Published : 12 Oct 2014 15:08 pm

Updated : 12 Oct 2014 15:08 pm

 

Published : 12 Oct 2014 03:08 PM
Last Updated : 12 Oct 2014 03:08 PM

எழுதப்படாத கவிதைகள் எங்கே?

வார்த்தைகளில் ஆணுக்கானது, பெண்ணுக்கானது என்ற பிரிவு இல்லை. ஆனால் கவிதை வெளிப்படுத்தும் உணர்வில், நெகிழ்வில், காதலில், கண்ணீரில், தாய்மையில், பாசத்தில், வலியில் அல்லது கோபத்தில் எழுதியது பெண்தான் என்று எப்படியோ சொல்லிவிட முடிகிறது.

18-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஜார்ஜ் எலியட் என்ற எழுத்தாளர் ரொம்பப் பிரபலம். ஏகப்பட்ட நாவல்கள், கவிதைகள் அவர் எழுதினார். பெண்ணின் நுட்பமான மன ஓட்டங்களை அவர் எப்படித்தான் எழுதுகிறாரோ என்று எல்லாரும் பிரமித்தனர். மிகத் தாமதமாகத் தெரிந்தது எழுத்தாளர் ஆண் இல்லை; மேரி ஆன் எவான் எனும் பெண் என்று.


இவருக்குப் பின் வந்த எமிலி டிக்கின்சன் தன் பெயரிலேயே எழுதினார். ஆயிரம் கவிதைகளுக்கு மேல். அதில் வெறும் ஐந்துதான் அவர் வாழும் காலத்திலேயே பிரசுரமானது. நிறையப் பெண் படைப்பாளிகளின் கவிதைகளைப் படிக்கும் போதே சுடுகின்றன; அல்லது கண்ணீரில் நனைந்து கனமாக இருக்கின்றன. சமீபத்தில் மறைந்த ஆப்பிரிக்க அமெரிக்கக் கவிஞரான மாயா ஏஞ்சலோவின் இந்தக் கவிதையைப் பாருங்களேன்:

எனக்குக் குழந்தைகள் இருக்கிறார்கள்; பராமரிக்க... துணிகள் இருக்கின்றன; தைக்க... தரை கிடக்கிறது; துடைக்க...

தோட்டம் அழைக்கிறது; குப்பைகளை அகற்ற... உடைகள் காத்திருக்கின்றன; இஸ்திரி போட...

என்மேல் மிளிர்வாய் பிரகாச சூரியனே!

என்மேல் விழுவாய் மென்மையின் பனித்துளியே...

என்னை உன் வெண்குளிர் முத்தங்களால் மூடு...

இன்றிரவு மட்டும் என்னை ஓய்வெடுக்க விடு...

இது மாயா ஏஞ்சலோவிலிருந்து நம்ம ஊர் முனியம்மா வரையிலான பெண்ணின் வாழ்வைச் சொல்லும் கவிதை. உழைத்து உழைத்து ஓய்ந்த பெண்ணுக்கு, மீதமிருக்கும் வேலைகள் பற்றிய மலைப்பு உலகம் தழுவியது. அந்த உடலிலிருந்து வெடித்துக் கிளம்பும் கவிதை இப்படித்தான் சுடும். அது கண்ணீரின் சூடல்லவா?

1960களில் வாழ்ந்தவர் அமெரிக்கக் கவிதாயினி சில்வியா பிளாத். ஆண்-பெண் உறவைப் பற்றிய அடிப்படைக் கேள்விகளை எழுப்பியவர் இவர்.

பேரின்பத்துக்கு ஏங்கும் குழந்தை போல நான்

சாசுவதமான இன்பம் உறுதி என்று ஒரு சர்ப்பம் போலச் சொல்கின்றாய்...

முத்தத்தினால் என்னை

ஏமாற்ற முடியும்

என்று ஒருபொழுதும் நினைக்காதே...

தன் 31வது வயதில் கேஸ் அடுப்பில் தலையைக் கொடுத்து சில்வியா தற்கொலை செய்துகொண்டார். ஆனால் அந்தக் குழப்பமான மன நிலையிலும், தன் இரு குழந்தைகளுக்கும் காலை உணவைத் தயார் செய்து வைத்துவிட்டு, அவர்களை பத்திரப்படுத்திய பின்தான் கேஸ் அடுப்பில் தலையைக் கொடுத்தார்.

குழப்பமான மனநிலை, அதிதீவிர உணர்வு மோதல்கள், அணையில் தேக்கப்பட்டு, விடுவிக்கப்பட்ட தண்ணீர் போலப் பொங்கும் காதல், மறுக்கப்பட்ட உரிமைகள், கிடைக்காத அங்கீகாரம் இவைதான் காலம் காலமாகப் பெண் கவிஞர்களின் படைப்பூக்கத்துக்கான ஊற்றுக் கண்.

சங்க காலக் கவிதைகளிலேயே இதை நாம் அறிய முடியும். எல்லாக் காதலுக்கும் ஒரு வெறி பிடித்த உச்சநிலை உண்டு. அந்த வரம் அல்லது சாபம் வாழ்வில் ஒருமுறை மட்டுமே வரக்கூடியது.

முட்டுவென்கொல்? தாக்குவென்கொல்? ஓரேன்

யானும் ஓர் பெற்றி மேலிட்டு

ஆஆ ஓல் எனக் கூவுவென் கொல்?

