Last Updated : 05 Nov, 2014 09:46 AM

 

Published : 05 Nov 2014 09:46 AM
Last Updated : 05 Nov 2014 09:46 AM

ஜாலியா தமிழில் பாடுவோம்!

டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்", "ரெயின் ரெயின் கோ அவே" இந்த இங்கிலிஷ் ரைம்ஸ் எல்லாம் சின்ன வயசுல உங்க ஸ்கூல்ல சொல்லிக் கொடுத்திருப்பாங்க. இது மாதிரி புகழ்பெற்ற தமிழ் ரைம்ஸ் இருக்கா? ஏன் இல்லை? நிறைய இருக்கு.

“கை வீசம்மா கை வீசு...

கடைக்குப் போகலாம் கை வீசு...''ங்கிற பாட்டை உங்க அம்மாவோ, ஸ்கூல் டீச்சரோ உங்களோட சின்ன வயசுலயே பாடிக் காட்டியிருப்பாங்க. நீங்களும் தத்தக்கா பித்தக்கான்னு அனுபவிச்சு பாடியிருப்பீங்க.

இப்படிப் குட்டிக் குழந்தைகள குதூகலமாக பாட வைக்கிற, இந்தப் பாடல்கள யாரு எழுதினதுன்னு உங்களுக்குத் தெரியுமா? இந்தப் பாடல்கள் தெரிஞ்ச அளவுக்கு அவரைப் பத்தி தெரிஞ்சுருக்காது. அழ. வள்ளியப்பாதான் இந்தப் பாடல்களோட சொந்தக்காரரு.

பாரதியார், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஆகியோரும் குழந்தைகளுக்காக நிறையப் பாடல்கள எழுதியிருக்காங்க. அவங்கள போல அழ. வள்ளியப்பாவும் குழந்தைப் பாடல் எழுதுறதுல கெட்டிக்காரரு. இவரோட பாடல் ‘ரைம்ஸ்’ மாதிரியே இருக்கும். குழந்தைகள கவர்ந்து இழுக்குற வகையில குட்டிக் குட்டி வார்த்தையில பாடல்கள எழுதுறது இவரு பாணி.

‘மாம்பழமாம் மாம்பழம்...

மல்கோவா மாம்பழம்....’

இந்தப் பாடலை நீங்க பாடியிருப்பீங்க. இந்தப் பாட்டு மாம்பழத்த விரும்பிச் சாப்பிட வைக்கும். பாடல் வரிகள் ஒவ்வொண்ணும் மாம்பழத்தையே கண்ணு முன்னால கொண்டு வந்து நிறுத்தும். அப்படி அழகா வார்த்தைகளக் கோத்திருப்பாரு அழ. வள்ளியப்பா.

“அம்மா இங்கே வா... வா...''

பாட்டுல தமிழ் உயிரெழுத்துகள் ஒவ்வொன்றிலும் ஒரு வரி தொடங்குவது மாதிரி எழுதியிருப்பார். இதன் மூலமா சுட்டிக் குழந்தைகளுக்குத் தமிழை ஈஸியா சொல்லிக் கொடுக்க முடியும்.

‘அரிசி மாவும் உளுந்து மாவும்

கலந்து சுட்ட தோசை...’

இந்தப் பாடல் தோசைய மட்டுமல்ல, அம்மா ஆசை ஆசையா சுட்டுத் தர்ற பக்குவத்தையும் எளிமையா சொல்லியிருப்பாரு. இந்தப் பாடல கேட்டா போதும். குழந்தைங்க தோசைய அடம் பிடிச்சி வாங்கிச் சாப்பிடுவாங்க. அந்தப் பாட்டோட வார்த்தைகள் அப்படி மயக்கும்.

இப்படி ஒரு பாட்டு, ரெண்டு பாட்டு இல்லை. இரண்டாயிரம் பாட்டு எழுதிருக்காரு. எதையும் விட்டு வைக்காம, குழந்தைகளோட தொடர்புடைய எல்லா விஷயங்களப் பத்தியும் இவரு பாடல்களை எழுதியிருக்காரு. அதனாலதான் இவர ‘குழந்தைக் கவிஞர்’ன்னு சொல்றாங்க. எளிய வார்த்தைகள்ல அழகான ஓசையில வெளிப்படுற மாதிரி அழகா பாட்டு எழுதுறதை, கடைசி வரைக்கும் இவரு தொடர்ந்தாரு.

உங்க மாதிரி குழந்தைகளுக்காக ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தங்களை எழுதியிருக்காரு. இவரோட குழந்தைப் பாடல்கள், காலம் உள்ளவரை தலைமுறைகள் தாண்டியும் நிலைச்சிருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x