Published : 27 Jun 2014 09:25 am

Updated : 27 Jun 2014 09:25 am

 

Published : 27 Jun 2014 09:25 AM
Last Updated : 27 Jun 2014 09:25 AM

பெண்கள் மீது போர் எதற்கு?

உலகெங்கிலும் போர்களின் கொடூரக் கரங்களுக்குப் பெண்களும் சிறுவர்களும் இலக்காவது அதிகரித்துக் கொண்டிருப்பது நவீன நாகரிகத்தின் அவலம். இதற்கு எதிராகச் சமீபத்தில் லண்டனில் சர்வதேச மாநாடு ஒன்று நடத்தப்பட்டிருப்பது சற்று நம்பிக்கையைக் கூட்டுகிறது.

போர்கள் இல்லாத உலகம் என்பது வெறுங்கனவாகவே இருந்துவருகிறது. போர்கள் என்பவை தவிர்க்க முடியாதவையாக ஆகிவிட்ட பட்சத்தில், போர்க்களத்திலே எப்படித் தாக்குதல் நடத்த வேண்டும், போரிலிருந்து யாருக்கு விலக்குகள் தர வேண்டும், போர்க் கைதிகளை எப்படி நடத்த வேண்டும், போருக்குப் பிறகு ஆக்கிரமிக்கும் பகுதிகளில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றெல்லாம் 1925 ஜெனீவா மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சர்வதேச நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

மனித உரிமைகள் மீறப்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், அளிக்கப்பட வேண்டிய தண்டனைகள் குறித்து 1990-ல் இயற்றப்பட்ட சர்வதேசச் சட்டம் விவரிக்கிறது. இவ்வளவு இருந்தும் மனித உரிமைகள் மீறப்படுவதும், போரின்போது கைகளில் சிக்கும் பெண்களும் சிறுவர் சிறுமியரும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுக் கொல்லப்படுவதும் தொடர்கின்றன.

இத்தகைய குற்றங்கள் செய்வோரைத் தண்டிப்பதில் சர்வதேச நீதிமன்றத்துக்கும் பல தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. இந்த விவகாரத்தில், சர்வதேச நீதிமன்றத்தின் விசாரணை வரம்புக்குத் தன்னை உள்படுத்திக்கொள்ள அமெரிக்கா மறுத்துவருகிறது. மிகப் பெரிய வல்லரசே மதிக்காததால் சர்வதேச நீதிமன்றத்துக்கு மதிப்பும் மரியாதையும் அங்கீகாரமும் இல்லாமல் இருக்கிறது. இந்தச் சூழலில்தான் போர்க்குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவும் கடுமையான தண்டனைகளை அவர்களுக்கு விதிக்கவும் பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக், ஐக்கிய நாடுகளின் தூதர் ஏஞ்சலினா ஜூலி ஆகியோர் மேற்கொண்டுள்ள முயற்சிகள் ஆறுதலைத் தருகின்றன.

அவர்கள் முன்முயற்சியில் லண்டனில் ஒரு வாரம் நடந்த சர்வதேச மாநாட்டுக்குப் பிறகு, அதில் பங்கேற்ற 150 நாடுகள், போர்க்களத்தில் பாலியல் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற சர்வதேச உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன. சில வழிகாட்டு நெறிகளும் அந்த மாநாட்டில் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் கூறப்பட்டுள்ள சில அம்சங்கள் சட்டப்படி எந்த நாட்டையும் கட்டுப்படுத்துபவை அல்ல என்றாலும் எதிர்காலத்தில், தவறிழைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்த நாடுகளின் அரசுகளுக்கு நெருக்குதல் தர பெரிதும் உதவக்கூடும்.

இந்த மாநாட்டால் உடனடியாகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுவிடாது என்றாலும், தவறிழைத்த நாடுகளின் அரசுகள், தவறு இழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த மாநாட்டு முடிவுகள் போதிய அழுத்தம் தரும் என்பது உண்மை.

பெண்களைப் பாலியல் ரீதியாகப் போர்க்களத்தில் துன்புறுத்துவது என்பது நம்முடைய காலத்தின் மிகப் பெரிய மனிதாபிமானப் பிரச்சினை என்று ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், ஐ.நா. பொதுச் செயலாளரின் சிறப்புப் பிரதிநிதியே வலியுறுத்தியிருக்கிறார். போர்க் களத்தில் நிர்க்கதியாக விடப்பட்ட நிலையில் பாதிப்புக்குள்ளாகும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனில் விருப்பம் இருந்தால் தலையிடலாம், இல்லாவிட்டால் சும்மா இருக்கலாம் என்று எந்த ஜனநாயக நாடும் கருதிவிட முடியாது. அப்படிக் கருதினால், அது ஜனநாயக நாடாக இருப்பதற்கே அருகதையற்றது என்பதில் சந்தேகமே கிடையாது.

போர்தலையங்கம்வன்முறைபெண்கள் பாதிப்புநாகரிகம்கலாச்சாரம்குற்றம்தண்டனை

You May Like

More From This Category

More From this Author