Published : 21 Sep 2014 12:57 PM
Last Updated : 21 Sep 2014 12:57 PM

ரூ.8.25 லட்சம் கொள்ளை: புகார் அளித்த புதுமாப்பிள்ளை சிக்கினார்

திருப்பூரில், காரில் சென்றபோது, மிளகாய் பொடி தூவி ரூ.8.25 லட்சம் பணத்தை வெள்ளிக்கிழமை இரவு கொள்ளையடித்துச் சென்றதாக கூறிய சம்பவத்தில், புகார் கொடுத்த புதுமாப்பிள்ளையே போலீஸாரிடம் சிக்கினார்.

திருப்பூர், கல்லூரிச் சாலை சாதிக்பாஷா நகரைச் சேர்ந்தவர் அப்துல் ஹக்கீம் (26). இவர், காதர்பேட்டை பகுதியில் செகண்ட்ஸ் பனியன் வியாபாரம் செய்து வருகிறார். இந் நிலையில், ராம்நகர் 3வது வீதியில் உள்ள துணிக் கடைக்கு செகண்ட்ஸ் பனியன் வாங்குவதற்காக ரூ.8.25 லட்சம் பணத்தை ஒரு பாலித்தீன் கவரில் எடுத்து கொண்டு வெள்ளிக்கிழமை இரவு அவரது மாருதி காரில் சென்றுள்ளார். ராம் நகரில் காரை நிறுத்தி விட்டு இறங்க முயன்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம ஆசாமி, கண் இமைக்கும் நேரத்தில் அவரது கண்களில் மிளகாய்ப் பொடியை தூவிவிட்டு பணத்தை கொள்ளையடித்து சென்றதாகவும், அப்துல் ஹக்கீமின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வருவதற்குள் மர்ம ஆசாமிகள் பணத்துடன் தப்பிவிட்டதாகவும் அப்துல் ஹக்கீம் கூறியதைத் தொடர்ந்து, திருப்பூர் வடக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் எஸ்.என்.சேஷசாய் உத்தரவின் பேரில், காவல் துணை ஆணையர் (சட்டம் ஒழுங்கு) திருநாவுக்கரசு மேற்பார்வையில், காவல் உதவி ஆணையர் வடக்குச் சரகம் ஜெயச்சந்திரன், வடக்கு காவல் ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் வடக்கு காவல் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சேகர் சிங் ஆகியோரின் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

நகரின் பல்வேறு இடங்களில் வாகன சோதனைகள் உடனடியாக வெள்ளிக்கிழமை இரவே நடத்தப்பட்டன. புகார்தாரர் அப்துல் ஹக்கீம், முன்னுக்குபின் முரணாகப் பேசியதால் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, தாமாக முன்வந்து குற்றத்தை ஒப்புகொண்டார்.

அப்துல் ஹக்கீமின் அண்ணன் அப்துல்மஜித் என்பவருக்கு உதவியாக, செகண்ட் சேல்ஸ் பனியன் வியாபாரம் செய்து வருவதாகவும், டெல்லி, மும்பை, கொல்கத்தா, லூதியானா ஆகிய இடங்களிலிருந்து இரண்டாம் தர பனியன்களை கொள்முதல் செய்து வியாபாரம் செய்துவருவதாகவும், இதற்கு முன்பு பல முறை பல லட்சங்களை கொண்டு சென்று, இரண்டாம் தர பனியன்களை கொள்முதல் செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அப்துல் ஹக்கீமுக்கு டிசம்பர் மாதம் 28ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதனால், தனியாக பனியன் தொழில் செய்ய நினைத்தவர், அவரது அண்ணன், கொள்முதல் செய்வதற்காக கொடுத்த பணத்தை ஏமாற்றி தனது தொழிலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணியுள்ளார். தனது வீட்டிலேயே பணத்தை வைத்து விட்டு, கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றதாக கடத்தல் நாடகமாடியது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

24 மணி நேரத்துக்குள் இச்சம்பவத்தைக் கண்டறிந்த தனிப்படையினரை மாநகரக் காவல் ஆணையர் எஸ்.என். சேஷசாய் பாராட்டினார். அப்துல்ஹக்கீம் மீது நீதிமன்ற வழிகாட்டுதல்படி சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகரக் காவல் துணை ஆணையர் திருநாவுக்கரசு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x