Last Updated : 18 Mar, 2014 09:25 AM

 

Published : 18 Mar 2014 09:25 AM
Last Updated : 18 Mar 2014 09:25 AM

திமுக கோஷ்டி பூசலால் விடுதலை சிறுத்தைகளின் வெற்றி பாதிக்குமா?

திருவள்ளூர் (தனி) தொகுதியை விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒதுக்கியதால் திமுக.வினர் வருத்தத்தில் உள்ளனர். இதனால், கூடுதலாக இன்னொரு தொகுதி கிடைத்தும் சோகத்தில் உள்ளனர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்.

திருவள்ளூரை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தி.மு.க., சார்பில் கிருஷ்ணசாமி 1999 மற்றும் 2004 தேர்தல்களில் போட்டி யிட்டு வென்றார்.

கடந்த தேர்தலில் திருவள்ளூர் தனி தொகுதியாக மாறிய பின்பும் போட்டியிட நினைத்தார் கிருஷ்ணசாமி. ஆனால், அப்போது மாவட்டச் செயலாளராக இருந்த சிவாஜி, கிருஷ்ணசாமியின் விருப்பத்துக்கு குறுக்கே நின்றார். இதனால் கிருஷ்ணசாமியை ஒதுக்கிவிட்டு காயத்ரி ஸ்ரீதரனை நிறுத்தியது தலைமை. ஆனால், அவர் தோற்றுப் போனார்.

இதுகுறித்து, திமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில், கடந்த தேர்தலில் சிவாஜியின் தவறான வழிகாட்டுதலால் கிருஷ்ண சாமியை தவிர்த்து புதுமுகமான காயத்ரி ஸ்ரீதரை நிறுத்தியது திமுக தலைமை. அந்த மன வருத்தத்தில் கிருஷ்ணசாமி திமுக வேட்பாளருக்கு ஒத்துழைக்கவில்லை.

திமுக தோற்றதுக்கு இதுவும் முக்கியக் காரணம். கடந்த சட்டசபை தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதி களிலும் திமுக தோற்கக் காரணமும் கோஷ்டி பூசலே என முடிவெடுத்த தலைமை, சிவாஜியை மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து எடுத்துவிட்டு மாவட்டப் பொறுப்பாளராக சுதர்சனத்தை நியமித்தது. ஆனாலும், கோஷ்டி பூசல் ஒழிந்த பாடில்லை.

இந்நிலையில் இந்த முறையும் போட்டியிட விருப்பம் தெரிவித்து தலைமையிடம் கிருஷ்ணசாமி மனு கொடுத்திருந்தார். ஆனால், இவருக்கு மாவட்டப் பொறுப்பாளர் சுதர்சனம் ஒத்துழைக்கவில்லை. தலைமைக்கும் கிருஷ்ணசாமி மீதுள்ள பழைய கோபம் தீரவில்லை. இதனிடையே, வழக்கறிஞர் பரந்தாமனை நிறுத்த நினைத்தார் ஸ்டாலின். ஆனால், அவரையும் தோற்கடித்துவிடுவார்கள் என்று பயந்து தொகுதியை சிறுத்தைகளிடம் தள்ளிவிட்டார்’’ என்று சொன்னார்

திமுக-வின் இந்த கோஷ்டி யுத்தத்தை மீறி கரை சேரமுடியுமா என்பதுதான் சிறுத்தைகளின் கவலை. ஆளும் கட்சி வேட்பாளரை சமாளிப்பதைவிட திமுக-வை சமாளிப்பது சவாலாய் இருக்கும் போலிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x