அலமரல் அசைவளி

அலப்ப, என்

உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே

என்ற ஒளவையின் சங்கப் பாடல் காதலில் தவிக்கும் பெண்ணின் தவிப்பு. இரவின் தனிமையில் காதலி சொல்கிறாள்.‘என் நோவு அறியாது தூங்குகிறது, இந்த ஊர்... நான் கத்தட்டுமா? முட்டிக்கொள்ளட்டுமா? எல்லோரையும் தாக்கட்டுமா..?'

இத்தகைய உக்கிரமான காதல் மட்டுமல்ல, தன் மகள் காதலனுடன் போகும் பாதை பாலையாக இருப்பினும், அங்கே மழை பெய்து குளிரட்டும் என்று கண்ணீருடன் வாழ்த்தும் தாய் மனமும் சங்கக் கவிதையில் உண்டு.

ஆண்டாளின் கவிதைகள்

பெரும் புயல் அடிக்கும் கரிய நள்ளிரவில் காற்றும் மழையும் சீற, வெட்ட வெளியில் நின்று மின்னலின் ஒரு விநாடி ஒளிப் பிழம்பைத் தரிசித்திருக்கிறீர்களா? அந்த தெய்வீகச் சிலிர்ப்பை உங்களுக்குக் கொடுக்க வல்லன ஆண்டாளின் கவிதை வரிகள். கட்டுப்பாடான வீட்டில் வளர்ந்த ஒரு அக்ரஹாரத்து இளம் சிறுமி உலகக் காதல் இலக்கியங்களின் முதல் தரத்தில் வைத்து மகுடம் சூட்ட வேண்டிய கவிதைகளை எழுதியது எப்படி என்பது தமிழ் இலக்கிய உலகின் தீராத ஆச்சர்யங்களில் ஒன்று.

ஜீவாத்மா ஒன்று பரமாத்மாவோடு இணைய விழையும் ஏக்கம், ‘மானுட ஆற்றல் அளப்பரிய தெய்வ ஆற்றலோடு ஒன்றுகலக்க விரும்பும் வேட்கை’, தன் வெறி கொண்ட காதலைப் பதிவு செய்யும் பெண்ணின் பேரார்வம் என்று எந்த நிலையில் வைத்துப் பார்த்தாலும் பரவசப்படுத்துபவை ஆண்டாளின் கவிதைகள்.

‘வாசுதேவனின் சிவந்த கண்ணையும் கரிய உடலையும் பார்த்தபடி அவன் மலர்க்கைகளில் இருக்கிறாய் சங்கே! அன்று மலர்ந்த செந்தாமரைப் பூ தேனை உண்ணும் அன்னப் பறவை போல அவனது வாயில் ஊறும் அமுதத்தை அருந்துகிறாய்... எத்தகைய செல்வம் பெற்றாய் சங்கே! மற்றவரின் செல்வத்தையெல்லாம் ஒருவரே அனுபவிப்பது தவறல்லவா? எனக்கும் அவன் வாயமுதத்தைக் கொஞ்சம் தருவாயா?'

என்று கேட்கிறாள் ஆண்டாள். பெரியாழ்வாரே ஆண்டாளின் பேரில் எழுதினார் என்று சிலர் சொல்கிறார்கள். வாசுதேவனின் வாயமுதத்தைச் சங்கிடம் யாசிக்க ஒரு பெண்ணின் காதலால் மட்டுமே முடியும்.

இன்றைய கவிஞர்கள்

இன்றைக்குப் பெண் கவிஞர்கள் வெடித்துக் கிளம்புகிறார்கள். அவர்களின் கவிதைகளைப் படித்துப் பிரமிப்பதா, இதையெல்லாம் எழுகிறார்களே என்று கோபிப்பதா எனத் தெரியாமல் பலர் திணறுகிறார்கள். பெண்களுக்கான நீண்ட இலக்கியப் புறக்கணிப்பை அவதானித்தால்தான் பெண் கவிதையில் கசியும் ரத்தத்தை, காதலை, வெறுப்பை, பிரியத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியும்.

கவிதை வரலாற்றில் ஆயிரம் ஆண் கவிஞர்கள் ஜொலிக்கிறார்கள். பெண்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய். இடைப்பட்ட இந்தக் காலங்களில் எல்லாம் பெண்கள் என்னதான் செய்தார்கள்? கல்வியும், கலையும் குடும்பப் பெண்களுக்கு இல்லை என்று விலகியே இருந்தார்களா? பொங்கிய உணர்வுகள் எங்கே வீசி எறியப்பட்டன. எழுதப்படாத எத்தனை கவிதைகள் அடுக்களை நெருப்பில் சாம்பலாகின? எழுதப்பட்ட எத்தனை கவிதைகள் கிழித்து எறியப்பட்டன? காலக் கரையானால் அரிக்கப்பட்டவை எவை எவை? காணாமற்போன அந்தக் கவிதாயினிகளுக்கான என் ஒரு சொட்டுக் கண்ணீர் இந்தக் கட்டுரையின் முற்றுப்புள்ளி.

(‘தி இந்து’ தீபாவளி மலரில் இக்கட்டுரையின் முழு வடிவத்தைக் காணலாம்)


பெண் கவிஞர்கள்கவிதாயினிகள்பாரதி பாஸ்கர்ஔவையார்எமிலி டிக்கின்சன்சில்வியா பிளாத்ஆண்டாள்

You May Like

More From This Category

More From this Author