Published : 28 Oct 2014 15:30 pm

Updated : 24 Nov 2014 14:18 pm

 

Published : 28 Oct 2014 03:30 PM
Last Updated : 24 Nov 2014 02:18 PM

வெட்டிவேரு வாசம் 7 - பிடுங்கப்பட்ட கேமராவும் உருவப்பட்ட ஃபிலிம் சுருளும்!

7

பிடுங்கப்பட்ட கேமராவும் உருவப்பட்ட ஃபிலிம் சுருளும்!

இருபத்தைந்து வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் இது.


கல்கியில் அப்போது ‘மாதம் ஒரு மாவட்டம்’ என்ற பகுதி பிரபலம். ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்து, அங்குள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அவற்றை மாவட்ட கலெக்டரிடம் எடுத்துச் சென்று தீர்வுகள் பெறுவதே அந்தப் பகுதியின் நோக்கம். சில மாவட்டங்களில் அந்தப் பணியை மேற்கொள்ள நாங்கள் அனுப்பி வைக்கப்பட்டோம். அப்போதுதான் கே.வி.ஆனந்த் ஒரு ஸ்டில் ஃபோட்டோகிராபராக எங்களுக்கு அறிமுகம் ஆனார்.

‘கல்கி’ இதழுக்காக விருதுநகர் மாவட்டத்துக்குப் பயணப்பட்டோம். வெவ்வேறு ஊர்களிலில் இருந்து தெரிவிக்கப்பட்டிருந்த குறைகளை நேரில் சென்று விசாரித்தோம். அதற்காக, ஒரு வாடகைக் காரை அமர்த்திக்கொண்டோம்.

நெடுஞ்சாலைக்குச் சொந்தமான நிலத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர், தன் அலுவலகத்துக்காக அத்துமீறி கட்டிடம் எழுப்பியுள்ளதாக ஒரு கடிதம் வந்திருந்தது. குறிப்பிட்ட அந்தக் கட்டிடத்தை நெருங்கும்போதே, குற்றச்சாட்டின் உண்மை புரிந்தது. மற்ற கட்டிடங்கள் நாற்பது, ஐம்பது அடி பின்னால் இருக்க, இது மட்டும் தெற்றுப் பல் போல் முன்னால் முளைத்திருந்தது. நெடுஞ்சாலையில் ஓரமாகக் காரை நிறுத்தினோம்.

“முதல்ல ஒரு போட்டோ எடுத்துக்கலாம்…” என்று ஆனந்த் சொல்ல, காரில் இருந்து இறங்கினோம்.

சரியான கோணம் தேடி, நெடுஞ்சாலையின் எதிர்ப்பக்கம் போய் நின்று, கட்டிடத்தை முழுமையாக கேமராவில் உள்வாங்கி, ஆனந்த் க்ளிக் செய்த்போதுதான் கவனித்தோம். கட்டிடத்தின் முதல் மாடியின் ஜன்னல் வழியே கட்சிக்காரர்கள் சிலர் எங்களைப் பார்த்துவிட்டனர்.

“டேய்… எவன்டா அது போட்டோ எடுக்கறது..?” என்று மிரட்டலாக ஒரு சத்தம். கட்சி ஆபீஸில் இருந்தவர்களும் கட்சித் தொண்டர்கள் சிலருமாகச் சேர்ந்து எங்களைத் துரத்த ஆரம்பித்தனர்.

ஆனந்த் எங்களைவிட இளையவர். முழு வேகத்துடன் காருக்கு ஓடினார். கட்சிக்காரர்கள் விடவில்லை. காரைச் சூழ்ந்துகொண்டனர். கண்ணாடிகளைத் தட்டினர்.

“எறங்குடா கீழே..!”

ஆனந்த் மிரண்டவராக காரில் இருந்து இறங்கினார்.

“எப்படிடா போட்டோ எடுப்ப..?” என்று அவர்கள் கேமராவைப் பிடுங்கப் பார்த்தார்கள்.

“தப்புதான்… மன்னிச்சுக்கங்க!” என்று சொல்லிவிட்டு ஆனந்த், கேமராவைத் திறந்து சட்டென்று அதில் இருந்து ஃபிலிமை உருவி இழுத்தார்.

இன்றைக்குப் போல் அன்றைக்கு டிஜிட்டல் கேமரா கிடையாது. புகைப்படச் சுருளை இருட்டறையில்தான் வெளியே எடுக்க வேண்டும். இப்படி கட்சிக்காரர்களுக்காக பயந்து வெளியில் இழுத்துவிட்டாரே என்று எங்களுக்குப் பதைப்பு.

இரண்டு நாட்களாக, மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நபர்களைச் சந்தித்து உரையாடியபோது, எடுத்த புகைப்படங்கள் எல்லாம் ஒரு கணத்தில் வீணாகிவிட்டதே என்று திடுக்கிட்டோம்.

கட்சிக்காரர்கள் ஃபிலிமைப் பிடுங்கி தெருவோரத்தில் எறிந்தார்கள். நாங்கள் எதிர்க்க எதிர்க்க, கேமராவையும் பிடுங்கிக்கொண்டு போய்விட்டார்கள்.

