Published : 29 Jun 2014 12:42 PM
Last Updated : 29 Jun 2014 12:42 PM

ஜனநாயகத்துக்கு எதிர்க் கட்சி அவசியம்

அரசு என்பது ஆளுங்கட்சிக்குச் சொந்தம்; ஆனால், நாடாளுமன்றமோ அனைவருக்கும் சொந்தம்.

இந்திய நாடாளுமன்றம் பட்ஜெட் கூட்டத்தொடருக்காகக் கூடவிருக்கிறது. அப்போது பயனுள்ள விவாதங்கள் நடைபெற வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். நமது நாடாளுமன்றம் இந்த நாட்டின் 130 கோடி மக்களின் குரலாக ஒலிக்க வேண்டும் என்று நாட்டு மக்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள். அத்தகைய பெருமையைப் பெற நாடாளுமன்றம் வலுவான ஓர் எதிர்க் கட்சியைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக எதிர்க் கட்சிகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து நிற்கின்றன. 17 கோடி வாக்குகளைப் பெற்ற பா.ஜ.க. அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியில் அமர்ந்திருக்கும்போது, சுமார் 11 கோடி வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் 'எதிர்க் கட்சி' எனும் அங்கீகாரத்தைக்கூடக் கேட்டுப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மக்களவையில் 44 இடங்களைப் பெற்ற காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கு ‘எதிர்க் கட்சித் தலைவர்' என்ற அங்கீகாரம் வழங்கப்பட வேண்டியதில்லை, அதற்கு அவர்களுக்குத் தகுதியில்லை என் பதைப் போன்ற கருத்துக்கள் பா.ஜ.க-வின் மூத்த அமைச்சர்கள் சிலரால் தொடர்ந்து ஊடகங் களுக்குத் தெரிவிக்கப்பட்டுவருகின்றன. அப்படிப் பட்ட அங்கீகாரத்தை வழங்குவதும், வழங்க மறுப்பதும் தனது அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதைத் தெரிவிக்கும் வகையில்தான் அதைப் பற்றி ஆராய்ந்து வருவதாக மக்களவைத் தலை வரும் தெரிவித்துள்ளார். மக்களவையின் எதிர்க் கட்சி வரிசையில் பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கு ‘நாடாளுமன்ற மக்களவை எதிர்க் கட்சித் தலைவர்' என்ற அரசியல் சாசன அந்தஸ்தை வழங்க மறுப்பது சரிதானா? அப்படி வழங்க மறுக்கும் அதிகாரம் மக்களவை சபாநாயருக்கு இருக்கிறதா என்ற கேள்விகளுக்குப் பதில் தெரிய வேண்டிய நேரம் வந்துவிட்டது.

மவுலாஸ்கரின் முடிவு இக்காலத்துக்குப் பொருந்துமா?

நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள் ‘எதிர்க் கட்சித் தலைவர்' என்ற அங்கீகாரத்தை மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கு வழங்கவில்லை என்று இந்திய நாடாளுமன்றத்தின் முதல் சபாநாயகர் ஜி.வி. மவுலாஸ்கர் தந்த ஒரு முன்னுதாரணத்தை முன்வைத்து பா.ஜ.க-வினர் வாதிடுகின்றனர். அந்த முன்னுதாரணத்தின்படி மக்களவை உறுப்பினர்களில் குறைந்தபட்சம் 10% உறுப்பினர்களைக்கொண்டிருந்தால்தான் ஒரு கட்சிக்கு ‘எதிர்க் கட்சி’ என்ற அங்கீகாரத்தை வழங்க முடியும். அன்று ஜி.வி. மவுலாஸ்கர் எடுத்த முடிவு இன்றைய சூழ்நிலையில் ஏற்றுக் கொள்ளக்கூடியதா என்று பார்க்க வேண்டும். அன்றைய சபாநாயகர் எடுத்த முடிவு அன்றைக்கு அவையில் இருந்த சில நிர்வாக விதிகளையும், சந்தர்ப்பங்களையும் மட்டுமே கருத்தில்கொண்டு எடுக்கப்பட்ட முடிவு. சட்டத்தின் அடிப்படையிலோ நாடாளுமன்ற விதிகளின்படியோ எடுக்கப்படவில்லை. அதற்கான தனிச் சட்டம் எதுவும் அப்போது நிறைவேற்றப்பட்டிருக்கவும் இல்லை. ஆனால், 1977-ல் எதிர்க் கட்சித் தலை வருக்கான சம்பளம் மற்றும் செலவுத் தொகைச் சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. அந்தச் சட்டம், நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவருக்கான சட்டபூர்வ அங்கீகாரத்தை வழங்குகிறது. அந்தச் சட்டத்தின் பிரிவு-2ன்படி எதிர்க் கட்சி வரிசையில் இருக்கும் கட்சிகளில், எந்தக் கட்சியில் அதிக எண்ணிக்கை கொண்ட உறுப்பினர்கள் இருக்கிறார்களோ அந்தக் கட்சியின் தலைவரே நாடாளுமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைவர் என்று மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

