Published : 15 Jun 2014 01:00 am

Updated : 15 Jun 2014 17:38 pm

 

Published : 15 Jun 2014 01:00 AM
Last Updated : 15 Jun 2014 05:38 PM

வாண்டுதேசத்தின் மாமன்னர்

தமிழர்கள் பலரது இளம்பிராயக் கற்பனைகளை, சாகசக் கனவுகளை வார்த்தைகளால் வடிவமைத்தவர் வாண்டுமாமா (21 ஏப்ரல் 1925 - 12 ஜூன் 2014). சித்திரக் கதைகள், சிறுவர் நாவல்கள், சாகசக் கதைகள் என்று பலதளங்களில் இயங்கியவர் அவர். படிப்பவர்களைச் சுண்டியிழுக்கும் வசீகரம் கொண்டது அவருடைய எழுத்து நடை. சூரியனுக்குக் கீழே உள்ள எதைப் பற்றியும் சுவாரஸ்யமாக எழுதக் கூடிய வித்தைக்காரர் அவர். அறிவியல் என்றாலே காத தூரம் ஓடிய மாணவர்கள்கூட ரசித்துப் படிக்கும் வகையில் அறிவியல் தொடர்பான கட்டுரைகளையும் குறிப்புகளையும் சுவையுடன் வழங்கியது அவரது தனிச் சிறப்பு. அவர் உருவாக்கிய சாம்ராஜ்யத்தின் குடிமக்கள் அனைவரும் குழந்தைகளாகத்தான் இருந்தனர். குறைந்தபட்சம் குழந்தை மனது கொண்டவர்களாக!

புதுக்கோட்டை அருகில் இருக்கும் அரிமழம் கிராமத்தில் 1925-ம் ஆண்டு பிறந்த வி.கிருஷ்ண மூர்த்திதான், பின்னாளில் வாண்டுமாமா ஆனார். திருச்சி லால்குடி திண்ணியம் கிராமத்தில் வளர்ந்த இவர், பாரதி என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினார். சென்னையில் நடந்த கையெழுத்துப் பத்திரிகைகள் மாநாட்டில் இவரது பத்திரிகை முதல் பரிசு பெற்றது.

கலைமகள் இதழில் வெளியான குல்ருக் என்ற கதையின் மூலம் பள்ளியில் படிக்கும்போதே எழுத்தாளர் ஆகிவிட்டார். குடும்பச் சூழ்நிலை காரண மாகக் கல்லூரிப் படிப்பைத் தொடர முடியாமல் அப்போதே திருச்சியில் இருந்த பல நிறுவனங்களின் விளம்பரப் பலகைகள், பிரசுரகர்த்தர்களின் புத்தக அட்டை, உள்பக்கப் படங்கள் வரையும் கமர்ஷியல் ஆர்ட்டிஸ்ட்டாகச் செயல்பட்டார். சென்னையில் சில காலம் இருந்துவிட்டு, திருச்சிக்கே திரும்பி சிவாஜி இதழில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். அதன் பின்னர், வானவில் என்ற பத்திரிகையின் ஆசிரியராக உயர்ந்தார். இந்த வானவில்தான் வாண்டுமாமா உருவாக்கிய முதல் சிறுவர் இதழ். அதன் பின்னர் மின்னல், சிவாஜி சிறுவர் மலர், கிண்கிணி, அரு. இராமநாதனின் பத்திரிகைகளான கலைமணி, காதல் போன்ற பத்திரிகைகளில் பணிபுரிந்தார்.

அரு. இராமநாதனின் காதல் பத்திரிகை சென்னைக்கு இடம்பெயர்ந்தபோது, இவரும் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். பின்னர் அரு. இராமநாதனுடன் ஏற்பட்ட சிறு மனஸ்தாபத்தால் மறுபடியும் திருச்சிக்கே திரும்பி ஒரு பள்ளியில் நூலகராகப் பணிக்குச் சேர்ந்தார். பின்னர், சென்னைக்குத் திரும்பி விகடன், குமுதம் என்று பல பத்திரிகைகளில் முயன்று, பிறகு கல்கி அதிபர் சதாசிவத்தைச் சந்தித்தார். இவரது திறமையைக் கண்டுவியந்த சதாசிவம், உடனடியாக வேலைக்குச் சேர்த்துக்கொண்டார்.

