Last Updated : 26 Sep, 2014 01:00 PM

 

Published : 26 Sep 2014 01:00 PM
Last Updated : 26 Sep 2014 01:00 PM

இளைஞர்களின் ஃபேஷன் காது!

காதில் கடுக்கன் போட்டிருப் பவர்களைக் கண்டால் பட்டிக்காட்டான், நாட்டுப்புறத்தான் என்று கேலி பேசியது அந்தக் காலம். இந்தக் காலத்தில் அதுதான் யூத் ஃபேஷன். ‘என்னய்யா கிராமத்தான் மாதிரி கடுக்கன் போட்டிருக்கே’ என்று கேட்டால், ‘யூத்து மா...யூத்து..’ என்று கெத்துக் காட்டுகிறார்கள் இந்தக் காலத்து இளைஞர்கள்.

பெரிய சிட்டி, சின்ன சிட்டி என்ற பாகுபாடெல்லாம் கடுக்கன் அணிவதில் கிடையாது. படித்தவர், படிக்காதவர் என்ற வேறுபாடும் கிடையாது. பலதரப்பட்ட இளைஞர்களும் ஃபேஷனாகக் காதில் கடுக்கன் அணிகிறார்கள்.

அந்தக் காலத்தில் நம் அப்பன், பாட்டன், பூட்டனெல்லாம் காதில் கடுக்கன் அணிந்து வந்தவர்கள்தான். ஆனால், அதை ஒரு காதில் மட்டும் அணிந்து வீதிக்கு வீதி டெர்ர்ரர் ஸ்டைலாக மாற்றியது சில ஆண்டுகளுக்கு முன்புதான்.

அங்கொன்றும் இங்கொன்றுமாக அப்போது ஒரு காதில் கடுக்கன் அணிந்துகொண்டிருந்தார்கள். அது யூத் ஐகானாக மாறிவிட்ட பிறகு இப்போது பார்க்குமிடமெல்லாம் இளைஞர்களின் காதில் கடுக்கன்களையும் பார்க்க முடிகிறது.

இப்போது ஒற்றை கடுக்கன் அணியும் ஸ்டைல் கொஞ்சம் அலுத்துவிட்டதோ என்னவோ, இரண்டு காதுகளிலும் கடுக்கன்களை மாட்டிக்கொண்டு ஓல்டு ஃபேஷனுக்கு மாறி வரும் இளைஞர்களையும் பார்க்க முடிகிறது.

இன்னும் சில இளைஞர்கள் பெண்களைப் போலவே காது முழுக்க சிறு துளைகளைப் போட்டுக் கொண்டு வளையங்களை மாட்டிக் கொள்வதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள். காது மடல் முழுவதும் கோத்துவிட்டது போல சிறு வளையங்களோடு வளைய வந்து அலப்பறை செய்கிறார்கள்.

காதில் கடுக்கன், வளையம் அணியும் இந்த ஸ்டைல் வேகமாகப் பரவ என்ன காரணம்? “இன்று சினிமாவில் வில்லனில் தொடங்கி ஹீரோக்கள், விளையாட்டு வீரர்கள் வரை பலரும் கடுக்கன் அணிய ஆரம்பித்துவிட்டார்கள். இது இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி யிருக்கிறது. தங்களுக்குப்

பிடித்த அபிமான நபர்கள் என்ன செய்தாலும் அதை திருப்பிச் செய்து தங்களை வெளிக்காட்டிக் கொள்கிறார்கள் இந்தக் காலத்து இளைஞர்கள்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த சதீஷ்குமார்.

ஆனால், வெளிநாட்டு இளைஞர்களோடு ஒப்பிடு கையில் நம்ம ஊர் இளைஞர்கள் எவ்வளவோ மேல் என்றே நினைக்கத் தோன்றுகிறது. வெளிநாடுகளில் இளைஞர்கள் இரும்பு ராடு, பட்டன், ஆணி, ஊக்கு போன்ற மாடல் கடுக்கன்களைக் காதுகளில் அணிகிறார்கள். காது வலிக்குமா, வலிக்காதா என்றுகூடத் தெரியவில்லை. தொங்கவிட்டு கொண்டு வீதிகளில் ஹாயாக உலா வருகிறார்கள்.

ஒரு விஷயத்தை மட்டும் காதில் போட்டுக் கொள்ளுங்கள் பாஸு, எதை மாட்டிக் கொண்டாலும் சரி, காதுகளைக் கொஞ்சம் பத்திரமாகவும் பார்த்துக் கொள்ளுங்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x