Last Updated : 25 Aug, 2014 11:35 AM

 

Published : 25 Aug 2014 11:35 AM
Last Updated : 25 Aug 2014 11:35 AM

கோவையை மையப்படுத்திய முதல்வர் அறிவிப்பின் பின்னணி என்ன?

கோவை மாநகர், மாவட்டச் செயலாளர் பதவிக்கு அண்மையில் ராஜ்குமார் தேர்வு செய்யப்பட்ட போதே, நகரை மையப்படுத்தி அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. கோவை மேயர் தேர்தலை நடத்தி முடிப்பதற்கு ஏதுவாகவும், தொழில்துறையினரின் கோரிக்கை நிறைவேற்றும் விதமாகவும் அறிவிப்பு வரலாம் என நகரின் பின்னணி குறித்து தெரிந்தவர்கள் யூகித்தே சொல்லி வந்தனர்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சில மாநிலங்களைத் தவிர்த்து நாடு முழுவதும் வீசிய மோடி அலையின் தாக்கம் தமிழகத்தில் இல்லை. மோடியா, லேடியா என்ற பரபரப்பு விவாதங்கள் எழுந்து இறுதியில் தமிழகத்தைப் பொறுத்தவரை லேடிதான் என்பதை வெளிப்படுத்தும்விதமாக முடிவுகள் வந்தன.

இதர மாநில கட்சிகளை சுக்கு நூறாக அதிமுக உடைத்திருந்தாலும், வழக்கத்துக்கு மாறாக பாஜக தலைமையிலான அணி இரு இடங்களை கைப்பற்றியது. அதிலும், அதிமுகவின் கோட்டையாக இருந்து வரும் கொங்கு மண்டலத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் அதிமுகவுக்கு அடுத்தபடியாக பாஜக கூட்டணி வேட்பாளர்கள் இடத்தை பிடித்தனர்.

தமிழகத்தில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றது. உட்கட்சிப் பூசல் இல்லாமலும், முன்கூட்டியே தேர்தல் கூட்டணி உடன்பாடு எட்டப்பட்டு தேர்தல் பிரச்சாரம் நடந்து இருந்தால் கோவை, பொள்ளாச்சி தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றிருக்கும் என்றே சொல்லப்பட்டது.

மின்வெட்டினால் அரசுக்கு எதிரான எதிர்ப்பு ஏனைய பகுதிகளில் இருந்ததை விட தமிழகத்தின் மான்செஸ்டரான கோவையில் அதிகமாக எதிரொலிப்பு இருந்ததை உணர முடிந்தது.

தொழில்வாய்ப்புகள் குறைந்து தொழில்முனைவோர் கடுமையான நெருக்கடியில் தற்போது சிக்கித் தவித்து வருகின்றனர். ஆளும் அரசுக்கு எதிராக ஏதாவது கருத்து தெரிவித்தால் நமக்கு ஏதாவது சிக்கல் ஏற்படலாம் என நினைத்து இங்குள்ள தொழில் அமைப்புகள் கருத்து தெரிவிப்பதில் கூட எச்சரிக்கையாகவே இருந்தனர்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக கோவை தொழில்துறையினரை சாம்ராஜ் நகருக்கு வந்து தொழில் செய்யுமாறு கர்நாடக முதல்வர் சித்தராமய்யா அழைக்கும் அளவுக்கு இங்குள்ள நிலைமை மோசமானதை அரசு உணரவில்லை.

இறுதியாக, அரசின் எச்சரிக்கை பார்வை பட்டபோது அலறி அடித்துக் கொண்டு கர்நாடக மாநிலமா அது எங்கு இருக்கிறது என கேட்காத குறைக்கு கோவை

தொழில்முனைவோர் பேட்டிகளை அள்ளி வீசினர்.

இருந்தபோதும், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு ஆதரவாக பல அமைப்புகள் இருந்ததை அதிமுகவினர் கூட உணராமல் இல்லை. கோவை தொகுதி மீது கடைசி நேரத்தில் காட்டிய கூடுதல் கவனம் காரணமாக அதிமுக இங்கு வெற்றி பெற்றது.

தொழிலை காப்பாற்றவும், அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லவில்லை எனில் வரும் தேர்தலில் அதற்கு எதிரான பிரதிபலிப்பு இருக்கும் என உளவுத்துறையினர் ஆளும் அரசுக்கு எச்சரிக்கை அறிக்கை அளித்தனர். இதன்காரணமாக, கோவை தொழில் அமைப்புகளிடம் என்ன தேவை என்பதை மீண்டும் ஒருமுறை உளவுத்துறையினர் அண்மையில் வாங்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

கோவை மாநகராட்சியின் முன்னாள் மேயரால் ஏற்பட்ட சில இடர்பாடுகளை களையவும், இங்கு முழு கட்டுப்பாட்டை கொண்டு வரவும், மக்களின் எண்ண ஓட்டத்தை அறியவும் மேயர் தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என இதனால்தான் எதிர்பார்க்கப்பட்டது.

மாநகர உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள முதல்வரின் தற்போதைய அறிவிப்பு, மேயர் தேர்தலுக்கான ஒத்திகை என்று மட்டும் இல்லாமல் வரும் 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கும் ஒரு வெள்ளோட்டமான அறிவிப்பு என்றே திடமாகச் சொல்லப்படுகிறது.

திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாநகராட்சிகளிலும் மேயர் பதவி காலியாக இருக்கிறது. இருந்தபோதும், கோவையை மையப்படுத்திய முழுவதுமான அறிவிப்பு பலவீனத்தை பலத்தால் அடிப்பதற்காகவே என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x