Published : 04 Oct 2014 11:13 AM
Last Updated : 04 Oct 2014 11:13 AM

சாம்பியன்ஸ் லீக்கில் கோப்பையை வெல்வது யார்? - சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா இன்று மோதல்

பெங்களூரில் இன்று நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸும், கொல்கத்தா நைட் ரைடர்ஸும் மோதுகின்றன.

கடந்த ஐபிஎல் போட்டியில் தொடங்கி தற்போது வரை தொடர்ச்சியாக 14 வெற்றிகளைக் குவித்திருக்கும் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணி இதுவரை சாம்பியன்ஸ் லீக்கில் கோப்பையை வென்றதில்லை. அதனால் இந்த முறை அந்த குறையைத் தீர்க்கும் முனைப்பில் தீவிரமாக உள்ளது.

ஆனால் பலம் வாய்ந்த பஞ்சாபை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கும் தோனி தலைமையிலான சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. இதுதவிர 2012 ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்றில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் சூப்பர் கிங்ஸ் இருப்பதால் இந்தப் போட்டி கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலம் வாய்ந்த பேட்டிங்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, எந்த நேரத்திலும் சரிவிலிருந்து மீண்டு வலுவான நிலைக்கு வரக்கூடிய அணியாகும். பேட்டிங்கைப் பொறுத்தவரையில் கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா, டூ பிளெஸ்ஸி, டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர். இவர்கள் அனைவரும் நல்ல பார்மில் இருப்பதால் அந்த அணி நல்ல ஸ்கோரை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடக்க ஆட்டக்காரர்களான பிரென்டன் மெக்கல்லம், டுவைன் ஸ்மித் ஆகியோர் பெரிய அளவில் ரன் குவிக்காமல் தடுமாறி வருகின்றனர். இவர்கள் இருவரும் சிறப்பாக ஆடும்பட்சத்தில் அது சென்னைக்கு மிகப்பெரிய பலமாக அமையும்.

பந்துவீச்சில் ஆசிஷ் நெஹ்ரா, பிராவோ, ஜடேஜா, மோஹித் சர்மா, பவன் நெகி கூட்டணி பலம் சேர்க்கிறது. பஞ்சாப் அணியை பந்தாடிய இந்த கூட்டணி, கொல்கத்தாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்திலும் சூப்பர் கிங்ஸுக்கு கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றிக் கூட்டணியை பிரிக்க கேப்டன் தோனி விரும்பமாட்டார் என்பதால் சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரையில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிகிறது. சூப்பர் கிங்ஸ் தனது லீக் ஆட்டங்கள் அனைத்தையும் பெங்களூரில் விளையாடியிருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும்.

சுநீல் நரேனுக்கு தடை

கொல்கத்தா அணி கவுதம் கம்பீர், ராபின் உத்தப்பா, மணீஷ் பாண்டே, ஜாக் காலிஸ், ரியான் டென் தஸ்சாத்தே, மணீஷ் பாண்டே என வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. இவர்களில் கம்பீர், உத்தப்பா, பாண்டே, காலிஸ் ஆகியோர் நல்ல பார்மில் இருப்பது அந்த அணியின் மிகப்பெரிய பலமாக கருதப்படுகிறது.

எனினும் அந்த அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான சுநீல் நரேன் இந்த ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. அவருடைய பந்துவீச்சு குறித்து ஏற்கெனவே சந்தேகம் எழுப்பப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போதும் அவருடைய பந்துவீச்சு குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டது. 2-வது முறையாக சந்தேகம் எழுப்பப்பட்டதால் அவர் பந்துவீச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கொல்கத்தா அணியின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தது சுநீல் நரேனின் பந்துவீச்சுதான். இப்போது அவருக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் அந்த அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் 4 ஓவர்களை வீசி மிகக்குறைவான ரன்களை மட்டுமே கொடுத்து சராசரியாக 2 அல்லது 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வந்த நரேனுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது சென்னை சூப்பர் கிங்ஸுக்கு சாதகமாகியுள்ளது.

நரேன் விளையாடாத நிலையில் குல்தீப் யாதவ், யூசுப் பதான், டென் தஸ்சாத்தே, ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆகியோரையே பந்துவீச்சில் நம்பியுள்ளது கொல்கத்தா. நரேனுக்குப் பதிலாக மோர்ன் மோர்கல் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை: எம்.எஸ்.தோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, ஆசிஷ் நெஹ்ரா, மிதுன் மன்ஹாஸ், அஸ்வின், ஈஸ்வர் பாண்டே, பவன் நெகி, ரவீந்திர ஜடேஜா, மோஹித் சர்மா, டுவைன் ஸ்மித், டுவைன் பிராவோ, ஜான் ஹேஸ்டிங்ஸ், பிரென்டன் மெக்கல்லம், சாமுவேல் பத்ரீ, டூ பிளெஸ்ஸி.

கொல்கத்தா: கவுதம் கம்பீர் (கேப்டன்), யூசுப் பதான், ராபின் உத்தப்பா, பியூஷ் சாவ்லா, வினய் குமார், உமேஷ் யாதவ், மணீஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், சுநீல் நரேன், ஜாக் காலிஸ், ரியான் டென் தஸ்சாத்தே, மோர்ன் மோர்கல், பட் கம்மின்ஸ், ஆண்ட்ரே ரஸல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x