Published : 30 Oct 2014 12:48 PM
Last Updated : 30 Oct 2014 12:48 PM

நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை தேவை: வைகோ வலியுறுத்தல்

இலங்கையில், நிலச்சரிவில் சிக்கியுள்ள மலையகத் தமிழர்களை மீட்கவும், உடைமைகளை இழந்து தவிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், நிவாரண உதவிகள் வழங்கவும் இலங்கைக்கு இந்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கையின் பதுளை மாவட்டத்தில் உள்ள மீரிய பெத்தை எனும் இடத்தில் மழையின் காரணமாக அக்டோபர் 29-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 200 தமிழர்கள் புதையுண்டு உயிர் இழந்தனர்; மேலும், 500 தமிழர்களைக் காணவில்லை என்ற அதிர்ச்சிகரமான தகவல்கள் வருகின்றன.

மலையகத் தமிழர்கள் வாழும் தேயிலைத் தோட்டக் குடியிருப்புத் தமிழர்கள் மண் சரிவு அபாயம் உள்ளவை என்று பல ஆண்டுகளுக்கு முன்பே சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம் எச்சரித்து இருந்தது. ஆயினும், தேயிலைத் தோட்டங்களில் வாழும் மலையகத் தமிழர்களைப் பாதுகாப்பான இடங்களில் குடியேற்ற இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் தங்கள் ரத்தத்தைச் சிந்தி தேயிலை, காபி தோட்டங்களை உருவாக்கியவர்கள். கடும் உழைப்பைக் கொடுத்து இன்றும் இலங்கையின் வளமான பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவர்கள்.

அவர்கள் பல தலைமுறைகளாக மலையகத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களாக வாழ்ந்து வந்த போதிலும், 1948 ஆம் ஆண்டு இலங்கை அரசு கொண்டு வந்த குடியுரிமைச் சட்டத்தாலும், 1964 ஆம் ஆண்டில் ஏற்பட்ட இந்தியப் பிரதமர் சாஸ்திரி- லங்கை பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகா ஒப்பந்தத்தாலும் பத்து இலட்சம் பேர்களது குடிஉரிமை பறிக்கப்பட்டு, நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர். உலகிலேயே வேறு எங்கும் இந்தக் கொடுமை நடக்கவில்லை.

இலங்கை அரசின் வஞ்சகத்தாலும், பாரபட்சமான அணுமுறையினாலும் வாழ்வுரிமைகளை இழந்த மலையகத் தமிழர்களை இயற்ககையும் வஞ்சிக்கின்றது.

நிலச்சரிவில் சிக்கியுள்ள மலையகத் தமிழர்களை மீட்கவும், உடைமைகளை இழந்து தவிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், நிவாரண உதவிகள் வழங்கவும் இந்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்" என கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x