Published : 20 Apr 2014 12:46 PM
Last Updated : 20 Apr 2014 12:46 PM

தெரிந்த தொழிலே தெய்வம்!

தோட்டம் போடும் அளவுக்கு வீட்டில் இடம் இருந்து அதில் செடி கொடிகளை வளர்க்கும் ஆசை ஒரு தொழிலதிபருக்கு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ஆசை இருக்கிறது என்பதற்காக சஹாரா பாலைவனத்தில் சகாய விலையில் கிடைத்தது என்று ஏதோ ஒரு முட்செடியை அவர் வாங்கி வந்து தோட்டத்தில் வளர்க்க முடியுமா? இல்லை, ஸ்விட்ஸர்லாந்தில் பார்க்க ஸ்வீட்டாய் இருந்தது என்று ஏதாவது பூச்செடியைத்தான் அவர் கொண்டு வந்து நடமுடியுமா?

என்னதான் பெரிய தொழிலதிபர் என்றாலும் எவ்வளவுதான் பிசினஸை பிரமாதமாய் வளர்த்தவர் என்றாலும் செடிகளும் கொடிகளும் அவர் பேச்சைக் கேட்டு வளர்ந்து விடுமா என்ன? மண்ணின் தன்மைக்கும், சீதோஷ்ண நிலைக்கும், தண்ணீரின் தரத்திற்கும் எது வளருமோ அதுதானே வளரும்? இது தெரியாதவரா அந்தத் தொழிலதிபர்? தன் தோட்டத்தில் எது முடியுமோ, அதற்கேற்ற செடிகொடிகளை செலக்ட் செய்துதானே நடுவார்?

தோட்டம் வேறு, ஆபிஸ் வேறா?

தோட்டத்தில் இருக்கும்போது தெளிவாய்த் தெரியும் இந்த சின்ன விஷயத்தை ஏன் அடுத்த நாள் தங்கள் ஆபீஸில் பல தொழிலதிபர்கள் மறந்துவிடுகிறார்கள்? தனக்கு எந்த தொழில் தெரியுமோ, தனக்கு எந்த பிசினஸில் திறமை இருக்கிறதோ அதை மட்டும் செய்து, அதில் மட்டும் தழைக்காமல் வராத புதிய பிசினஸை எதற்கு வற்புறுத்தி வரவழைத்து தம்மை தாமே துன்புறுத்திக்கொண்டு தங்கள் பிசினஸையும் துன்புறுத்திக்கொள்கிறார்கள்?

இந்தக் கேள்வியை 1989 ஆம் ஆண்டு ‘ஹார்வர்ட் பிசினஸ் ரெவ்யூ’ ஜர்னலில், ‘ப்ளாண்டிங் ஃபார் ஏ குளோபள் ஹார்வெஸ்ட்’ (planting for a global harvest) என்கிற கட்டுரையில் எழுப்பினார் ஜப்பானைச் சேர்ந்த புகழ்பெற்ற நிர்வாக ஆலோசகர் ‘கெனிச்சி ஓமே’. எந்த ஒரு பிசினஸ்ஸுக்கும் ஆதாரமாக ஒரு கலாசாரம் இருக்கவேண்டும். அதுதான் மண் போன்றது. அதில் வளரும் மரம்தான் பிசினஸ். அந்த மரத்திலிருந்து கிடைக்கும் பழங்கள்தான் லாபம். தப்பான மண்ணில் விதைக்கப்படும் தொழில் தழைக்காது என்கிறார் ஓமே.

எல்லாருக்கும் எல்லாமும் தெரிவதில்லை; எல்லார்க்கும் எல்லா திறமைகளும் வாய்ப்பதில்லை. அப்படி இருக்கும்போது நமக்கு எல்லா தொழிலும் அத்துப்படி, எல்லா பிசினஸும் ஜூஜூபி என்று தெரியாத, புரியாத, அறியாத புதிய தொழில்களை துவங்கினால் தோட்டத்தில் நடப்படும் ஸ்விஸ் பூச்செடி போல் காய்ந்து, கருகி காலமாகாமல் வேறு என்ன செய்யும் என்கிறார் கெனிச்சி ஓமே.

