Published : 21 Aug 2014 08:32 am

Updated : 21 Aug 2014 09:42 am

 

Published : 21 Aug 2014 08:32 AM
Last Updated : 21 Aug 2014 09:42 AM

ரஜினி போல நான் சூப்பர் ஸ்டார் அல்ல: ஷாரூக் கான் பேட்டி

நடிப்பால் மட்டுமின்றி நாவன்மையாலும் மக்களைக் கவரும் பாலிவுட் ஸ்டார் ஷாரூக் கான் நடிக்கத் தொடங்கி 26 ஆண்டுகள் ஆகின்றன. ‘ஃபவுஜி’ என்னும் தொலைக்காட்சித் தொடரில் தன் நடிப்புப் பயணத்தைத் தொடங்கிய இந்த வசீகர நட்சத்திரம், தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் தனது ‘ஹேப்பி நியூ இயர்’ என்னும் படத்துக்கான டிரெயிலரை வெளியிடத் தயாராக இருக்கிறார். 48 வயதான இந்த நட்சத்திரத்தை அவரது மும்பை அலுவலகத்தில் சந்தித்துப் பேசியதிலிருந்து…

நடிப்பைப் பொறுத்தவரை நீங்களே உருவாக் கிக்கொண்ட சூத்திரத்திற்குள் சிக்கிக் கொண்டு விட்டதாக உணர்ந்திருக்கிறீர் களா?


நான் வெகுஜன சினிமாவில் இருக்கிறேன். அதற்கென்று சில அளவுகோல்கள் இருக்கின்றன. அந்த அளவுகோல்களின் எல்லைக்குள்தான் நான் இருக்கிறேன். அந்த வேலியை உடைத்துக்கொண்டு வெளியே வர வேண்டும் என்று நினைக்கும்போது ‘சக் தே இந்தியா’, ‘ஸ்வதேஷ்’, ‘மை நேம் ஈஸ் கான்’, ‘பஹேலி’, ‘அசோகா’ போன்ற படங்களில் நடிக்கிறேன்.

நான் வேலை செய்ய வேண்டுமே என்பதற்காக இந்த வேலையைச் செய்யவில்லை. பணத்துக்காகச் செய்யவில்லை. யாருக்கோ கட்டுப்பட்டுச் செய்யவில்லை. வேறு எந்த வேலையும் இல்லை என்பதற்காகச் செய்யவில்லை. இது உண்மையிலேயே அருமையான வேலை என்று நான் நினைப்பதால் செய்கிறேன். ஒவ்வொரு படத்துக்கும் அதன் கதை கோருவதைவிடவும் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கிறது.

ஒரு படத்தில் ஒரு குறிப்பிட்ட அம்சம் இந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்று இந்தத் துறையில் இருக்கும் யாராவது சொன்னால் அதை நாங்கள் செய்கிறோம். ஏனென்றால் இது வெகுஜன உலகம். வெகுஜனச் சந்தை. ஆனால், இதைக் கொஞ்சம் மாற்றலாமே, இப்படி நிறைய வந்துவிட்டதே என்றும் நான் சொல்வேன். மாற்றம் என்பது கொஞ்சம் தான் இருக்கும். வணிக சினிமா அளவுகோல்களிலிருந்து கொஞ்சம்தான் மாறியிருக்கும்.

எல்லாப் படங்களிலும் ஷாரூக் கான் ஷாரூக் கானாகவேதான் இருக்கிறார் என்று விமர்சகர்கள் சொல்லும்போது அதை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

என்னுடைய நடிப்புத் திறனை நான் அடக் கியே வாசிக்கிறேன். நான் என்னை சீரியஸான நடிகனாக நினைத்துக்கொள்வதில்லை ஆனால் அதற்காக நான் சீரியஸான நடிகர் அல்ல என்று அர்த்தமில்லை.

நான் நிறைய நடித்திருக்கிறேன். அதுபற்றி எனக்குப் பெருமிதமும் கர்வமும் உண்டு. நான் மேடை நாடகங்களில் நடிப்பைப் பயின்றவன். வீதி நாடகங்களில் நடித்திருக்கிறேன். ஒத்திகை இல்லாமல் நடித்திருக்கிறேன். விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறேன். குழந்தைகளுக்கான நாடகங்களில் நடித்திருக்கிறேன். பஞ்சாபி சீரியலில் நடித்திருக்கிறேன். டிவி ஷோக்கள் செய்திருக்கிறேன். சினிமாவில் நடித்திருக் கிறேன். அடி மட்டத்திலிருந்து படிப்படியாக மேலே வந்திருக்கிறேன். ஒன்றும் தெரியாத ஒருவரால் 25 ஆண்டுகளாகச் சீராக வளர்ச்சி பெற முடியாது. பிரியாணி எப்படிச் செய்வது என்று சொல்வது அலுப்பூட்டும் விஷயம். சாப்பிடுவது அருமையான விஷயம். நான் அதைத்தான் செய்துகொண்டிருக் கிறேன்.

