Published : 17 Jul 2014 03:32 PM
Last Updated : 17 Jul 2014 03:32 PM

இஸ்ரேலை ஆதரிக்கிறது மோடி அரசு: மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு

காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழி தாக்குதல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி அளிக்காததன் மூலம் மோடி அரசு, இஸ்ரேல் ஆதரவு அரசு என்பதை நிரூபித்திருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்: "துவக்கத்தில், இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளுமே நடைபெறும் வன்முறை சம்பவங்களுக்குக் காரணம் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து வந்தது. இப்படி பொதுவாக கருத்து கூறியபோதும், வெளிப்படையாக தெரியும் காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க மறுத்துவிட்டது.

பின்னர், மாநிலங்களவையில் காஸா பிரச்சினை குறித்து விவாதிக்க முடியாது என மத்திய அரசு பிடிவாதம் காட்டத்துவங்கியது.

அதற்கு, காஸா பிரச்சினை மீது விவாதம் மேற்கொண்டால் இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரண்டு நாடுகளுடனான நட்புறவு பாதிக்கப்படும் என விளக்கம் அளித்தது. இரு நாடுகளில் எந்த ஒரு நாட்டைப் பற்றி குறைத்துப் பேசினாலும் அந்த நாட்டுடனான ராஜாங்க உறவு பாதிக்கப்படும் என தெரிவித்தது.

பாஜகவின் இந்த நிலைப்பாடு உண்மைக்கு புறம்பானது. மேலும், இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினையில் தவறான அணுகுமுறைக்கு இட்டுச் செல்வதாகவும் உள்ளது.

பாலஸ்தீனம் சுதந்திர நாடாக இல்லை, அது இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாக உள்ளது என்பதை பாஜக உணர்ந்து கொள்ள வேண்டும். இஸ்ரேலின் இந்த ஆக்கிரமிப்பு கண்டனத்துக்கு உரியதல்லவா?

இஸ்ரேல் - பாலஸ்தீனம் பிரச்சினையில் இந்திய அரசு ஆண்டாண்டாக எடுத்து வந்த நிலைப்பாட்டையே மோடி அரசு மீண்டும் கையில் எடுத்துள்ளது. மோடி அரசின் இஸ்ரேல் ஆதரவு கொள்கை ஏற்புடையது அல்ல.

பாலஸ்தீனத்தில் நாள்தோறும் அப்பாவி பொதுமக்கள் இஸ்ரேல் தாக்குதலில் பலியாகிவரும் நிலையில், இந்தியா காலச்சூழலுக்கு ஏற்ப தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்". இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x