தரையிறங்கிய கிங் ஃபிஷர்

ஸ்விஸ் பூச்செடியை வலுக்கட்டாயமாக பெங்களூர் தோட்டத்தில் நடமுயன்று மலுக்கென்று சுளுக்கிக்கொண்ட விஜய் மல்லையாவின் கதை பிசினஸ் உலகில் பிரசித்தி பெற்றது. ’யுனைட்டெட் ப்ரூவரீஸ்’ என்ற கம்பெனியின் ஓனர். கோடிக்கணக்கில் சரக்கை விற்று முறுக்கென்று இருந்தவருக்கு பறக்கும் ஆசை வந்தது. ’கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ்’ என்று தனக்குத் தெரியாத ஒரு தொழிலை கோலாகலமாகத் துவக்கினார். சரக்கடித்தாலே ஜோராய் பறக்கலாமே, எதற்கு விமான சர்வீஸ் ஒன்றைத் துவக்கி அதில் வேறு தனியாய் பறக்கவேண்டும் என்று அவரைத் தடுக்க அவருக்கு ஒரு கெனிச்சி ஓமே இல்லாமல் போய்விட்டார்.

பால பாடம்

தெரியாத தொழில், புரியாத மார்க் கெட், அறியாத விஷயங்கள் அவரை தோல்வியில் மூழ்கி முத்தெடுக்க வைத்தன. இன்று அந்த பிசினிஸ் இழுத்து மூடப்பட்டு கம்பெனியின் விமானங்கள் போலீஸ் ஸ்டேஷனில் மீட்கப்பட்ட திருட்டு சைக்கிள்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதுபோல் பல விமான நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டு தூசி படிந்து, பாசி பிடித்து, காசிக்குப் போனாலும் கர்மம் போகாது என்கிற நிலையில் கிடக்கின்றன. கம்பெனியின் மொத்த கடன் ஆறாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல். நன்றாகப் போய்கொண்டிருந்த தன் யுனைட்டெட் ப்ரூவரீஸ் கம்பெனியையே விற்கவேண்டிய சூழ்நிலை. தன் சொந்த வீட்டிலேயே வாடகை கொடுக்கும் வாழ்ந்து கெட்டவராய் திகழும் விஜய் மல்லையாவின் சோகத்தைச் சொல்லி மாளாது! தெரிந்த தொழிலோடு நிற்காமல் அகல கால் விரிக்க நினைக்கும் வியாபாரிகளுக்கு மல்லையா ஒரு பால்ய பாடம்.

எது வளர்ச்சி?

வளர்ச்சி நல்லதுதான். ஆனால் எது வளர்ச்சி, எதில் வளர்ச்சி, எங்கு வளர்ச்சி என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ளுங்கள். வளர்வதெல்லாம் வளர்ச்சி அல்ல. தொப்பை போட்டு உடம்பு வளர்ந்தால் அதன் பெயர் வளர்ச்சியா? அல்லது காலில் வீக்கம் வந்து கால் பெரியதாக தெரிந்தால் அதுதான் வளர்ச்சியா? புதிய தொழில் புது பெண்டாட்டி போல. ஆரம்பத்தில் ஜோராய்த்தான் தெரியும். அதன் பின்தான் பேஜார் என்பது புரியும்.

உடனே உங்களில் சிலர் டாடாவையும், அம்பானியையும் சுட்டிக்காட்டி அவர்களெல்லாம் அகலக்கால் வைத்து வளரவில்லையா என்று கேட்பீர்கள். அவர்கள் பிசினஸில் நுழைந்த காலம் வேறு. அப்பொழுது இந்த அளவு தொழில்கள் இல்லை; இன்றிருப்பது போல் போட்டி இல்லை; அரசாங்க அனுமதி பெற்றுத்தான் பல தொழில்களை தொடங்க முடியும் என்கிற காலம் அது. அதைப் பெறும் தகுதியும், திறனும், பணமும், சாமர்த்தியமும் அவர்களுக்கு இருந்தது. ஆளில்லா ஊரில் இலுப்பை பூவாய் மலர முடிந்தது அவர்களால்.