ரஜினிகாந்தைப் பற்றிக்கூட இதே விமர்சனத்தைத்தான் முன்வைக்கிறார்கள். நீங்கள் நடிப்பை வெளிப்படுத்தித்தான் ஆக வேண்டுமா என்பதுதான் கேள்வி.

ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார். நான் சூப்பர் ஸ்டார் அல்ல. நான் உழைக்க வேண்டும். நான் என்னைப் புதிதாகக் கண்டுபிடித்துக்கொண்டே இருக்க வேண்டும். என்னை மட்டுமல்ல, என்னைச் சுற்றியுள்ள சினிமாவையும் புதிதாகக் கண்டுபிடித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

உங்களால் காமெடி செய்ய முடியுமா என்று சிலர் கேட்கிறார்கள். நான் கடைசியாக காமெடி செய்த படம் பாத்ஷா. மறுபடியும் மக்கள் விரும்பும் விதத்தில் காமெடி செய்யலாம் என்று நான் முடிவுசெய்தேன். என்னால் அதுவும் செய்ய முடியும் என்று நினைக்கிறேன். ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ செய்தேன். அதற்கு முன்னால் ‘ஜப் தக் ஹை ஜான்’. அது கவித்துவமாகச் செய்யப்பட வேண்டிய பாத்திரம். அப்படியும் ஒரு மனிதன் இருக்கிறான் என்று மக்களை நம்பவைக்க வேண்டும். அது காதல் கதை. ஒரு ஆண், பெண், கடவுள் ஆகியவர்களுக்கிடையேயான முக்கோணக் காதல். அதிலும் செயற்கையான காட்சிகள் இருக்கத்தான் செய்யும். ஏனென்றால் அது வெகுஜன சினிமா. அதிலும் ரொமான்ஸ் இருக்கும். ஏனென்றால் அது வெகுஜன சினிமா. இந்த வெகுஜன சினிமாவுக்குள் நான் நானாக தோன்றும்போதும் வித்தியாசமாக இருப்பது எப்படி என்பதுதான் எனக்கு நான் உருவாக்கிக்கொள்ளும் சூத்திரம்.

நேர்மையாகச் சொல்லப்போனால் ‘ஸ்வதேஸ்’, ‘சக் தே இந்தியா’, ‘அசோகா’ ‘பஹேலி’ போன்ற படங்கள் எடுப்பதற்கு எளிதானவை. யதார்த்தமாக எடுப்பது சுலபம். யதார்த்தமான கதைகளில் நாம் செட்டுக்குச் சென்று, பேப்பரில் என்ன இருக்கிறதோ அதைப் பேசினால் போதும். ஒரு கனவை, நிஜமற்ற ஒரு காட்சியை, நம்ப முடியாத விஷயத்தை உள்வாங்கி நம்பும் விதத்தில் வெளிப்படுத்துவதுதான் கஷ்டம். இதுபோன்ற வேடங்களில் நான் கடவுளோடு மல்லுக்கு நிற்க வேண்டும். உலக சாம்பியனாக வேண்டும். இதையெல்லாம் செய்ய முடியும் என்று காட்டுவது ஒரு நடிகனுக்குச் சாதாரண விஷயமல்ல.

யதார்த்தமான ஒரு களத்தில் போய் நின்றதுமே என்னுடைய வேலை 80 சதவீதம் முடிந்துவிடுகிறது. உதாரணமாக மைதானத் தில் ஹாக்கி கோச்சாக நடிப்பது. நிஜ உல கின் பின்னணியில் என்னைக் கொண்டுபோய் நிறுத்தினால் நான் பெரிதாக எதுவும் செய்ய வேண்டாம். நிஜமற்ற பாத்திரங்களில் நடிக்க ஒரு நடிகர் தனது கற்பனையையும் அந்தப் பாத்திரத்தின் மீதான தனது நம்பிக்கையையும் பெரிதும் சார்ந்திருக்க வேண்டும். ஆட்டிசம் என்பது புதிதுதான்; ஆனால் ஆட்டிசம் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியும். அப்படிப்பட்டவர்களைப் பார்த்திருப்பீர்கள். தேவதாஸாக நடிப்பது சுலபம். ஏனென்றால் எல்லா ஆண்களும் அப்படித்தான். யதார்த்தமற்ற, அதீதமான கதாபாத்திரங்களை நடிப்பதுதான் கஷ்டம். நம்ப முடியாத ஒரு உலகத்தை உருவாக்கி அதற்குள் உங்களை ஈர்த்து நம்ப வைக்க வேண்டும். இது ரொம்பவும் கஷ்டமானது.

