Published : 30 Sep 2014 10:54 AM
Last Updated : 30 Sep 2014 10:54 AM
ரிசர்வ் வங்கி கடன் மற்றும் நிதிக்கொள்கையை செவ்வாய்க்கிழமை அறிவிக்க இருக்கிறது, மேலும் முதலீட்டாளர்கள் லாபத்தை தொடர்ந்து வெளியே எடுத்ததால் முக்கிய பங்குச்சந்தை குறியீடுகள் சரிந்து முடிந்தன. சென்செக்ஸ் 29 புள்ளிகள் சரிந்து 26597 புள்ளியிலும், நிப்டி 9 புள்ளிகள் சரிந்து 7958 புள்ளியிலும் முடிந்தன.
முக்கிய குறியீடுகள் சரிந்து முடிந்தாலும் மிட்கேப் குறியீடு 0.86 சதவீதம் உயர்ந்தும், ஸ்மால்கேப் குறியீடு 1.49 சதவீதம் உயர்ந்தும் முடிவடைந்தன.
துறைவாரியாக ஹெல்த்கேர் குறியீடு 2.21% ஐடி குறியீடு 1.84% மற்றும் கன்ஸ்யூமர் டியுரபிள் குறியீடு 1.79 சதவீதம் உயர்ந்தும் முடிவடைந்தன. மாறாக மெட்டல் குறியீடு 1.1%, எப்.எம்.சி.ஜி குறியீடு 0.92% மற்றும் வங்கி குறியீடு 0.91 சதவீதம் சரிந்து முடிவடைந்தன.
சென்செக்ஸ் பங்குகளில் சன் பார்மா, டிசிஎஸ், கெயில், இன்போசிஸ் மற்றும் ஹிண்டால்கோ ஆகிய பங்குகள் உயர்ந்துன.
ஸ்ரிடைஸ் ஆர்கோலேப் பங்கு 9% உயர்வு
சென்னையை சேர்ந்த ஷாசன் பார்மா நிறுவனத்தை ஸ்ரிடைஸ் ஆர்கோலேப் நிறுவனம் தன்னுடன் இணைத்துக்கொண்டது. இதற்கான இந்த இரண்டு நிறுவனங்களின் இயக்குநர் குழு ஒப்புதல் கொடுத்து இணைந்து அறிக்கை வெளியிட்டார்கள். இந்த இணைப்பின் மூலம் உள்நாட்டில் மருந்து தயாரிக்கும் முதல் 15 பட்டியலிட்டப்பட்ட நிறுவனங்களில் ஸ்ரிடைஸ் இருக்கும். இந்த இரண்டு நிறுவனங்களின் மொத்த டர்ன் ஓவர் ரூ.2,500 கோடி அளவில் இருக்கும்.
இந்த இணைப்பின் மூலம் 16 ஷாசன் பங்குகள் வைத்திருப்போருக்கு ஐந்து ஸ்ரிடைஸ் ஆர்கோலேப் நிறுவனத்தின் பங்கு கிடைக்கும். இந்த இணைப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி நடக்க இருக்கிறது. ஆனால் அதற்கு முன்பு ஒழுங்குமுறை ஆணையங்களின் அனுமதியை பெற வேண்டும்.
இதனால் ஸ்ரிடைஸ் ஆர்கோலேப் பங்கு வர்த்தகத்தின் முடிவில் 9.03 சதவீதம் உயர்ந்து 699.65 ரூபாயில் முடிவடைந்தது. ஆனால் ஷாசன் பார்மா பங்கு சரிந்தது. வர்த்தகத்தின் முடிவில் இந்த பங்கு 0.33 சதவீதம் சரிந்து 196.15 ரூபாயில் முடிவடைந்தது.