Published : 09 Apr 2014 09:32 am

Updated : 09 Apr 2014 09:32 am

 

Published : 09 Apr 2014 09:32 AM
Last Updated : 09 Apr 2014 09:32 AM

வலைப்பூ வாசம்: ஓவியம் வரைந்தால் போதுமா?

கல்லூரி பருவத்தில் பிரகாஷ் சந்திராவும் நண்பர்களும் ஆரம்பித்த சித்ரகலா அகாடமியில் மாணவ உறுப்பினராக இணைந்தேன். ஓரிரு வருடத்தில் செயலாளர், பின் உதவி தலைவர், பின் தலைவர் என பொறுப்புகள் என் தலையில். அவர்தான் என் நவீன ஓவிய குருவாக திகழ போகிறார் என்று குழந்தை பருவத்தில் நிச்சயமாக நினைத்திருக்க மாட்டேன். எத்தனை எத்தனை ஓவியக்காட்சிகள்...எத்தனை ஓவியர் கள் என் வாழ்க்கை பாதையில் ! நவீன ஓவியங்கள் குறித்து பல அன்பர்கள் ‘புரியவில்லை’, ‘ஏமாற்று வேலை’ என்றெல்லாம் விமர்சிக்கும்போது எனக்கு மிகவும் கோபம் வரும். இப்போதெல்லாம் வருவதில்லை என்பது ஒரு நல்ல விஷயம்! ஏனென்றால் எனக்கும் இந்த சந்தேகங்கள் வந்துவிட்டன. ஓவியங்களை ரசிக்கும்போது நான் பார்ப்பவை ஓவியரின் உத்திகள், வண்ணங்களின் பயன்பாடு, ஓவியத்தின் உள்ளடக்கம் மட்டுமே. ஓவியங்கள் பார்வை யாளர்களுடன் தொடர்பு கொள்ளும் ஒரு ஊடகம் என்பதில் எப்போதும் எனக்கு நம்பிக்கை உண்டு. அவனை அது தொட வில்லை என்றால் அந்த படைப்பு ஒரு தோல்வி என்றும் திடமாக எண்ணுகிறேன். சில அதி நவீன ஓவியர்களுடன் ஏற்படும் சூடான விவாதங்களில் காரசாரமாக பேசியிருக்கிறேன். ஓவியம் என்பது அவர்களின் சொந்த மன வெளிப்பாடு என்று சொல்லிக்கொண்டு கன்னா பின்னா என்று வரைந்து வைத்த ஓவியர்களிடம், அப்ப இதை எதுக்கய்யா எங்கள் பார்வைக்கு வைக்கிறீர்கள், உங்கள் வீட்டுக்குள்ளேயே வைக்க வேண்டியதுதானே என்றெல்லாம் சண்டை போட்டிருக்கிறேன்.

இப்படி ஒரு சண்டையை ஆதிமூலம் அவர்களுடன் போட்டவுடன்தான் என் ஞானக்கண்ணை அவர் திறந்து வைத்தார்! பிறகு திறந்த மனதுடன் நவீன ஓவியங்களை ரசிக்க தொடங்கினேன். அவருடைய மனவெளி ஓவியங்களில் மனதை பறி கொடுத்தேன். மருதுவின் வீச்சுகள் எனக்கு வீரம் கொடுத்தன...கான்வாஸில்!


என் வளர்ப்பு முழுக்க முழுக்க சினிமா பேனர் பின்னணியில். என் தந்தை முறையாக ஓவியம் படித்ததுபோல் நான் பயிலவில்லை.புகைப்படத்தை போல தத்ரூபமாக ஓவியமும் திகழவேண்டும் என்ற பாரம்பரிய மன ஓட்டமே என்னையும் நடத்தி சென்றது. உருவங்களை சிதைத்து புதிய பாணியை உருவாக்கிய பிக்காசோவுக்கு இளமைக்காலம் இப்படித்தானே! பணிக்கர் முதல்வரான பிறகுதானே, சென்னை ஓவியக் கல்லூரியிலிருந்து இத்தகைய கலைஞர்கள் உருவானார்கள்! பிரகாஷ் சந்திரா போன்ற கலைஞர்களின் தொடர்பு என்னை மனமாற்றத் திற்கு உள்ளாக்கியது! சினிமா பேனர்களில் புதிய உத்திகளை கையாள தொடங்கினேன், என் தந்தையின் எதிர்ப்பை மீறி....புது வண்ண க்கலவைகள், பாரம்பரிய வண்ண பூச்சுகளில் மாற்றம் என்று உருவாக்கியபோது அதற்கும் ரசிகர்கள் உருவானார்கள்.

ஓவிய காட்சிகளில் பல வகையான ஓவியங் களை பார்க்கிறேன். என் நண்பர் நெடுஞ் செழியன் எப்போதுமே பரிசோதனை முயற்சி களில் ஈடுபடுபவர். உத்திகளில் எப்போதும் அதீத ஈடுபாடு. அசுர உழைப்பாளி. முன் னாள் சென்னை ஓவிய கல்லூரி முதல்வர் பாஸ்கரன் பூனைகளை அதிகம் வரைந்தால் இப்போதைய கும்பகோணம் ஓவியக்கல்லூரி முதல்வர் மனோகரனின் ஓவியங்களில் வித விதமான உயிர்ப்புள்ள ஆடுகள் அதிகமாக மேயும் . ரஞ்சித் துணிகளின் சுருக்கத்தில் ஆழ்ந்து விடுவார். சந்தான கிருஷ்ணனுக்கு கதவு களின் மீது காதல் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்!!!!

நான் முதலில் பார்த்த ஓவிய கண்காட்சி எனது பன்னிரண்டு வயதில். ஆர்.எஸ்.புரம் லேடீஸ் கிளப்பில் யூசுப் புராவும் பிரகாஷ் சந்திராவும் நடத்திய நவீன ஓவிய கண்காட்சி . என்னை விட நான்கு வயது இளைய தம்பியும் நானும் தனியாக சென்றோம். ஒரு ரூபாய் நுழைவு கட்டணம்...அது கூட கையில் இல்லை...திரு திரு என்று நின்று கொண்டிருந்த எங்களை பரிதாபமாக பார்த்த பிரகாஷ்ஜி இலவசமாக அனுமதித்தார். ஆர்வமுடன் பார்த்த எங்களிடம், எப்படி இருக்கின்றன ஓவியங்கள் என்று ஆங்கிலத்தில் வினவினார். 'ஒன்றுமே புரியவில்லை' என்று பதிலளித்த என்னை பார்த்து வெடிச்சிரிப்பு சிரித்தார்...'வயதானால் புரிந்துவிடும்' என்று சொல்லி தட்டிக் கொடுத்தார்!!!

வயதானது...புரிந்துவிட்டதா என்ன?

ஓவியர் ஜீவானந்தன் : http://jeevartistjeeva.blogspot.in/

வலைப்பூ வாசம்ஓவியம்

You May Like

More From This Category

More From this Author