Published : 03 Sep 2014 10:05 AM
Last Updated : 03 Sep 2014 10:05 AM

தமிழக மீனவர்களுக்கு எதிரான கருத்து: சுப்பிரமணியன் சுவாமிக்கு கட்சிகள் கண்டனம்

தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி கூறிய கருத்துக்கு தமிழக கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், ‘‘இலங்கை சென்றிருந்தபோது, தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக பேசினேன். எல்லை தாண்டிய காரணத்துக்காக கைது செய்யப்படும் மீனவர்களை விடுவித்துவிடுங்கள். விசைப் படகுகளின் உரிமையாளர்கள் பணக்காரர்கள் என்பதால் படகுகளை சிறைப்பிடிக்கலாம் என்று ஆலோசனை கூறினேன்’’ என்று தெரிவித்தார். சுப்பிரமணி யன் சுவாமி இவ்வாறு கூறியதற்கு கண்டனம் தெரிவித்து அரசியல் கட்சிகள் அறிக்கை வெளியிட்டுள்ளன.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி:

‘தமிழக மீனவர்கள் இலங்கை யின் மீன் வளத்தைச் சுரண்டு கிறார்கள். எனவே, அவர்களது படகுகளை திருப்பிக் கொடுக்கக் கூடாது’ என்று தான்தான் இலங்கை அதிபர் ராஜபக்ச அரசுக்குக் கூறியதாக கூறியுள்ளார். சுப்பிர மணியன் சுவாமியின் இந்த அடாவடியான பேச்சுக்கு மத்திய அரசின் பதில் என்ன? இவரைப் போன்ற தமிழினத் துரோகிகளை தமிழ்நாட்டுக்குள் அனுமதிக்கலாமா? இத்தகை யவர்களை ஒருபோதும் தமிழக மக்கள் மன்னிக்கமாட்டார்கள்.

இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர்:

‘எல்லை தாண்டி மீன்பிடிக்கும் மீனவர்களை விட்டுவிட்டு, அவர் களது படகுகளைச் சிறைப்பிடித்து வைத்துக் கொள்ளுங்கள்’ என்று இலங்கை அதிபர் ராஜபக்சவிடம் தான் ஆலோசனை கூறியதாக சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதை அவரது தனிப்பட்ட கருத்து என்று அலட்சியம் செய்ய முடியாது. ஏனெனில், சமீபநாட்களாக இலங்கை கடற்படை சிறைபிடிக் கப்படும் மீனவர்களை விடுவித்து விட்டு படகுகளை விடுவிக்காமல் இருக்கிறது. இதை பார்த் தால், இந்திய அரசின் வலிமை யான குரலாகவே இவர் செயல்பட்டிருக்கிறார் என்று தெரிகிறது.

தமிழக மக்களின் நெஞ்சத்தில் சுப்பிரமணியன் சுவாமியின் கூற்று மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இதுபோன்ற நபர்களை பாஜக உடனே கட்டுப்படுத்த வேண்டும். வெளியுறவுக் கொள்கையில் மத்திய அரசின் நிலைப்பாட்டை உணர்ந்தும், மதித்தும் செயல்படுபவர்களை மட்டுமே கட்சி சார்பிலும், அரசு சார்பிலும் வெளிநாடுகளுக்கு அனுப்பவேண்டும்.

எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி:

சுப்பிரமணியன் சுவாமியின் இந்தப் பேச்சும் நடவடிக்கையும் தமிழினத்துக்கு எதிரானது. அது பாஜகவின் கருத்து அல்ல என்று தமிழக பாஜக தலைவர் தெரிவித்தாலும், சுப்பிரமணியன் சுவாமி, பாஜகவின் தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் என்பதை நாம் மறந்து விடுவதற்கில்லை. மேலும், இந்த கருத்துக்கு பாஜக மேலிடம் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்று பேட்டியில் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து தமிழக மக்களுக்கு மத்திய அரசு விளக்கம் அளிக்கவேண்டும். இதுபோன்று தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை சுப்பிரமணியன் சுவாமி நிறுத்தாவிட்டால் அவருக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும் மக்கள் போராட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x