Published : 14 Oct 2014 02:08 PM
Last Updated : 14 Oct 2014 04:38 PM
நாகை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியரிடம் அத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.அருள்செல்வன் மனு அளித்தார்.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியர் து.முனுசாமி தலைமை வகித்தார். ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த எம்.எல்.ஏ. அருள்செல்வன் பொதுமக்களுடன் வரிசையில் நின்று ஆட்சியரிடம் மனு அளித்தார்.
மனு விவரம்: மயிலாடுதுறையை தலைமையிடமாகக்கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும். மயிலாடுதுறைக்கு புதிய பேருந்து நிலையம் அமைக்கவேண்டும். மயிலாடுதுறை நகரில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த பிரச்சினையைத் தீர்க்க 2011-ல் தொடங்கப்பட்ட புறவழிச்சாலை பணி கிடப்பில் உள்ளது. மயிலாடுதுறை அரசு மருத்துவமனையை அனைத்து வசதிகளும் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தவேண்டும். கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக பணிகள் முடிக்கப்படாமல் உள்ளன.
இந்த முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி நான் சட்டப்பேரவை உறுப்பினராக பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ந்து சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளேன். மக்கள் மன்றத்திலும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதேபோன்று வணிகர் சங்கம், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மூத்த குடிமக்கள் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இந்த கோரிக்கைகளுக்காக தொடர்ந்து கோரிக்கை மனுக்களை அளித்தும் போராடியும் வருகின்றனர்.
எனவே, மேற்காணும் கோரிக்கைகளை வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் 2015 ஜனவரி 1-ம் தேதியிலிருந்து தொடர் உண்ணாவிரதத்தை தொடங்குவேன் என அந்த மனுவில் அருள்செல்வன் தெரிவித்துள்ளார்.
மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர், அரசுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமென தெரிவித்தார்.