எங்கள் முகத்தில் ஈயாடவில்லை. காரில் ஏறியதும், “ஏன் ஆனந்த் அவசரப்பட்டே..? ரெண்டு நாளா எடுத்த போட்டோக்களைத் திரும்பப் போய் எப்படி எடுக்கறது..?” என்று ஆதங்கத்துடன் கேட்டோம்.

“அப்படி நான் செய்யலைன்னா… நம்மளை வெட்டிப் போட்டிருப்பாங்க..” என்று கூலாகச் சொன்னார், ஆனந்த்.

எங்களுடன் வந்திருந்த கல்கி உதவியாசிரியர் இளங்கோவன், நேரே காவல் நிலையத்துக்கு வண்டியை விடச் சொன்னார். காவல் நிலையத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக எழுத்துபூர்வமாக புகார் வாங்க போலீஸ் அதிகாரி தயங்கினார். ஆனால், அதே சமயம் ‘கல்கி’ போன்ற பத்திரிகையை எதிர்த்துக்கொள்ளவும் முடியவில்லை. சென்னைக்கு போன் செய்தார். அந்தப் பகுதி அமைச்சரைத் தொடர்புகொண்டு விஷயத்தை விளக்கினார். அமைச்சர், கட்சியினருக்கு அங்கிருந்து உத்தரவு கொடுத்த பின்னர், கேமரா திரும்பி வந்தது. சுவாரஸ்யமான இன்னொரு கதை.

கேமராவை மீட்டு எல்லோரும் இரவு அடுத்த ஊருக்குப் பயணமாகும்போது, ஆனந்த் கேமராவைக் கழுத்தில் தொங்கவிட்டபடி, “கொஞ்சம் சிரிங்களேன்..” என்றார்.

“எப்படி ஆனந்த்..? ரெண்டு நாள் வேலை வேஸ்ட் ஆயிடுச்சே..?”

“ஒண்ணும் வேஸ்ட் ஆகலை. அத்தனை போட்டோவும் பத்திரமா இருக்கு...”

நாங்கள் திகைத்தோம்.

“நான் காருக்குள்ள வந்து ஏறினதும், சட்டுனு கழுத்துல இருக்கிற கேமராவை அவுத்து பைக்குள்ள வெச்சிட்டேன். லோட் பண்ணித் தயாராயிருந்த இன்னொரு கேமராவை பையிலேர்ந்து எடுத்து கழுத்துல மாட்டிக்கிட்டேன். அவங்க பிடிங்கிட்டுப்போனது அதைத்தான். அவங்களை சமாதானப்படுத்த, அதில் இருந்த காலி ரோலைதான் எக்ஸ்போஸ் பண்ணேன். ரெண்டு நாளா எடுத்த படம் மட்டுமில்ல; இன்னிக்கு எடுத்த பில்டிங் படமும் பத்திரமா இருக்கு...”

அந்தப் புகைப்படம் அடுத்த ‘கல்கி’ இதழில் கட்டுரையுடன் வெளியானது.

‘கோ’ திரைப்படம். பத்திரிகைப் புகைப்படக்காரன் அஷ்வின் (ஜீவா) அலுவலகம் செல்லும் வழியில், வங்கியைக் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் செல்ல முயற்சிப்பவர்களைத் தற்செயலாகப் பார்க்க நேரிடும். துரத்திச் சென்று அவர்களைப் புகைப்படம் எடுப்பான். இதை கவனித்துவிட்டு, கொள்ளையர்களில் ஒருவன் அவனைத் துரத்தி வருவான். அஷ்வின் கேமராவைத் திருடிக்கொண்டு ஓடுவதாக நினைத்து நாயகி ரேணுகா அவனை வழிமறித்துத் தடுக்கிவிடுவாள். கொள்ளைக்காரன் வந்து கேமராவைப் பிடுங்கி, எடுத்துப் போய்விடுவான்.

பின்னாலேயே போலீஸ் வரும். அஷ்வின் எழுந்து, கேமராவிலல் இருந்து, தான் ரகசியமாக உருவிய மெமரி கார்டை நீட்டுவான். “இதுல அத்தனை பேரோட போட்டோவும் இருக்கு...” என்பான். (அஷ்வின் மெமரி கார்டை ரகசியமாக உருவும் காட்சியும் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கிறது)

அவற்றின் உதவியுடன், போலீஸ் அவர்களை எப்படி வளைத்துப் பிடித்தது என்று கதை தொடரும். எங்களுக்கும், கே.வி, ஆனந்துக்கும் உண்மையிலேயே நிகழ்ந்த ஒரு சம்பவம்தான் ‘கோ’ படக் காட்சியை சுவாரஸ்யமாக அமைக்க உதவியது!

வாசம் வீசும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள
dsuresh.bhala@gmail.com


தொடர்சுபாவெட்டிவேரு வாசம்பிலிம் ரோல்பிலிம் சுருள்கோநினைவுகள்திரைக்கதைஜீவாஃபோட்டோ

You May Like

More From This Category

More From this Author