Last Updated : 18 Jun, 2014 10:00 AM

 

Published : 18 Jun 2014 10:00 AM
Last Updated : 18 Jun 2014 10:00 AM

விளம்பரம், விழிப்புணர்வு இல்லை; வரவேற்பில்லாத கிராமப்புற சுற்றுலா - மண்ணின் மணம் வீச நடவடிக்கை எடுக்கப்படுமா?

தமிழர்களின் பண்பாட்டை அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாக உருவாக்கப்பட்ட கிராமப்புற சுற்றுலாத் திட்டம் போதிய விளம்பரம், விழிப்புணர்வு இல்லாததால் சுற்றுலாப் பயணிகளை சென்றடையாமல் உள்ளது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஆண்டு முழுவதும் பல்வேறு வகையான சுற்றுலா பயணத் திட்டங்களை வழங்கி வருகிறது. கல்விச் சுற்றுலா, ஆன்மிகச் சுற்றுலா, சாகசச் சுற்றுலா, பசுமைச் சுற்றுலா, ஓய்வுநேரச் சுற்றுலா என்று 14 வகை சுற்றுலா திட்டங்கள் இதில் அடக்கம்.

சீசனுக்கு ஏற்ப இந்த சுற்றுலா திட்டங்களை பிரபலப்படுத்தும் பணிகளை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் செய்துவருகிறது. இதற்காக துண்டுப் பிரசுரங்கள், சுற்றுலாக் கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை சுற்றுலா என்றதும் ஊட்டி, கொடைக்கானல், கன்னியாகுமரி, தஞ்சாவூர், ஒகேனக்கல் என குறிப்பிட்ட சில இடங்கள் மட்டுமே மக்களுக்கு ஞாபகம் வருகின்றன. மற்ற சுற்றுலாத் தலங்கள், சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்காமலேயே உள்ளன.

விளம்பரத்துக்கு பிறகு வரவேற்பு

சில ஆண்டுகளுக்கு முன்பு கொல்லிமலை, மேகமலை உள்ளிட்ட 28 சுற்றுலாத் தலங்கள் குறைந்த ஈர்ப்புள்ள சுற்றுலாத் திட்டங்களாக கண்டறியப்பட்டன. இவற்றை மக்களிடம் பிரபலப்படுத்த அந்தந்த சுற்றுலாத் தலங்கள் உள்ள மாவட்ட தலைநகரங்களில் சிறப்பு விளம்பர பதாகைகள், தலங்களைப் பற்றிய குறிப்புகள் வைக்கப்பட்டன. அதன்பிறகு அந்த இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் வரத்து அதிகரித்தது.

இதேபோல, தமிழர்களின் வாழ்க்கை முறை, பண்பாட்டை பிரதிபலிக்கும் விதமாக உருவாக்கப்பட்ட கிராமப்புற சுற்றுலாத் திட்டங்களும் சுற்றுலாப் பயணிகளை முறையாக சென்றடையாததால் அவை அதிக அளவில் பயன்படுத்தப்படாமல் உள்ளன. கிராமப்புற சுற்றுலாத் திட்டம் மூலம் தென்னகத்தில் கிராமங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் அழைத்துச் செல்லப்படுவர்.

அங்குள்ள வயல்வெளிகள், ஆறுகள், சிறு தெய்வ வழிபாட்டு முறைகள், கிராமப்புற மனிதர்களின் பழக்க வழக்கங்கள், நாட்டுப்புறவியல் நிகழ்ச்சிகள் போன்றவற்றை சுற்றுலாப் பயணிகள் நேரடியாகவே கண்டுகளிக்கலாம்.

கணிசமாக நிதி ஒதுக்கீடு

இன்றைய தலைமுறையினர் பலர் நகர வாழ்க்கை முறையை தேர்ந்தெடுப்பதால் எதிர்கால சந்ததியினர் கிராமப்புற பண்பாட்டை அறிந்துகொள்ள முடியாத சூழல் ஏற்படும். இந்த நிலை உருவாகக்கூடாது என்பதற்காக மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகமும் கிராமப்புற சுற்றுலாத் திட்டத்துக்கு கணிசமாக நிதி ஒதுக்கி வருகிறது. ஆனாலும், இந்த திட்டம் பற்றிய அறிவிப்புகளும் விழிப்புணர்வும் சுற்றுலாப் பயணிகளைச் சென்றடையாததால், இத்திட்டம் பரவலாக பயன்படுத்தப்படாமல் உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலாத் துறை சுற்றுலாத் திட்ட உருவாக்க அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சுற்றுலா செல்ல விரும்பி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தை பலர் அணுகுகின்றனர். எல்லா சுற்றுலாத் திட்டங்கள் பற்றியும் அவர்களிடம் விரிவாக எடுத்துக் கூறுகிறோம்.

பெரும்பாலானவர்கள் ஆன்மிக மற்றும் மலைப் பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்லவே விரும்புகிறார்கள். கிராமப்புற சுற்றுலா திட்டங்கள் உள்பட எல்லா திட்டங்களையும் விளம்பரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x