Published : 21 May 2014 02:49 PM
Last Updated : 21 May 2014 02:49 PM

வரலாற்றுச் சாதனையுடன் சிக்கிம் முதல்வராக சாம்லிங் பதவியேற்பு

சிக்கிம் ஜனநாயக முன்னணித் தலைவர் பவன் சாம்லிங் தொடர்ந்து 5-வது முறையாக சிக்கிம் மாநில முதல்வர் பதவிப் பொறுப்பை ஏற்று வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்.

அவருக்கு, ஆளுநர் ஸ்ரீநிவாஸ் படீல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

நடந்த முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 32 தொகுதிகளில் 22 தொகுதிகளைக் கைப்பற்றி சிக்கிம் ஜனநாயக முன்னணிக் கட்சி பெரும்பான்மை பெற்றது.

1994 டிசம்பர் 12-ம் தேதி முதல் பவன் சாம்லின் சிக்கிம் முதல்வராக இருக்கிறார். 20 ஆண்டுகள் பதவி வகித்துவிட்ட நிலையில் தனது 5-வது ஆட்சி காலத்தையும் துவக்கியுள்ளார்.

இதற்கு முன்னர் மேற்குவங்கத்தில் 1977-ல் இருந்து 2000-ம் ஆண்டு வரை 23 ஆண்டுகளாக முதல்வராக இருந்து ஜோதிபாசு சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த பவன் சாம்லிங்:

1950-ல் சிக்கிம் மாநிலத்தின் ஒரு குக்கிராமத்தில் பிறந்தவர் பவன் சாம்லிங். விவசாயம் பார்த்து வந்த சாம்லிங், 1982-ல் யாங்காங் கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இது தான் அவரது பொதுவாழ்வின் துவக்கம். அவரது இந்த வெற்றிக்கு காரணமாக இருந்தது உள்ளூர் மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த செல்வாக்கே.

3 ஆண்டுகளுக்குப் பின்னர், சிக்கிம் சங்கரம் பரிஷத் கட்சியின் சார்பில் போட்டியிட்டு பவன் சாம்லிங் எம்.எல்.ஏ. ஆனார். அப்போதைய முதல்வர் நார் பகதூர் பந்தாரியின் அமைச்சரவையிலும் சாம்லிங் இடம் பெற்றிருந்தார்.

நாளுக்கு நாள், சாம்லிங் செல்வாக்கு மக்கள் மத்தியில் உயர்ந்து கொண்டே வந்தது. 1989-ல் தாம்தங் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட சாம்லிங் 96% வாக்குகளை பெற்றார்.

இதனையடுத்து, 1994-ல் பவன் சாம்லிங் சிக்கிம் ஜனநாயக முன்னணி என்ற புதிய கட்சியை உருவாக்கினார். அந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சிக்கு தனிப் பெரும்பான்மை கிடைத்தது. அதன் பின்னர் 2004, 2009, 2014 என தொடர்ந்து வெற்றியை மட்டுமே கண்டுள்ளார் பவன்.

சுற்றுச்சூழல் ஆர்வலரான அவர், சிக்கிம் மாநிலத்தில் வனப்பகுதியை அதிகரிக்க பெரும் முயற்சியை மேற்கொண்டார். இதனாலேயே 'தேசத்தின் பசுமை முதல்வர்' (greenest chief minister of India) என்ற பெருமையை சாம்லிங் பெற்றார்.

இலக்கியவாதி பவன்:

இலக்கிய ஆர்வலர்களுக்கு, சிக்கிம் முதல்வர் பவன் சாமில்ங்கை, பவன் சாம்லிங் கிரண் என்றே தெரியும். அது தான் அவரது புனைப்பெயர். 1967-ல் தனது முதல் கவிதை தொகுப்பை சாம்லிங் வெளியிட்டார். அதன் பின்னர், 3 கவிதை தொகுப்புகளை அவர் வெளியிட்டுருக்கிறார்.

சிக்கிம் சாகித்திய பரிஷத் இரண்டு முறை பவன் சாம்லிங்குக்கு விருது வழங்கியுள்ளது. 1987-ல் சிந்தன் புரஸ்கார், 2010-ல் பானு புரஸ்கார் ஆகிய விருதுகளை அவர் பெற்றுள்ளார். இது தவிர சாம்லிங்கின் இலக்கியத் திறனை பாராட்டி, கொல்கத்தா கவிஞர்கள் கூட்டமைப்பு 2001-ல் சாம்லிங்குக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி கவுரவித்தது.

ஆங்கிலம், இந்தி, நேபாளம் ஆகிய மொழிகளில் சாம்லிங் நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார். நிர்மன் பப்ளிகேஷன் என்ற பதிப்பகத்தையும் அவர் நடத்தி வருகிறார். வளரும் எழுத்தாளர்கள் புத்தகங்கள் பலவற்றை இவரது பதிப்பகம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x