விற்பனைப் பிரிவு குமாஸ்தாவாகத்தான் கல்கியில் சேர்ந்தார். ஆனால், வெகுவிரைவில் ஆசிரியர் குழுவில் சேர்க்கப்பட்டார். பின்னர், சிறுவர் விருந்து என்ற பல்சுவைப் பகுதியைக் கல்கியில் கொண்டுவந்தார். பல ஆண்டுகள் கல்கியில் பல சித்திரக் கதைகளையும், சிறுவர் கதைகளையும் தொடர்ந்து எழுதிவந்தார். அப்போது, கல்கி நிறுவனம், கோகுலம் என்ற சிறுவர் பத்திரிகையை ஆரம்பித்தது. சிறுவர் இலக்கியப் பத்திரிகைகளில் இது மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வு. அதுவரை ஒரு சிறிய வட்டத்திலேயே நடத்தப்பட்டுவந்த சிறுவர் பத்திரிகை, முதன்முறையாக ஒரு பெரிய நிறுவனத்தால் இந்தியாவெங்கும் சிறப்பாக வெளியிடப்பட்டது.

கோகுலம் இதழில்தான் வாண்டுமாமா தன்னுடைய புகழ்பெற்ற கதாபாத்திரங்களாகிய பலே பாலு, சமத்து சாரு போன்றவற்றை உருவாக் கினார். தொழிலாளர் பிரச்சினை காரணமாக கல்கி இதழ் வெளிவருவது நின்றபோது, குங்குமம் பத்திரிகையில் சேர்ந்தார். மறுபடியும் கல்கி-கோகுலம், பின்னர் தினமணிக்கதிர் என்று தன்னுடைய திறமையை வெளிப்படுத்திய இவர், பணி ஓய்வுபெற்ற பின்னர் கேரளத்தின் பூம்பட்டா நிறுவனம் வெளியிட்ட பூந்தளிர் இதழின் நிர்வாக ஆசிரியராகச் சேர்ந்தார். பூந்தளிர் அமர் சித்திரக் கதை, பைகோ கிளாசிக்ஸ் போன்ற இதழ்களையும் திறம்பட நிர்வகித்தார் வாண்டுமாமா. இவற்றில் வெளிவந்த கதைகளை மொழிமாற்றம் செய்ததும் இவரே. அந்த இதழ்களின் நிறுவனர் தினேஷ் பையின் மறைவுக்குப் பின்னர், பூந்தளிரும் நின்றுபோனது. பிற்காலத்தில் வாண்டுமாமாவே சொந்தமாகப் பூந்தளிரை வெளியிட்டார்.

புற்றுநோய் காரணமாக, கடந்த 15 ஆண்டுகளாகச் சரியாகப் பேச முடியாமல் இருந்தார் வாண்டுமாமா. அவரது எண்ணங்களை சைகைகள் மூலமே புரிந்து

கொண்டு செயல்பட்ட அவருடைய மனைவி சாந்தா, கடந்த ஆண்டு மறைந்த பின்னர், மனதளவில் மிகவும் தளர்ந்திருந்த வாண்டுமாமா வியாழக்கிழமை இரவு காலமானார். தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் சிறுவர் இலக்கியத்துக்காக அர்ப்பணித்த வாண்டுமாமா, பொருளாதாரரீதியான சிரமங்களை எதிர்கொள்ள நேர்ந்தது ஒரு துயரம். வாண்டுமாமாவின் இடத்தை வேறு எவராலும் நிரப்ப முடியாது என்பது சம்பிரதாயமான வாக்கியம் அல்ல. நம்முள் உயிர்ப்புடன் இருக்கும் இளம்பிராயத்தின் விசும்பல் அது.

பின்குறிப்பு: வாண்டுமாமாவின் சித்திரக் கதைகளை ‘தமிழ் காமிக்ஸ் உலகம்’ காப்புரிமை பெற்று விரைவில் வெளியிடவிருக்கிறது.

- கிங் விஸ்வா, காமிக்ஸ் ஆர்வலர், தொடர்புக்கு: prince.viswa@gmail.com

வாண்டுமாமாசித்திரக் கதைகள்தமிழ் காமிக்ஸ் உலகம்ராமநாதனின் காதல் பத்திரிகை

You May Like

More From This Category

More From this Author