Published : 25 Sep 2014 13:21 pm

Updated : 25 Sep 2014 13:21 pm

 

Published : 25 Sep 2014 01:21 PM
Last Updated : 25 Sep 2014 01:21 PM

அறிவுத் தேன் சொட்டிய ஆன்மிக மலர்

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என வாழ்ந்த துறவிகள் இந்தியாவில் ஏராளம். அவர்களில் ஒன்றுபட்ட பஞ்சாபில் பிறந்த பாபா மலாங்க் சாகிப் முக்கியமானவர். அவர் 1920-களில் ஹோசியார்பூரில் பிறந்தார். அவரது அப்பா குலாம் முகமது. தீவிர மதப்பற்று உள்ளவர். அம்மா சவுரான் பீபீ. அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் முகம்மது உசேன் பக் ஷ்.

அவரது அம்மா இஸ்லாமிய சூபி துறவிகள் உள்ளிட்ட மகான்களைப் பின்பற்றுபவராக இருந்தார். அக்காலத்தில் மக்கள் மத்தியில் புகழ்பெற்ற முறையில் வாழ்ந்த பாபா ஜோதி ஷா, பாபா நாராயண தாஸ் உள்ளிட்ட பல மகான்களைக் காண தனது மகனோடுச் செல்வது அவரது வழக்கம். உசேன் சின்ன வயதாக இருந்த போதே அவரது அம்மா இறந்து போனார்.

உசேன், இஸ்லாமிய மதப்பள்ளிக்கு அனுப்பப்பட்டார். தனது அம்மாவின் சூபி வழியிலும் அவர் வளர்ந்தார். அவரது அம்மாவின் விருப் பத்தின்படி அவர் இஸ்லாமிய சூபித் துறவிகளோடும் தனது தொடர்புகளை வளர்த்துக் கொண்டார். அந்த துறவிகள் அவருக்குக் கல்வி அளித்தனர். பாபா மஜ் தீன் எனும் துறவி அவருக்கு ஆசிரியர் ஆனார். அவர்தான் பாபா மலாங்க் என்ற பெயரை உசேனுக்கு வைத்தார்.

ஆன்மிகத்திற்கு அறிமுகம்

பாபா மஜ்தீனுக்கு புகழ் பெற்ற உருதுக் கவிஞர் முகம்மது இக்பால் உள்ளிட்ட பல முக்கியமான அறிஞர்கள் நண்பர்களாக இருந்தனர். அவர்களையெல்லாம் பாபா மலாங்குக்கும் அவர் அறிமுகம் செய்து வைத்தார்.

பாபா மஜ்தீன் பிரிட்டிஷ் ரயில்வேயில் சிறிது காலம் பணியாற்றினார். தனது சீடர் பாபா மலாங்குங்கும் ரயில்வேயில் பணி கிடைக்கச் செய்தார். அரசுப் பணியில் இருந்தாலும் அவரது சமூகப் பணியும் ஆன்மிகப் பணியும் மேலும் மேலும் அதிகரித்து வளர்ந்தன.

தனது குருவையும் மிஞ்சிய சமூகச் சிந்தனையாளராக பாபா மலாங்க் விளங்கினார். வஹ்தாத் – அல்- உஜூத் எனும் சூபி வழிமுறையை அவர் பின்பற்றினார். அனைத்திலும் கடவுள் இருக்கிறார். அனைத்தும் கடவுளுக்கு உள்ளேதான் இருக்கிறது என்று அவர் நம்பினார். அதனையே மற்றவர்களுக்கும் போதித்தார்.

எல்லா உயிர்களும் சமம்

அவர் மனிதர்களை மட்டும் அல்ல; அனைத்து உயிர்களையும் நேசித்தார். அவருக்கு மனிதர்கள் உள்ளிட்ட எல்லா உயிரினங்களும் ஒரே சமூகப் பிரிவுதான். அவர் தோலால் செய்யப்பட்ட எந்தப் பொருளையும் பயன்படுத்த மாட்டார். அவர் தோல் காலணிகளை ஒருபோதும் அணிந்தது கிடையாது. ஒருபோதும் மாமிசம் உண்டதும் இல்லை.

அனைத்து உயிர்களையும் நேசித்த அவரது சிந்தனைகள் இயல்பாகவே இந்தியச் சுதந்திரப் போராட்டத்தை ஆதரிக்கும் நிலைக்குக் கொண்டு சென்றன. பஞ்சாபுக்கும் உள்ளும் வெளியிலும் இருந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் பலரை அவருக்குத் தெரியும். புரட்சி வீரர் பகத்சிங், காங்கிரசிலும் கம்யூனிஸ்ட் இயக்கத்திலும் செயல்பட்டஅமீர் ஹைதர் கான், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோருக்குப் பலவிதங்களிலும் உதவுபவராக அவர் மாறினார். அவரது இருப்பிடமே சமூப் பிரச்சினை களை ஆராயும் ஆய்வுக்கூடமாக விளங்கியது. மார்க்சியம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் சித்தாந்தங்களும் அங்கு விவாதிக்கப்பட்டன. பலருக்குப் போதிக்கப்பட்டன. அவர் இருக்கும் இடம் பெரும் அறிஞர்கள் வந்து அறிவைப் பருகியும் வழங்கியும் செல்லும் இடமாக இருந்தது.

பிரிவினையை எதிர்த்தவர்

இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையை பாபா மலாங்க் எதிர்த்தார். அதையொட்டி நடந்த வன்முறைச் சம்பவங்களின்போது அவர் வன்முறைக் கும்பல்களுக்கு எதிராக மக்களைப் பாதுகாக்கப் பல முயற்சிகளைச் செய்தார். தனது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் மக்களைக் காப்பாற்றிப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தார். அறிவுத் தேனீக்கள் வந்து தேனைப் பருகிச் செல்லும் பெரும் ஆன்மிக மலராக வாழ்ந்த பாபா மலாங்க் 1995 அக்டோபர் 31-ல் காலமானார். அவரது குருவின் அருகிலேயே முகல்புரா எனுமிடத்தில் அவர் புதைக்கப்பட்டுள்ளார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

அறிவுபாபாஆன்மிகம்பாபா மலாங்க் சாகிப்இஸ்லமியர்கள்மக்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author