Published : 04 Jun 2014 12:00 AM
Last Updated : 04 Jun 2014 12:00 AM

பறக்க ஆசைப்பட்ட செடியன்!

ஒரு கிராமத்துல செடியன்னு ஒரு பையன் இருந்தான். அவன் செடி உயரம்தான் வளர்ந்திருந்தான். அதனால் அவனுக்கு அந்தப் பெயர். செடியனுக்கு பறவைகள் போல பறக்க ஆசை.

‘ஆனா நாம மற்றவர்கள் மாதிரி சராசரி உயரம் இல்லையே. நம்மால பறக்க முடியுமான்னு’ ஒரு சந்தேகம்.

சிட்டுக் குருவிக்கிட்ட தன்னோட சந்தேகத்தை கேட்டான் செடியன்.

“செடியா! நான் உன்னைவிட உருவத்தில் ரொம்பச் சிறியவன். ஆனால், என்னாலயே பறக்க முடியும்போது, உன்னால பறக்க முடியாதா என்ன?” எனத் தன்னம்பிக்கையை செடியன் மனசுல வளர்த்துச்சு.

“ஆமாம். ஆமாம். என்னால பறக்க முடியும்” என்று சொல்லிக் கொண்டே ஆற்றுப் பக்கம் வந்தான் செடியன். அங்கு நாரைகள் மீன்களைப் பிடிச்சு சாப்பிட்டுக் கொண்டே இருந்தன.

செடியன் ஒரு நாரையின் அருகே சென்றான் “பறவையே எனக்கு ஒரு உதவி செய்வாயா?” எனக் கேட்டான்.

“என்ன உதவி?” எனக் கேட்டது நாரை.

“உன்னோட இறக்கையில இருந்து ஒரே ஒரு இறகைத் தரியா. நான் பறக்கணும்னு” கேட்டான்.

அந்த நாரையும் ஒரு இறகைத் தந்தது.

மகிழ்ச்சியோடு வாங்கி தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டான். இதுபோல பல நாரைகளிடம் இருந்து ஒவ்வொரு இறகாக வாங்கி சேகரித்துக் கொண்டான்.

அங்கிருந்து மகிழ்ச்சியோட கிளம்பி, கோயில் அருகே வந்தான். அங்கே பூ விற்றுக் கொண்டிருந்த ஒரு பாட்டியிடம் பேசினான்.

“பாட்டி.. பாட்டி.. இந்த இறகுகளை பறவை இறகுகள் மாதிரி கட்டிக் கொண்டு பறக்கப் போகிறேன். எனக்கு இறகுகளை கட்டிக் கொடுக்க முடியுமா?” என்று கேட்டான் செடியன்.

“நான் கட்டிக் கொடுத்தால் எனக்கு நீ என்ன தருவ?” என்று கேட்டார் பாட்டி.

“நான் பறந்து போய் மலைக்கு அந்தப் பக்கம் இருக்கிற பூக்களைப் பறித்து வந்து கொடுக்கிறேன்னு” சொன்னான் செடியன்.

பாட்டியும் இறகுகளை வைத்து கட்டிக் கொடுத்தார். அதை உடம்பில் கட்டிக்கொண்டு மலை உச்சிக்குப் போனான். அங்கிருந்து பறக்க முயற்சி செய்தான்.

ஆனால் செடியனால் பறக்க முடியலை.

பறவை இறகுகளைக் கட்டினால் மட்டும் நம்மால் பறந்துவிட முடியுமா என்ன? எவ்வளவோ முயற்சி செய்தான். அவனால் பறக்க முடியவில்லை. தோல்வி அடைந்த அவன் கோபத்தில் உடம்பில் கட்டியிருந்த இறகுகளைக் கழற்றி வீசினான்.

அது மலையின் கீழே ஓடிக்கொண்டிருந்த நதியில போய் விழுந்தது. நீரினால் வேகமாக அடித்துச் செல்லப்பட்ட அந்த இறகுகள் அந்தக் கரையில் குளித்துக்கொண்டிருந்த காட்டு இளவரசியின் கால்களைச் சுற்றிக் கொண்டது.

இளவரசி அதனைக் கையில் எடுத்தாள். இவ்வளவு இறகுகளுடன் யார் இதை இங்கே அனுப்பியது என்று தெரிந்துக்கொள்ள ஆர்வம் ஏற்பட்டது.

தனது சேவகர்களோடு அந்த மலைமீது ஏறிவந்தாள் இளவரசி. அங்கே செடியன் ஒரு மரத்தைக் கட்டிக்கொண்டு அழுது கொண்டிருந்தான்.

சேவகர்களோடு வந்த இளவரசி, “யார் நீ? ஏன் அழுகிறாய்?” என்று கேட்டாள்.

செடியன், தனது கதையைச் சொன்னான்.

இளவரசி சிரித்தாள்.

“நாமெல்லாம் மனிதர்கள். நம்மால் பறக்க முடியாது. ஆனால், சாதனை செய்ய முடியும். உன்னைப் பார்த்ததும் எனக்குப் பிடித்துவிட்டது. நகைச்சுவையாகவும் பேசுகிறாய். அதனால உன்னை அரண்மனையில் நகைச்சுவை மன்றத்தின் தலைவனாக நியமிக்க ராஜாகிட்ட சொல்றேன்” என்றாள்.

இதைக் கேட்டதும் செடியனுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. அன்று முதல் அவன் வாழ்வில் வசந்தம் வீச ஆரம்பித்தது. கிடைத்த சம்பளத்தில் தனக்கு உதவிய அத்தனை பறவைகளுக்கும் தானியங்களை வாங்கி வந்து கொடுத்தான்.

பறவைகளும் சந்தோஷத்தில் செடியனை வாழ்த்தின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x