகச் சொல்லலாம்.

தலைஞாயிறு என்ற பெயரோடு தஞ்சாவூர் ஜில்லாவிலேயே இரண்டு சிவக்ஷேத்திரங்கள் இருக்கின்றன. ஒன்று வைத்தீச்வரன் கோவிலுக்கு மேற்கே இருப்பது. தேவாரத்தில் அதற்குக் கருப்பறியலூர் என்று பெயர். இன்னொரு தலைஞாயிறு திருத்துறைப்பூண்டி தாலுகாவில் இருப்பது. அங்கே சிவலிங்க சிரசில் சூரிய கிரணம் இருப்பதாலேயே 'தலை ஞாயிறு' என்று பெயர் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள்.

கனகமணி என்று சொன்னால் ஆகாசத்தில் மணி மாதிரிப் பிரகா சித்துக் கொண்டிருக்கும் சூரியன் என்று அர்த்தம். நம்முடைய பூலோகமும் நவக்கிரகங்களும் ஒரு சூரியனைச் சுற்றி வருவதால், universe (விச்வம்) என்பதிலேயே ஒரு சூரியன்தான் உண்டு என்றில்லை.

இன்னும் எத்தனையோ சூரியர்கள். நட்சத்திர மண்டலங்கள் உண்டு. துவாதச ஆதித்யர்கள் என்பதாகப் பன்னிரண்டு சூரியர்கள் இருப்பதாக சாத்திரம் சொல்கிறது. விச்வாகாரிணியான அம்பாளுடைய சிரசில் உள்ள கிரீடத்தில் ரத்னகற்களாக இழைக்கப்பட்டிருப்பதெல்லாம் அந்த நாலா சூரியர்களுந்தான் என்கிறார்.

'ஸாந்த்ர கடிதம்' என்றால், 'நெருக்கமாக இழைக்கப்பட்ட' என்று பொருள். இப்படி அவள் சூரியசேகரியாக இருப்பதைத்தான் சுலோகத்தின் முதல் வரி சொல்கிறது. வர்ணனை ஆரம்பத்திலேயே இவ்வளவு கண்ணைக்கூசும்- கண்ணைப் பறிக்கும் என்றே சொல்ல வேண்டும் - பிரகாசத்தை, உஷ்ணத்தைச் சொன்னதற்கு மாற்றாக அடுத்த வரியில் அம்பாளைக் குளிச்சியாக 'ஹிமகிரிஸுதே‘ என்கிறார்.

ரக்த ஜோதியாக ஆயிரம் உதய சூர்யகாந்தியோடு இருக்கிற காமேச்வரியை, முதலிலேயே ஏகப்பட்ட சூரியர்களைச் சொல்லி விட்டதால், பச்சைப் பசேல் என்ற ஹிமகிரி குமாரியான பார்வதியாகச் சொல்லிக் கூப்பிடுகிறார். ஏறக்குறைய ஸ்தோத்ரம் முடிகிற இடத்தில்

(சுலோ-96) பார்வதியாக ஆவிர்பவிப்பதற்குப் பூர்வாதாரத்தில் தக்ஷணின் பெண்ணாக வந்தபோது அவளுக்கு இருந்த ‘சதி' என்ற பேரைச் சொல்லி, 'தவ ஸதி ஸதீநாம் அசரமே' என்று கூப்பிடுகிறார்.

சதி தக்ஷணின் யஜ்ஞகுண்டத்தில் சரீரார்ப்பணம் பண்ணினவள். ஆனால் சாம்பலாக முடிந்து போகாமல், நேர்மாறாக ஜீவ சாரமான பச்சை நிறத்தில் பச்சென்று பார்வதியாக அவதாரம் செய்தாள். அக்னி குண்டத்திலிருந்து நேரே ஐஸ் மலைக்குப் போய் அங்கே பசுமையாக ரூபம் எடுத்துக் கொண்டாள்.

அம்பாளை ஆசார்யாள் ரொம்பவும் உஷ்ணத்துக்கு அப்புறம் 'பனி மலையின் பெண்ணே' என்றவுடன் ஜில்லென்றாகி கிரணங்களைப் பொழியும் 'சந்த்ர சகலம்' என்ற பிறைச்சந்திரனைச் சொல்லி நன்றாகத் தாப சமனம் செய்து விடுகிறார்.

தெய்வத்தின் குரல்காஞ்சி பெரியவர்காஞ்சி பெரியவா

You May Like

More From This Category

More From this Author