வேறு எந்தவிதமான நிபந்தனைகளையும் அந்தச் சட்டம் விதிக்கவில்லை. எதற்காக இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது என்பதை அதன் முன்னுரை தெளிவுபடுத்துகிறது. “நாடாளு மன்ற ஜனநாயகத்தில் எதிர்க் கட்சித் தலை வரின் பணி மிகவும் முக்கியமானது… எதிர்க் கட்சித் தலைவருக்கு இருக்கும் முக்கியமான பொறுப்பைக் கருத்தில்கொண்டு மாநிலங் களவையிலும் மக்களவையிலும் இருக்கும் எதிர்க் கட்சியின் தலைவருக்குச் சட்டபூர்வ அங்கீகாரத்தை வழங்குவது மிகவும் அவசியம் என்று நாடாளுமன்றம் கருதுவதால் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது” என்று அந்தச் சட்டத்தின் முன்னுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நாடாளுமன்றத்தால் எதிர்க் கட்சித் தலைவருக்கு அங்கீகாரம் வழங்குகின்ற சட்டம், யார் எதிர்க் கட்சித் தலைவர் என்பதையும், அவருக்கு என்ன பணிகள் என்பதையும் மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கின்ற சூழ்நிலையில் மரபுகள், சபாநாயகரின் விதிகள் என்று சொல்லி ‘எதிர்க் கட்சித் தலைவர்' என்ற ஒரு முக்கியமான நாடாளு மன்ற ஜனநாயக நிறுவனத்தை இல்லாமல் செய்ய நினைக்கும் முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும். அத்தகைய ஜனநாயக நிறுவனத்தை முடக்க நினைப்பவர்கள், தங்களுக்குச் சாதகமாக, நாடாளுமன்றத்தின் நடவடிக்கை விதிகளின் 121-ன் கீழ் மக்களவைத் தலைவர் தந்துள்ள அறிவுறுத்தல்களைச் சுட்டிக்காட்டி வாதிடு கின்றனர். அதன்படி மக்களவையின் உறுப்பினர் எண்ணிக்கையில் குறைந்தபட்சம் 10% உறுப் பினர்கள் எண்ணிக்கை கொண்ட கட்சியை மட்டுமே அரசியல் கட்சியாக அங்கீகரிக்க முடியும்.

ஆனால், நாடாளுமன்ற நடைமுறைக்காக உருவாக்கப்பட்ட விதிகள், நிறைவேற்றப்பட்டு அமலில் இருக்கின்ற ஒரு சட்டத்தின் தன்மை களுக்கு எதிராகச் செயல்பட முடியாது. சபா நாயகரின் அறிவுறுத்தல்கள் 1977-ம் ஆண்டு சட்டத்தின் ஆளுகைக்கு உட்பட்டதே. மேலும், உச்ச நீதிமன்றமும் பல வேளைகளில் நாடாளு மன்றத்தின் செயல்பாடுகளையும் அதன் வரம் பையும், அதன் அதிகாரத்தையும் பல தீர்ப்புகளில் தெளிவுபடுத்தியுள்ளது. நாடாளுமன்றம் அதன் கருத்துகளைச் சட்டத்தில் தெளிவுபடுத்திய பிறகு அதற்கு விளக்கம் சொல்ல நீதிமன்றங்களைத் தவிர, வேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது என்பதை உச்ச நீதிமன்றம் அறுதியிட்டுச் சொல்லியுள்ளது.