இன்று அப்படியா? திரும்பி பார்த்த இடமெல்லாம் புதிய தொழில்கள். எழுந்து பாண்டை சரி செய்து அமர்வதற்குள் நமது சீட்டிலேயே உட்கார ரெடியாயிருக்கும் போட்டியாளர்கள். பத்தாதற்கு பன்னாட்டு கம்பெனிகள். அதுவும் போதாதென்று ஆன்லைனிலேயே நமக்கு ஆட்டம் காட்டும் இன்டெர்னெட் கம்பெனிகள். இத்தனை போட்டிகளுக்கும் இடையே தெரிந்த ஒரு தொழிலை ஒழுங்காய் செய்வதற்குள்ளாகவே மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி நாக்கு தள்ளி வாயில் நுரை தள்ளுகிறது. இதில் எதற்கு தெரியாத தொழில்? புரியாத பிசினஸ்? அறியாத அகல கால்?

கொஞ்சம் ஓவர்

ஆக, அம்பானியையோ, டாடாவையோ, பிர்லாவையோ பார்த்து சூடு போட்டுக்கொள்ளும் பூனையாய் இருக்காதீர்கள். அவர்கள் கதையே வேறு. முகேஷ் அம்பானி வீட்டிற்கு 27 மாடிகளாம். உங்கள் வீட்டில் எத்தனை மாடிகள் சார்? டாடா 60,000 கோடி ரூபாய் கம்பெனி. நீங்கள் எந்த தெருக்கோடியில் சார் பிசினஸ் செய்கிறீர்கள்? கர்லா கட்டை சைசில் தொழில் செய்துகொண்டு பிர்லாவை போல் நடப்பேன் என்றால் அது உங்களுக்கே கொஞ்சம் ஓவராய் தெரியவில்லை?

அப்புறம் எப்படித்தான் வளர்கிறதாம் என்று கேட்கிறீர்களா? தெரிந்த தொழிலை விரித்து செய்யுங்களேன். அந்த தொழிலுக்கு சம்பந்தமான உபதொழில்களில் மட்டுமே இறங்குங்களேன்.

`ஹட்சன் ஆக்ரோ ஃபுட்ஸ்’ என்கிற கம்பெனி. பால் தயாரிக்கிறார்கள். ’எங்களுக்கு பால் பிசினஸ்தான் தெரியும்; அதன் சூட்சமங்கள்தான் புரியும்’ என்று தெளிவாய் புரிந்துகொண்டு பால் சம்பந்தப்பட்ட தொழில்களில் மட்டுமே கால் வைக்கிறார்கள். ’ஆரோக்கியா’ பால் தொடங்கி ’அருண்’ ஐஸ்க்ரீம் முதல், ’கோமாதா’ பால் தொடங்கி ’ஐபாகோ’ ஐஸ்க்ரீம் பார்லர்கள் வரை ஹட்சன் தங்களுக்கு தெரிந்த தொழில் ஒன்றை மட்டுமே செய்கிறார்கள். அதை நன்றே செய்கிறார்கள். செழிக்கிறார்கள். வருடத்திற்கு ஹட்சனின் விற்பனை இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல்.

பால் விற்று பறக்கிறது ஹட்சன். பறக்க நினைத்து தன் பிசினஸிற்கே பால் ஊற்றியது யுனைட்டட் ப்ரூவரீஸ். இதைத்தான் தொழிலதிபர்களுக்கு கெனிச்சி ஓமே ‘ஓம்’ என்கிற பிரணவ மந்திரமாய் உபதேசித்திருக்கிறார். இனிமேலாவது கென்னிச்சி சொன்னதை உம்மாச்சி சொன்னது போல் பாவித்து தெரிந்த தொழிலை மட்டும் செவ்வனே செய்து வாருங்கள். உங்களுக்கும் உங்கள் பிசினஸுக்கும் புண்ணியமாய் போகும்!

satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x