புனைவு சில சமயம் நடப்பை விடவும் ஆழமாக உண்மைக்குள் சென்றுவிடுகிறது என்று ஃப்ரெஞ்ச் இயக்குநர் ழான் க்லாட் காரியர் சொல்லியிருக்கிறார்…

புனைவு நமது மிக ஆழமான ஆசை களை நிறைவேற்றிக்கொள்ளும் விருப்பம் கொண்டது. நீங்கள் பறக்க விரும்புகிறீர்கள். ஆனால் முடியாது. புனைவு இதை நிறைவேற்றுகிறது.

பாக்ஸ் ஆபீஸில் 300 கோடி வசூலைத் தாண்டுவதுதான் இப்போது புதிய இலக்கா?

200 கோடி வசூலைத் தாண்டிய முதல் படம் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’. எண்களைத் தாண்டிவிடலாம். கனவுகள் நெகிழ்வானவை. என்னுடைய படம் நன்றாக ஓட வேண்டும் என்று விரும்புகிறேன். அப்போதுதான் நான் மேலும் பெரிய படம் எடுக்க முடியும். ‘ஹேப்பி நியூ இயர்’ நன்றாக ஓடினால் ‘ரா ஒன் 2’ எடுக்கலாம். மறுபடியும் சூப்பர் ஹீரோவாக நடிக்க ஆசையாக இருக்கிறது.

கடந்த 25 ஆண்டுகளில் உங்கள் மனநிலை எந்த அளவு மாறியிருக்கிறது?

நான் மேலும் தனியனாகிவிட்டேன். நான் பார்ட்டியில் நேரத்தைக் கழிக்காமல் என்னுடன் அதிக நேரம் செலவிட வேண்டும் என்று விரும்புகிறேன். மக்கள் எப்போதும் என்னைப் பார்க்கவும் பேசவும் விரும்புகிறார்கள். எப்போதும் விளக்குகள் ஒளிர்கின்றன. குரல்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. ட்விட்டரில் எப்போதும் ஏதாவது நடக்கிறது. என் முகத்தில் எப்போதும் வெளிச்சம் பட்டுக்கொண்டே இருக்கிறது. மேலும் அதிகமாக வேலை செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் இன்னும் கொஞ்சம் அதிகமாகக் கதவைச் சாத்திக்கொள்ளலாம் என்றும் தோன்றுகிறது.

கடமை என்னிடம் கோருவதைவிடவும் அதிகமாக நான் மக்களை மகிழ்ச்சியடைய வைக்கிறேன். சில சமயம் பிழைப்புக்காக. சில சமயம் நண்பர்களுக்காக… 25 ஆண்டுகளில் எல்லாவற்றையும் செய்துவிட்டேன். இனிமேலும் எனக்கு மகிழ்ச்சி தராத விஷயங்களைச் செய்வதற்கு எந்தக் காரணமும் இல்லை. இங்கே வா, அங்கே வா, என் படத்தைப் பார் என்றெல்லாம் என்னைக் கூப்பிடுகிறார்கள். எனக்குப் போகப் பிடிக்கவில்லை. படம் எடுப்பது என் வேலை. அவ்வளவுதான். வேறு எந்த அறிவும் எனக்குத் தேவையில்லை.

‘கிங் அங்கிள்’ படத்தில் நடித்தபோது நடந்தே செல்வேன். காலை ஆறரை மணிக்கு மெஹ்பூப் ஸ்டூடியோவுக்கு நடப்பேன். மதியம் இரண்டரை மணிக்குத் திரும்ப வருவேன். மக்கள் என்னை நிறுத்திப் பேசுவார்கள். அப்போது ‘தீவானா’ ஹிட் ஆகியிருந்தது. நான் அந்தப் படத்தைப் பார்க்கவில்லை. நான் எப்போது ஸ்டார் ஆனேன் என்பதும் எனக்குத் தெரியாது.

தமிழில்: அரவிந்தன்

ஷாரூக்கான் பேட்டிஷாரூக் கான்ரஜினிகாந்த்பாலிவுட்

You May Like

More From This Category

More From this Author