Published : 08 Oct 2014 10:57 AM
Last Updated : 08 Oct 2014 10:57 AM

இந்தியா-மே.இ.தீவுகள் முதல் ஒருநாள் போட்டி: கொச்சியில் இன்று நடக்கிறது

இந்திய-மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் கொச்சியில் இன்று நடைபெறுகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் நடைபெறவுள்ள இந்தத் தொடர் இரு அணிகளுக்குமே மிக முக்கியமானதாகும்.

2006-07 முதல் தற்போது வரையில் மேற்கிந்தியத் தீவுகள் எதிரான 5 ஒருநாள் தொடர்களைக் கைப்பற்றியுள்ள இந்திய அணி, இந்த முறையும் ஆதிக்கம் செலுத்தும் முனைப்பில் களமிறங்குகிறது. உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பெறுவதில் தீவிரமாக உள்ள இந்திய வீரர்கள், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சிறப்பாக ஆடி தங்களின் திறமையை நிரூபிக்க போராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமபலம் நிறைந்த இந்தியா

இந்திய அணி தற்போதைய நிலையில் பேட்டிங், பவுலிங் என இரு துறைகளிலும் சமபலம் நிறைந்த அணியாக உள்ளது. காயமடைந்த தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக இடம்பெற்றுள்ள முரளி விஜய், ஷிகர் தவனுடன் இணைந்து இந்தியாவின் இன்னிங்ஸை தொடங்குவாரா அல்லது அஜிங்க்ய ரஹானே தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்படுவாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

எனினும் ரஹானேவுக்கே அதிக வாய்ப்புள்ளது. மிடில் ஆர்டரைப் பொறுத்தவரையில் விராட் கோலி மீண்டும் பார்முக்கு திரும்புவதற்கு இந்தத் தொடர் நல்ல வாய்ப்பாகும். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தடுமாறிய அவர் இந்த முறை சிறப்பாக ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கோலி தவிரசுரேஷ் ரெய்னா, அம்பட்டி ராயுடு, கேப்டன் தோனி என வலுவான பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் புவனேஸ்வர் குமார், முகமது சமி, மோஹித் சர்மா ஆகியோர் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கலக்கிய மோஹித் சர்மா, உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவதற்கு இந்தத் தொடர் நல்ல வாய்ப்பாக அமையும். சுழற்பந்து வீச்சாளர்களாக ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றிருந்தாலும், மிஸ்ரா, குல்தீப் ஆகியோரில் ஒருவருக்கே வாய்ப்பு கிடைக்கும்.

கெயில், நரேன் இல்லை

மேற்கிந்தியத் தீவுகள் அணியைப் பொறுத்தவரையில் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெயில், முன்னணி சுழற்பந்து வீச்சாளர் சுநீல் நரேன் ஆகியோர் இடம்பெறாதது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இவர்கள் இருவரும் இந்திய ஆடுகளங்களில் நல்ல அனுபவம் பெற்றவர்கள். கெயில் காயம் காரணமாக இடம்பெறவில்லை. சாம்பியன்ஸ் லீக்கில் சுநீல் நரேனின் பந்துவீச்சு குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டதால் அவரை திரும்பப்பெற்றது மேற்கியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம்.

எனினும் தற்போதைய மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இடம்பெற்றுள்ள 15 வீரர்களில் கேப்டன் டுவைன் பிராவோ உள்ளிட்ட 7 பேர் இந்திய ஆடுகளங்களின் தன்மை பற்றி நன்கறிந்தவர்கள். ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் இந்திய ஆடுகளங்களில் ஆடியிருக்கும் அவர்கள் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக ஆட முயற்சிப்பார்கள் என நம்பலாம்.

கடந்த நவம்பரில் இந்தியாவிடம் படுதோவ்வி கண்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி, இந்த முறை முழு நம்பிக்கையோடு இந்திய அணியை எதிர்கொள்ளும் என தெரிகிறது. அந்த அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் டுவைன் ஸ்மித், டேரன் பிராவோ, டுவைன் பிராவோ, கிரண் போலார்ட், டேரன் சமி, சாமுவேல்ஸ் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.

வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஜெரோம் டெய்லர், ரவி ராம்பால், கெமர் ரோச், ஆண்ட்ரே ரஸல் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். சுழற்பந்து வீச்சில் சுலைமான் பென்னை நம்பியுள்ளது மேற்கிந்தியத் தீவுகள்.

மிரட்டும் மழை

போட்டி நடைபெறும் கொச்சியில் மழை பெய்வதற்கு 90 சதவீத வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதனால் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. வருண பகவான் வழிவிட்டாலொழிய போட்டி நடைபெறுவது கடினம்.

இந்தியா: எம்.எஸ்.தோனி (கேப்டன்), ஷிகர் தவன், அஜிங்க்ய ரஹானே, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, அம்பட்டி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, புவனேஸ்வர் குமார், முகமது சமி, மோஹித் சர்மா, உமேஷ் யாதவ், முரளி விஜய், குல்தீப் யாதவ்.

மேற்கிந்தியத் தீவுகள்: டுவைன் பிராவோ (கேப்டன்), சுலைமான் பென், டேரன் பிராவோ, ஜேசன் ஹோல்டர், லியோன் ஜான்சன், கிரண் போலார்ட், தினேஷ் ராம்தின், ரவி ராம்பால், கெமர் ரோச், ரஸல், டேரன் சமி, மார்லான் சாமுவேல்ஸ், லென்ட் சிம்மன்ஸ், டுவைன் ஸ்மித், ஜெரோம் டெய்லர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x