Published : 13 Jan 2014 09:20 AM
Last Updated : 13 Jan 2014 09:20 AM

40 தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைப்பு பிரச்சாரத்தை தொடங்கியது பா.ஜ.க.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் பா.ஜ.க. சார்பில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருப்பதால் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகி வருகின்றன. கூட்டணி, வேட்பாளர் தேர்வு போன்ற பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழக பா.ஜ.க.வும் தேர்தல் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் வாக்குச் சாவடி முகவர்களை (பூத் ஏஜென்ட்) அக்கட்சி நியமித்துள்ளது. கூட்டணி பற்றிய இறுதி அறிவிப்பு வருவதற்கு முன்னதாகவே 40 தொகுதிகளிலும் பா.ஜ.க. பூத் ஏஜென்டுகளை நியமித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஒவ்வொரு வாக்குச்சாவடி யிலும் 15 உறுப்பினர்களைக் கொண்ட பூத் கமிட்டி அமைக்கப் பட்டுள்ளது. இதில் பெண் களுக்கு முக்கியத்துவம் அளிக்கப் பட்டுள்ளது. 15 பேர் கொண்ட ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் 5 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். பூத் கமிட்டி உறுப்பினர்கள், வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்காளர் விவரங்களை சேகரித்து அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர்.

இதுகுறித்து பா.ஜ.க. மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் வானதி னிவாசன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

ஓராண்டுக்கு முன்னதாகவே நாங்கள் பூத் கமிட்டி ஆட்களை தேர்வு செய்துவிட்டோம். தேர்தல் ஆணையத்துக்கும் இந்த விவரங்களை அளிக்க வுள்ளோம். இப்போது பூத் ஏஜென்டுகள் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் சென்று அங்குள்ள வாக்காளர்களிடம் இப்போதிருந்தே பா.ஜ.க.வுக்காக வாக்கு சேகரிக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் கள்ள ஓட்டு போடுவதைத் தடுப்பதற்காக வாக்காளர்களின் விவரங்களையும் சேகரித்து வருகிறோம். பூத் கமிட்டியில் இதுவரை பெண்கள் இடம்பெற்றது கிடையாது. முதல்முறையாக பா.ஜ.க. பூத் கமிட்டியில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தென் சென்னை தேர்தல் பணிக்குழு வேலைகளை கவனித்து வரும் ராஜேஷ் கண்ணா கூறுகையில், “தென் சென்னை தொகுதியில் மட்டும் 1200-க்கும் மேற்பட்டோரை பூத் ஏஜென்டுகளாக நியமித்துள்ளோம். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எத்தனை வாக்காளர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் இறந்தவர்கள் எத்தனை பேர், வெளிநாடுகளில் வசிப்பவர்கள் யார் என்பது போன்ற விவரங்களை தீவிரமாக திரட்டி வருகிறோம். இதன் மூலம் கள்ள ஓட்டு போடுவதை முழுமையாக தடுக்க முடியும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x