நாடாளுமன்றம் நம்முடையது

இந்திய நாடாளுமன்றத்தின் தாய் என்று அழைக்கப்படக்கூடிய பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் எதிர்க் கட்சியினர் ஆளுங்கட்சியினரைப் பார்த்து, “அரசு உங்களுடையது; ஆனால், இந்த அவை நம்முடையது” என்று அடிக்கடி சொல்வதுண்டு. நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பே, விவாதத்தின் அடிப்படையில் அமைவதுதான். எதிர்த் தரப்பினர் இல்லாமல் ஒரு ஆரோக்கியமான விவாதம் எப்படிச் சாத்தியம்?

மேலும், ஜி.வி. மவுலாஸ்கர் காலத்தில் முதல் நாடாளுமன்றத்தின்போது லோக்பால், மனித உரிமை ஆணையம், தகவல் அறியும் உரிமை ஆணையம், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் போன்ற, காலத்தின் தேவையறிந்து உருவாக்கப்பட்ட சட்டங்கள் அமலில் இல்லை. இன்று அந்த முக்கியமான சட்டங்களை நிறை வேற்ற நியமிக்கப்படும் உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும் குழுவில் மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ஒரு முக்கியமான உறுப்பினர். அங்கீகாரம் பெற்ற ஒரு எதிர்க் கட்சித் தலைவர் மக்களவையில் இல்லை என்றால், அந்தப் பணியை யார் செய்ய முடியும்? அதில் முக்கியமான இரண்டு சட்டங்கள், மக்களவையில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க் கட்சித் தலைவர் இல்லை என்றால் இருக் கின்ற எதிர்க் கட்சிகளில் அதிக எண்ணிக்கை கொண்ட கட்சியின் தலைவரே எதிர்க் கட்சியின் தலைவர் என்று ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும் என்று சொல்கின்றன.

எனவே, அங்கீகரிக்கப்பட்ட ‘எதிர்க் கட்சித் தலைவர்' என்ற அமைப்பு இல்லையென்றால், நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தரத்தை உறுதிசெய்வதற்காக நாம் செய்துள்ள ஏற்பாடுகள் அனைத்தும் செயலிழந்துபோகும். மேலும், 1977-ம் ஆண்டில் எதிர்க் கட்சித் தலைவரைப் பற்றி நிறைவேற்றப்பட்டுள்ள சட்டம், எதிர்க் கட்சித் தலைவரைத் தெரிவுசெய்து அங்கீகரிக்கும் எந்த அதிகாரத்தையும் சபாநாயகருக்கு வழங்க வில்லை. சட்டம் வழங்காத அதிகாரத்தை அவர் எங்கிருந்தும் பெற்றுவிட முடியாது. தனக்குத் தானே அந்த அதிகாரத்தை அவர் வழங்கிக்கொள்ளவும் முடியாது. அந்த சட்டத்தின் படி எதிர்க் கட்சி வரிசையில் அதிக உறுப் பினர்களைக்கொண்ட கட்சியின் தலைவரே ‘அங்கீகரிக்கப்பட்ட எதிர்க் கட்சித் தலைவர்'. இதற்கு மாறாக ஒரு முடிவை எடுக்க மக்களவைத் தலைவருக்கு அதிகாரமில்லை. ஒருவேளை, இரண்டு கட்சிகளுக்கு ஒரே எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருந்தால், சபாநாயகருக்குரிய அதிகாரம் பயன்படுத்தப்படலாம். அப்படி ஏதும் இல்லாத சூழ்நிலையில் மக்களவைத் தலைவர் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பே மக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவரை அங்கீகாரம் பெற்ற எதிர்க் கட்சித் தலைவராக அறிவித்து நாடாளுமன்றப் பணி செய்ய அனுமதிக்க வேண்டும். இது சலுகையல்ல, சட்டம் தந்துள்ள உரிமை.

- பீட்டர் அல்ஃபோன்ஸ், மூத்த தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x